34. தகுதித் தேர்வு
“சரி, அப்படியென்றால் நீங்களே சொல்லுங்கள், நான் எப்படி எனது போர்த்திறனை உங்களுக்கு நிரூபிப்பது?.” என்று மாயா கேட்டவுடன், மிகுந்த அரசியல் சாதுர்யத்துடன் எருமையார் சொன்னார்,
“புதிய தலைவி மாயா அவர்கள், எங்கள் இனத்தில் இருந்து ஒரு போர் வீராங்கனையிடம் சண்டையிட்டு ஜெயிக்க வேண்டும். அப்படி அவர் வெற்றி பெரும் பட்சத்தில், எங்கள் இரு இனமும் மாயா அவர்களை தலைவி என ஏற்றுக் கொள்ளும். நாங்களும் அவரது இந்தத் தீர்ப்பிற்கு கட்டுப்படுவோம். ஒருவேளை அவர் தோற்றுவிட்டால், மீண்டும் தேர்வு நடத்தி இன்னொரு தலைவியை தேர்ந்தெடுக்க வேண்டும். இவரை பதவி நீக்கம் செய்து இவர் செய்த தவறுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும்” என்றார்.
மொத்த சபையும் அமைதி ஆனது. எருமையர் இனப் பெண்ணுடனும் குதிரையர் இனப் பெண்ணுடனும் மாயா சண்டையிட்டாள் அவளுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டிய தேவையே இருக்காது. ஏனென்றால் எருமையர் இனமாகட்டும் அல்லது குதிரையர் இனமாகட்டும் இரு இனங்களுக்கும் மாய சக்திகளை விட உடல் வலிமை அளப்பரியது. அதனால், சண்டையின் முடிவிலேயே அவள் இறந்து விடுவாள். ஒரு வேளை காலம் அவள் மீது கருணை காட்டினாள், அவள் கை கால்கள் மட்டும் உடைந்து உயிரோடு ஒரு இடத்தில் படுத்துக் கிடக்க வாய்ப்புண்டு. ஆனால், இந்த அறை கூவலை யாரும் நிராகரிக்க முடியாது. எருமையாரின் பக்கம் நியாயம் உள்ளது. ஒரு நல்ல தலைவியாக மாயா இதனை எதிர்கொண்டு தான் ஆக வேண்டும்.
சபையின் பலரும் கூடிக் கூடி பேசி, இறுதியாக, எருமையாரின் அறை கூவலை ஏற்றுக் கொண்டனர். சபையின் சார்பாக மூத்த அதிகாரி என்ற முறையில் நலன் முன் வந்து அறைகூவலை சபை ஏற்றுக்கொண்டதை அறிவித்தார்.
முத்துக்குமரனுக்கு கை நரம்புகள் புடைத்துக் கொண்டு வந்தன. யார் யாருக்கு தன் தகுதிகளை நிரூபிப்பது? கடினமான பல தேர்வுகளை தாண்டி தலைமைப் பொறுப்பிற்கு வந்த தனது மகளின் தகுதியைப் பற்றி கேள்வி கேட்க இந்த எருமையாருக்கு என்ன தகுதி இருக்கிறது? அதை எப்படி இந்தச் சபை அனுமதிக்கலாம்? இதற்காகவே மொத்த ஜீயூஸ் படையினரையும் சிறிதாக மாற்றி தனது காலில் வைத்து மிதித்து விட நினைத்தார். மகளின் தலைமையை ஏற்காத மொத்தப் படையையும் அழித்து விட தயாரானார். தன் மனைவியை காவு வாங்கிய அந்தப் படையின் கொள்கைகளின் மீதும் அதன் புனிதப் போரின் மீதும் அவருக்கு ஏற்கனவே வெறுப்பு இருந்தது. தன் மகளுக்காக மட்டுமே அவர் இன்னும் இந்தப் படையில் இருக்கிறார். இல்லையென்றால், அவர் எப்போதோ இந்தப் படையில் இருந்து விலகி இருப்பார். இந்தக் கேள்விகள் அந்த வெறுப்புத் தீ மீது பெட்ரோல் ஊற்றுவது போல இருந்தது.
மாயா திரும்பி தனது தந்தையைப் பார்த்தாள். அவரது கோபத்தை அவருடைய கண்களிலேயே தெரிந்து கொண்டாள்.
“நான் பாத்துக்கிறேன்ப்பா…” என்று கண்களாலேயே தந்தைக்கு செய்தி அளித்து விட்டு, சபையை நோக்கிக் கூறினாள்,
“இந்த சபை அறை கூவலை ஏற்கலாம். ஆனால், தலைவி என்ற முறையில் என்னால் இதனை ஏற்க முடியாது.”
ரொம்ப நேரமாக தங்களது அங்கியில் ஒளித்து வைத்திருந்த ஏளனப் பார்வையை மறைக்க முடியாமல், சபை உறுப்பினர்கள் இப்போது அந்தப் பார்வையை அவள் மீது வீசினர்.
“நான் ஜீயூஸ் படையின் தலைவி, நான் ஒரு சாதாரண வீராங்கனைகளுடன் சண்டையிடுவது சரியாக இருக்காது. அதனால், எருமையர் மற்றும் குதிரையர் இனங்களின் தலைவர்களுடன் சண்டையிடுவதே சரி நிகரான சண்டையாக இருக்கும்.” என்றாள் மாயா.
சபையிலிருந்த அனைவருக்கும் இது அதிர்ச்சியாக இருந்தது. எருமையர்கள் பேசும் போது மிகுந்த நிதானமாக பேசுவார்கள். ஆனால், சண்டையென்று வந்து விட்டால், அவர்களது மூர்க்கம் பல மடங்கு அதிகமாகி விடும். அந்தச் சண்டையில் எதிராளி இறக்கும் வரை அவர்களது கோபம் குறையாது. அதிலும் எருமையர் இனத் தலைவர் மாபெரும் வீரர். ஒரே நேரத்தில் இரண்டு எதிரிகளை தனது கொம்புகளால் முட்டித் தூக்கி நீண்ட தூரம் ஓடிச் சென்று வீசுபவர். அப்படி ஓடுகிற போது பல எதிரிகளை இடித்தும் மிதித்தும் கொல்லக் கூடியவர். அதனால், படையில் இருக்கிற மூத்த வீரர்களே அவர்கள் கூட சண்டையிட துணிய மாட்டார்கள். ஆனால், மாயா ஒரே நேரத்தில் சக்தி வாய்ந்த இரண்டு பெரும் சக்தி வாய்ந்த இனக்குழுக்களுடன் பிரச்சனையை வளர்த்துக் கொண்டுவிட்டாள்.
தலைமைப் பெறுப்பேற்ற புதிய தலைவியை இன்றே தரையில் போட்டு நசுக்கித் தேய்க்கப் போகிறார்கள் என்று சபையினர் நினைத்தனர்.
ஆனால், மாயா எவ்விதக் குழப்பமும் இன்றி தெளிவாக தனது தேர்வுக்கான கடின அளவுகளை அதிகரித்துக்கொண்டே சென்றாள்.
மாயா சொன்னாள், “ஜீயூஸ் படையின் தலைவி என்கிற முறையில் நான் இந்தப் போட்டிக்கான விதிகளை நானே விதிக்க விரும்புகிறேன்.
நான் இந்த இரு இனத்தலைவர்களுடனும் ஒரே நேரத்தில் சண்டையிட விரும்புகிறேன்.
இந்தப் போட்டி சரி நிகராக நிகழும் பொருட்டு, நான் என்னுடைய எந்த மாய சக்திகளையோ ஆயுதங்களையோ பயன்படுத்தப் போவதில்லை. பதிலாக உடல் வலிமையை மட்டுமே பயன்படுத்தக்கூடிய ஒரு சண்டையாக இருக்க வேண்டும்.
மூன்றாவது விதி மிக முக்கியமான விதி, இந்த சண்டை எதிராளி தோற்றவுடன் முடியாது. எதிராளி இறந்தவுடன் தான் முடியும்.” என்றாள்.
நந்தன் முன் வந்து சொன்னான், “தலைவி அவர்களே நீங்கள் சொன்ன முதல் இரண்டு விதிகளையும் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால், மூன்றாவது விதியை பரிசீலனை செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். ஒருவர் ஒரு போட்டியில் தோற்றுவிட்டார் என்பதற்காக அவர் இறப்பதென்பது சரியில்லை என்று தோன்றுகிறது”.
“நந்தன் அவர்களே சரி நிகர் வலிமை கொண்ட இருவர் சண்டையிடும் போது தோற்றவர் இறந்தே ஆக வேண்டும். இல்லையென்றால், தோற்றவர் மீண்டும் ஒரு நாள் எழுந்து வந்து வென்றவரை சண்டைக்கு அழைக்கும் வாய்ப்புள்ளது. அதனால், தோற்றவர் உயிரோடு இருக்கும் வரை அங்கே சண்டைக்கான வெக்கை இருந்து கொண்டே இருக்கும். அதனால், மூன்றாவது விதி மிக முக்கியமான ஒன்று என நான் நினைக்கிறேன்” என்றாள்.
மாயா, அவளே அவளுடைய மரண சாசனத்தில் கையெழுத்துட்டு விட்டாள். முன்னாள் தலைவியின் சமாதிக்கு எதிரேயே ஒரு இடம் இருந்தது. அங்கேயே மாயாவிற்கும் ஒரு குழியைத் தோண்டி விடலாம். இப்போது தான் சிரியஸ் ஒரு சமாதியை வடிவமைத்தான், உடனே, இன்னொன்றை வடிவமைக்கச் சொன்னால் அவன் நிச்சயமாக திணறி விடுவான். அதனால், அவன் நினைவில் இருக்கக் கூடிய ஏதேனும் ஒரு பழைய வடிவமைப்பையே இதற்கும் பயன்படுத்தச் சொல்லலாம். அவளுக்கு அடுத்து தகுதி தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த பெண் யார்? என்றெல்லாம் சபையினர் யோசிக்கத் தொடங்கினர்.
ஆனால், முத்துக்குமரன் மட்டும் எவ்விதச் சலனமும் இன்றி நடப்பவற்றைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் மாயாவிற்கு அவளுடைய சிறு வயது முதலே தற்காப்புக் கலைகளை பயிற்றுவித்திருந்தாலும் அவரால் மாயாவின் பயத்தை மட்டும் அழிக்கவே முடியவில்லை.
அந்த பயத்தால் தான், அவள் சில நாட்களுக்கு முன்பு ஒருவனை கல்லாக மாற்றியிருந்தாள். ஆனால், தான் தலைவியாக பொறுப்பேற்கிறேன் என்று முடிவெடுத்த ஏதோவொரு புள்ளியில் மாயா தனது பயத்தை வென்றிருக்கிறாள். அவள் பயத்தை தாண்டி வந்ததை நினைத்து முத்துக்குமரன் நிம்மதி அடைந்தார்.
அந்தச் சபையின் நடுவே இருந்த அக்னிக் குண்டங்கள் அகற்றப்பட்டு அங்கேயே சண்டைக்கான களம் உருவாக்கப்பட்டது. மாயா அவள் தலையில் குத்தியிருந்த மரகத கொண்டை ஊசியை எடுத்து தனது அரியாசனத்தில் வைத்துவிட்டு சண்டைக் களத்திற்கு வந்து நின்றாள்.
குதிரையர் இனத் தலைவரும் எருமையர் இனத் தலைவரும் வட்டத்திற்குள் வந்து நின்றனர். இருவருமே ஒரு சிறு பெண்ணை எப்படித் தாக்குவது என்று தெரியாமல் மாயாவின் முதல் அடிக்காக காத்திருந்தனர். அந்த சிறு பெண் என்கிற எண்ணமே அவர்களை தற்காத்துக் கொள்ள வேண்டியதன் தேவையை மறந்து அவர்களை நிற்க வைத்தது. மாயா அதனைப் புரிந்து கொண்டாள். அவள் அடிக்கக் கூடிய முதல் அடியில் அவர்கள் இனி மாயாவை சிறு பெண் என நினைப்பதை மாற்றிக் கொள்ள வேண்டும் என முடிவெடுத்தாள்.
மாயா வேகமாக ஓடிச் சென்று எருமையாரின் கணுக்காலில் பின்புறம் இருந்து தாக்கி அவரை கீழே விழ வைத்தாள். எருமையார் கீழே விழுந்ததும் அதே வேகத்தில் மேலே எகிறி தனது காலால் குதிரையாரின் காதிற்கு பின்புறம் ஓங்கி உதைத்தாள். குதிரையார் ஒரு எதிர்பாராமல் விழுந்த அடியில் கண்களில் பொறி தட்டிப் போய் என்ன நடந்தது என்று தெரியாமல் தலையை ஆட்டி நின்றார். எருமையாரும் மெல்ல எழுந்து நின்றார்.
மாயா இருவரையும் நோக்கி, “சண்டையை ஆரம்பிக்கலாமா?” என்று கேட்டாள்.
தாங்கள் நினைத்தது போல மாயாவை எளிதாக வீழ்த்தி விட முடியாது என்கிற உண்மையை இரு தலைவர்களும் உணர்ந்தனர். அத்தோடு சபை முன்னர் தாங்கள் தாக்கப்பட்டதன் அவமானமும் சேர்ந்து கொண்டது. இருவரும் உண்மையான சண்டைக்கு தயாராகினர். மாயா தனது மார்பிற்கு குறுக்காக முஷ்டிகளை மடக்கி உயர்த்தி சண்டைக்கு தயராகி நின்றாள்.
ஆனால், சண்டை அவர்கள் நினைத்தது போல நீண்டு செல்லவில்லை. ஒரு மாபெரும் யானையைக் கூட மிகச் சரியாக அதன் மத்தகத்தில் அடிக்கின்ற போது அப்பேர்பட்ட யானை விழுந்து போகும். இந்தக் குதிரையரும் எருமையரும் எம்மாத்திரம்.
எருமையருக்கு உடல் வலிமை அதிகம் அதனால் அவரிடம் வலிமையைக் காட்டக் கூடாது. அது தோல்வியைத் தான் கொடுக்கும். அவரை வெல்ல மிக வேகமாக செயல்பட வேண்டும். அவரது உடலில் பலவீனமான பகுதி என்பது அவரது கால் குளம்புகளுக்கு அடியில் இருக்கிற மெல்லிய சவ்வு. அந்த மெல்லிய சவ்வில் ஓங்கி அடித்தால் பின்னர் அவரால் நிற்க முடியாது. பின்னர் பொறுமையாக அவரது இரு கொம்புகளுக்கு இடையே அவரது நெற்றியில் அடித்து அவரை வீழ்த்த வேண்டும். தண்ணீர் மெல்ல மெல்ல ஒரே இடத்தில் சொட்டும் போது பெரும் பாறைகளிலேயே துளை விழுகிறது. அது போலத் தான் இதுவும் தொடர்ச்சியான தாக்குதல் அவரை வீழ்த்தும்.
அடுத்தது குதிரையார் அவருக்கு வேகம் அதிகம் தான். ஆனால், நிதானம் குறைவு. அவரால் ஒரு வேலையை மெதுவாக செய்ய முடியாது. ஒருவனால் ஒரு வேலையை மெதுவாக செய்ய முடியவில்லை என்றால், அதே வேலையை அவனால் வேகமாகவும் செய்ய முடியாது. குதிரையாரை தோற்கடிக்க முதலில் அவரை பதற்றமடையச் செய்ய வேண்டும். பின்னர், அவரே தவறான அடியை எடுத்து வைப்பார். அந்த ஒரு தவறு போதும் அவரை வீழ்த்த.
மாயா நினைத்தது போலவே வேகமாக ஓடிச்சென்று எருமையாரின் இரு கால்களுக்கு இடையே வழுக்கிச் சென்று தன் காலால் அவரது கால்களை இடறி விட்டாள், எருமையார் கீழே குப்புற விழுந்தார். பின்னர், மாயா அவரது காலின் பின்புறத்தில் அமர்ந்து, காலைப் பின்னோக்கி மடக்கி அவரது குளம்புகளுக்கு இடையே இருந்த மெல்லிய சவ்வில் ஓங்கிக் குத்தினாள். எருமையார் வேதனையில் கத்துவதை அங்கிருந்த அனைவரும் முதன் முதலாக கேட்டனர்.
மாயா, அவரை விட்டு எழுந்த வேகத்தில் எருமை யாரும் எழுந்து நிற்க முற்பட்டார். ஆனால், முடியவில்லை, மாயா அவரது முதுகிற்கு பின்புறம் அவரது கொம்பைப் பிடித்து மேலேறி கொம்புக்கும் நெற்றிக்கும் இடைப்பட்ட பகுதியில் வேகமாக குத்திக் கொண்டிருந்தாள். திடீரென எருமையார் தனது சுயநினைவை இழந்து பொத்தென்று தரையில் விழுந்தார். அந்தத் தரையே ஒரு நிமிடம் அதிர்ந்தது.
குதிரையாருக்கு எதுவுமே புரியவில்லை. எப்படி எருமையார் இந்தச் சிறு பெண்ணிடம் அடி வாங்கித் தோற்றார் என குழப்பமாக இருந்தது. அவர் புயல் போன்ற பாய்ச்சலில் மாயாவை நோக்கி ஓடி வந்தார். அவர் அருகினில் வரும் வரை அமைதியாக இருந்த மாயா, அவர் கிட்ட நெருங்கியதும் மேலே எகிறி அவரது உதர விதானத்தில் அடித்தாள். ஒரே ஒரு நொடியில் அவரது கண்கள் இருட்டுக் கட்டின. அதற்குள் மாயா அவரது முதுகில் தொற்றி அவரது முடியைப் பிடித்து இழுத்தாள். நன்கு அவரது தலையை பின்னோக்கி இழுத்த பின் அவரது குரல்வளையில் ஓங்கிக் குத்தினாள். ஒரு பெரும் கணைப்புடன் அவரும் கீழே விழுந்தார்.
அவர் கீழே விழுகும் போது மாயா, சட்டென்று கீழே குதித்து நின்று விட்டாள். இருவரும் மயங்கிய நிலையில் களத்தில் விழுந்து கிடந்தனர். அவர்களது தோல்வி உறுதியானது. மொத்த சபையும் எழுந்து நின்று அவர்களது புதிய தலைவியின் வெற்றியை ஆர்ப்பரித்தனர். ஏளனம் செய்கிற அனைவரையும் தன் பக்கம் ஈர்க்க தேவையெல்லாம் ஒரு வெற்றி. ஒரே ஒரு அசாதாரண வெற்றி. இவள் தான் தங்களுடைய தலைவி என்பதை அந்த சபை ஏற்றுக் கொண்டு விட்டது.
தோற்ற இருவரும் மாயா முன்பு மண்டியிட்டு நிற்க வைக்கப்பட்டனர். அவர்களது மயக்கம் தெளிய வைக்கப்பட்டிருந்தது. மாயா தனது மரகதக் கொண்டை ஊசியை அணிந்து கொண்டாள். அவளிடம் தலைவிக்கான வாள் கொடுக்கப்பட்டிருந்தது. மாயா மூச்சு வாங்கிய படி, அந்த வாளை எடுத்து எருமையாரின் நெஞ்சின் மீது வைத்தாள்.