வேலையாட்களின் உதவியால் சமையல் வேலையை முடித்துவிட்டு அவசரமாக காலேஜுக்குச் செல்ல ரெடியாகி வெளியே வந்தாள். அவசரமாக வந்ததால் முன்னால் இருந்தவன் மேல் மோதிவிட்டாள். “யார் மீதோ மோதிவிட்டோம்?” என்று நினைத்து பயந்துகொண்டே விலகி நின்று நிமிர்ந்து முகத்தைப் பார்க்க, அங்கு புதிதாக ஒருவன் நின்றுகொண்டிருந்தான். அவனைப் பார்த்த பிறகுதான் நிம்மதியாக மூச்சு விட்டாள் மலர்.
ஏனென்றால் இந்நேரத்திற்கு அந்த வீட்டில் யாரின் மீது மோதியிருந்தாலும் ஓங்கி ஒரு அறை விட்டிருப்பார்கள். அவள் தன்னைச் சரியாக நிலைப்படுத்திக்கொண்டு முன்னால் இருந்தவனை இப்போதுதான் நன்றாக உற்றுப் பார்த்தாள். அவன் அவளை விழுங்குவது போல் பார்த்து கொண்டு இருந்தான்.
அவனின் துகிலுறிக்கும் பார்வையில் சிறிது பயந்து தான் விட்டாள் மலர். அவனின் பார்வையை முறைத்து கொண்டே, “யார் நீங்க?” என்று கேட்டாள்.
அவன் அவளை மேலிருந்து கீழாக ஒரு பார்வை பார்த்துவிட்டு, “செல்வி அத்தை வீடு இதுதானே?” என்று கேட்டான்.
அப்போதுதான் அவளின் பெரியம்மா நேற்று அவர்களின் அண்ணன் மகன் வருவதாகச் சொன்னது ஞாபகம் வந்தது. “நேற்று பெரியம்மா ரெண்டு பேரும் வருவாங்கன்னு சொன்னாங்க. இவன் ஒருத்தன் மட்டும்தான் வந்திருக்கான்,” என்று நினைத்துக்கொண்டிருக்கும்போதே அவனுக்குப் பின்னால் ஒருவன் சூட்கேஸைத் தள்ளிக்கொண்டு வந்தான்.
அவனை பார்த்து விட்டு இருவரின் பார்வையை கண்டு கொள்ளாமல் “வாங்க வாங்க, நேற்றே மேடம் நீங்க வருவீங்கன்னு சொன்னாங்க. உள்ளே வந்து உட்காருங்க. நான் போய் மேடத்தை கூட்டிட்டு வரேன்,” என்று உள்ளே சென்றாள்.
உள்ளே செல்பவளைப் பார்த்துக்கொண்டே வந்தவன், பக்கத்தில் இருப்பவனிடம், “யாருடா அந்தப் பொண்ணு? செம்ம பிகரா இருக்கா,” என்று கேட்டான்.
“டேய், இது என் அத்தை வீடுடா. உன்னோட வேலையை இங்கே காட்டாத. இது மட்டும் என் அப்பனுக்குத் தெரிஞ்சது, என்னைக் கொன்னே போட்டுடுவாரு. கொஞ்சம் அடக்கி வாசிடா இங்கிருந்து போற வரைக்கும்.” என்றான்.
“சரி சரி, ரொம்பப் பேசாத. நீயும் அந்தப் பொண்ணை ஒரு மாதிரி பார்த்துட்டுதானே இருந்த? ரொம்ப நல்லவன் மாதிரியே பேசாத. சரியா? நீ யாருன்னு எனக்குத் தெரியும். நான் யாருன்னு உனக்கும் தெரியும்,” என்று இவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்கும்போது, வேலையாள் ஒருவர் ஜூஸ் கொண்டு வந்து கொடுத்தார்.
இவர்கள் ஜூஸ் குடித்துக்கொண்டிருக்கும்போதே மலர் வெளியே வந்தாள். அவர்களிடம் வந்து, “மேடம் இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்துருவாங்க. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க,” என்று சொல்லிவிட்டு அவள் காலேஜ் கிளம்பினாள்.
இவள் உள்ளே சென்றதும் மலரின் பெரியம்மா வெளியே வந்தவர், “வா கைலாஷ், எப்படி இருக்க? நல்லா இருக்கியா? அண்ணன் எப்படி இருக்காரு?” என்று கேட்டுக்கொண்டே அவர்களிடம் வந்தார்.
“நான் நல்லா இருக்கேன் அத்தை. அப்பாவும் நல்லா இருக்காரு. நீங்க எப்படி இருக்கீங்க? மாமா, அருள், மதி எல்லாம் எப்படி இருக்காங்க?” என்று கேட்டான் கைலாஷ்.
“எல்லாரும் நல்லா இருக்கோம்,” என்று சொல்லிவிட்டுப் பக்கத்தில் இருந்தவனைப் பார்த்தார். “இவன்தான் உன்னோட ஃப்ரெண்டா கைலாஷ்? நல்லா இருக்கியாப்பா?” என்று கேட்டார்.
“நல்லா இருக்கேன் ஆன்ட்டி.”
“ஆமா அத்தை, இவன் தான் என் ஃப்ரெண்ட். பேரு ஜெய்.”
“சரிப்பா, போய் ஃபிரஷ் ஆகிட்டு வாங்க, சாப்பிடலாம்.”
“முத்தையா, இவங்களை கெஸ்ட் ரூமுக்குக் கூட்டிட்டு போங்க,” என்று வேலையாள் ஒருவரை அழைத்தார்.
“சரி அத்தை, நாங்க மேலே போய் ஃபிரஷ் ஆகிட்டு வரோம்,” என்று இருவரும் மேலே சென்றனர்.
அவர்கள் சென்றதும் சமையல்கட்டிற்குச் சென்று, “டிஃபன் எல்லாம் ரெடி பண்ணியாச்சா?” என்று அங்கு இருக்கும் வேலையாளிடம் கேட்டார்.
“எல்லாம் ரெடியா இருக்குங்கம்மா. எல்லாரும் வந்தா சாப்பிடலாம்.” என்றார் ஒரு வேலையாள்.
“சரி, எங்கே அவ?” என்று மலரை கேட்டார்.
“அம்மா, மலரு காலேஜுக்குக் கிளம்பிடுச்சுமா.”
“அதுக்குள்ளயும் கிளம்பிப் போயிட்டாளா? படிச்சு என்னத்தைக் கிழிக்கப்போறாளாம். இவ்வளவு அவசரமா போய்! அவ கூடத்தானே ஸ்வேதாவும் படிக்கிறா? அவ இவ்வளவு நேரமாக காலேஜுக்குப் போகலையே! மேடம் மட்டும் சீக்கிரம் கிளம்பிப் போயிருக்காங்க. என்ன, இங்க இருந்தா ஏதாவது வேலை செய்யணும்னு ஓடிட்டாளா? வரட்டும், மகாராணிக்கு இன்னைக்கு இருக்கு,” என்று அங்கிருந்து சென்றார்.
அவர் அங்கு இருந்து கிளம்பியதும் அங்கிருந்த ஒரு வேலையாள், “அந்தப் பொண்ணு காலையிலிருந்து வேலை பார்த்துட்டு இப்பத்தான், அதுவும் இன்னைக்குத்தான் கொஞ்சம் நேரமா போச்சு. அதுவும் இந்த அம்மாவுக்குப் பொறுக்கல பாரு,” என்று பொருமினார்.
இன்னொரு வேலையாள், “என்ன பண்றது? அந்தப் பொண்ணு இந்த வீட்ல பொறந்து கஷ்டப்படணும்னு இருக்கு. என்ன பண்ண முடியும்? அது தலையில என்ன எழுதிருக்கோ,” என்று விட்டு அவரவர் வேலை பார்க்கச் சென்றனர்.
அவர்கள் இருவரும் ஃபிரஷ் ஆகி கீழே வரும்போது அனைவரும் கீழே உணவு மேஜையில் அமர்ந்திருந்தனர்.
அவர்கள் இருவரும் டைனிங் ஹாலிற்கு வற, கைலாஷைப் பார்த்ததும் அருள், மதி இருவரும் வந்து கட்டி அணைத்துக்கொண்டனர் வரவேற்றனர்.
“எப்படி இருக்குடா கைலாஷ்?” என்று அருள் கேட்க.
“நான் நல்லா இருக்கேன் அருள். அப்பறம் இவன் என் ஃப்ரண்ட் ஜெய்.”
“ஜெய், இவங்க ரெண்டு பேரும் அத்தை பசங்க அருள், மதி. அப்புறம் இவங்க மாமா மூர்த்தி.”
“வணக்கம் அங்கிள். ஹாய் ப்ரோ,” என்று அருள், மதிக்கு ஜெய் கைகொடுத்தான். அவர்களும் ஜெய்க்கு கைகொடுத்தனர்.
“மாமா, எப்படி இருக்கீங்க?” என்று மூர்த்தியிடம் கேட்க.
“நான் நல்லா இருக்கேன் கைலாஷ். அப்பா, அம்மா எப்படி இருக்காங்க?”
“எல்லாம் நல்லா இருக்காங்க மாமா.”
“சரி, உட்காருங்க சாப்பிடலாம்.”
அவர்களுடன் இருவரும் டைனிங் டேபிளில் அமர்ந்ததும்,
“கைலாஷ், இவங்க என்னோட தம்பி சண்முகம். இது அவன் மனைவி கவிதா. இது அவங்க பொண்ணு மகேஸ்வரி. அவ கணவர் சக்திவேல். அவங்க பையன் பிரதீப். இவன் என் தம்பியோட பையன் மதியழகன், பன்னிரண்டாவது படிச்சிட்டு இருக்கான்.”
“இவன் இரண்டாவது தம்பி மாதவன். இது அவன் மனைவி சீதா. இது அவங்க பையன் கார்த்திக், இப்பதான் காலேஜ் முடிச்சான். இவ ஸ்வேதா, காலேஜ் படிச்சிட்டு இருக்கா.” என்று தங்களின் குடும்பத்தில் உள்ளவர்களை அறிமுகப்படுத்தியவர். திரும்பி தம்பியிடம்,
“சண்முகம், இவன் செல்வியோட அண்ணன் பையன் கைலாஷ். கொஞ்ச நாளைக்கி இங்க இருக்க வந்திருக்கான்.” என்று கூறியவர் அனைவரையும் சாப்பிட கூறினார்.
அனைவரும் சாப்பிட்டுவிட்டு ஹாலில் உட்கார்ந்திருக்க, அப்போது தான் ஸ்வேதா காலேஜுக்கு நேரமாகிறது என்று அனைவரிடமும் சொல்லிவிட்டு காலேஜுக்குக் கிளம்பினாள்.
“அருள், மதி, நீங்க இன்னும் ஆபீஸ் கிளம்பலையா?” என்று மூர்த்தி கேட்டார்.
“இதோ கிளம்பிட்டேன்பா. மதி, வா போலாம். பாய் கைலாஷ், நாங்க ஆபீஸ் போயிட்டு வர்றோம். சாயந்திரம் பார்க்கலாம்,” என்று அங்கிருந்து கிளம்பினர்.
“சரி கைலாஷ், நாங்களும் ஆபீஸ் கிளம்புறோம்,” என்று மூர்த்தி, சண்முகம், மாதவன் மூன்று பேரும் கம்பெனிக்குக் கிளம்பினர்.
அவர்கள் கிளம்பியதும் அனைவரும் அவரவர் அறைக்குள் நுழைந்து கொள்ள, ஜெயும் கைலாஷும் மேலே மொட்டை மாடிக்குச் சென்று சிகரெட் அடித்தனர்.
“டேய் கைலாஷ், வெளியில எங்கயாவது போலாமா?” என்று ஜெய் கேட்டான்.
“எங்கே போறது? நீயே சொல்லு.”
“சிட்டிக்குப் போலாம். அப்படியே மால் எல்லாத்தையும் சுத்திப் பார்த்துட்டு வருவோம்.”
“சரிடா, வா போலாம். அத்தைக்கிட்ட சொல்லிட்டு என்று இருவரும் கிழே இறங்கிவந்தனர்.”
“அத்தை, நாங்க கொஞ்சம் வெளியில போயிட்டு வர்றோம்.”
“சரிடா, பார்த்து போயிட்டு வாங்க. மதியம் வந்துருவீங்களா? லேட் ஆகுமா? லேட்டானா போன் பண்ணி சொல்லுங்க,” என்று கூறினார்.
“சரிங்க அத்தை, நாங்க போயிட்டு வர்றோம்,” என்று அங்கிருந்து கிளம்பினர்.
இங்கு மலர் வீட்டை விட்டு வெளியே வந்ததும் நேராக பஸ் ஸ்டாண்டுக்கு வந்து சேர்ந்தாள். அவள் வந்து கொஞ்ச நேரத்தில் அர்ச்சனாவும் தீபாவும் வந்தார்கள்.
“என்ன தீபா, நேத்து ஹாஸ்பிட்டலுக்குப் போனீங்களே, என்ன சொன்னாங்க டாக்டர்?” என்று மலர் கேட்க.
“பாப்பாவுக்கு இதயத்திற்குப் போற இரத்தக் குழாயில சின்னதா அடைப்பு இருக்குறதா சொல்லி டாக்டர் உடனே ஆபரேஷன் பண்ணனும்னு சொல்லிட்டாங்க,” என்றால் தீபா.
“என்னடி சொல்ற? உடனே ஆபரேஷன் பண்றதுனா காசு ரொம்ப செலவாகுமே. என்னடி பண்றது?”
“நானும் ஃபர்ஸ்ட் அப்படி நினைச்சுதான் ரொம்ப பயந்தேன். அதுக்கப்புறம்தான் டாக்டர் சொன்னாங்க, ARD ஃபவுண்டேஷன் அப்படின்னு ஒரு ஃபவுண்டேஷன் மூலமா ஆபரேஷன் ஆகுற மொத்தச் செலவும் அவங்களே பார்த்துப்பாங்களாம். எனக்கு அதைக் கேட்டதுக்கு அப்புறம்தான் நிம்மதியா இருந்துச்சு. அந்த ஆபரேஷனுக்கு ஏழு லட்சம் ரூபாய் செலவாகும்னு டாக்டர் சொன்னாங்க. அவ்வளவு காசுக்கு எங்கே போறது?”
“நல்ல வேளை அந்த ஃபவுண்டேஷன்ல இருக்கிறவங்க உதவி பண்ணாங்க. இல்லைனா என்ன பண்றது? அந்தச் சின்னப் பொண்ணு எவ்வளவு வலியத் தாங்கும்?” என்றால் மலர்.
“அந்த ஃபவுண்டேஷன் யார் நடத்துறாங்கன்னு கேட்டியா? அவங்களை நேர்ல போய் ஒரு நன்றி சொல்லணும்.”
“நானும் அவங்களைப்பத்தி டாக்டர் கிட்ட கேட்டேன். அவங்க இந்த ஊர் இல்லை. அவங்க சென்னையாம். இன்னும் ஒரு வாரத்துல அவங்க இங்கே வருவாங்களாம். நாம அப்ப போய் அவங்களுக்கு நன்றி சொல்லிட்டு வந்துடலாம்.”
“ஆமா மலரு, நாம மூணு பேரும் போய் அவங்களுக்கு நன்றி சொல்லிட்டு வரலாம்.”
“மம்.. அதுவும் சரி தான் நாம மூணு பேருமே போய் நன்றி சொல்லிட்டு வரலாம். தீபா, நீ அந்த டாக்டர் கிட்ட அவங்களோட அட்ரஸ் வாங்கிக்க. அப்படியே போன் நம்பர் வாங்கிக்கோ. அவங்க எப்ப வருவாங்கன்னு கேட்டுட்டு நாம போய்ப் பார்த்துட்டு வரலாம்.”
“சரி மலர், நாளைக்கு காலேஜ் முடிஞ்சதும் டாக்டர் கிட்ட போய் வாங்கிட்டு வந்துடறேன்.”
“சரி பஸ் வந்திருச்சு, வாங்க போலாம்,” என்று மூன்று பேரும் பஸ்ஸில் ஏறி காலேஜுக்குச் சென்றனர்.
************
அதே நேரம் இங்கு அக்னி ஆபீஸில் “டேய் அக்னி, ஆதி சொன்னது எல்லாம் உண்மையா?” என்று துருவன் கேட்க.
“இப்ப எதுக்கு இங்கே வந்து பல்லைக் காட்டிட்டு இருக்க? உனக்கு ஏதும் வேலை இல்லையா?” என்று முறைத்தான் அக்னி.
“டேய், இப்ப நான் என்ன கேட்டேன்? நீ கல்யாணம் பண்ணிக்கப்போறியானு தானே கேட்டேன்? அதுக்கு எதுக்குக் கோவப்படுற? நீ எங்க இப்படியே இருந்துருவியோன்னு நாங்க எத்தனை நாள் கவலைப்பட்டிருப்போம் தெரியுமா? நீ என்னடான்னா இப்படி கத்துற? போடா, நான் கோவமா போறேன்,” என்று அங்கிருந்து சென்று விட.
போகும் அவனைத்தான் அக்னி பார்த்துக்கொண்டிருந்தான்.
மலர் வருவாள்...