அன்று வீட்டுக்கு வந்த நந்தனாவிடம், அவள் அம்மா நந்து யாழ் குட்டிக்கு பிடிக்குனு பால் கொழுக்கட்டை செஞ்சு வெச்சிருக்கேன். அவ வந்தா சாப்பிட குடுத்துட்டு அப்புறம் படிக்கவை நான் கோவில் வரைக்கும் போயிட்டு வரேன் என்று சொல்லி சென்றார். செல்லும் அம்மாவை பார்த்து புன்னகைத்து கொண்ட நந்தனா, யாழினி பற்றிய நினைவுகளில் முழ்கினாள். மிரட்சியோடு முதல் நாள் வந்த யாழினி நந்தனா தவிர யாருடனும் பேசவில்லை, யாழினி முதலில் பேச தொடங்கியது சந்தியாவிடம் தான் பெரிதாகிவிட்ட சந்தியாவின் வயிற்றைப் பார்த்து பல கேள்விகள் கேட்பாள். குட்டி பாப்பா எப்ப வரும், வந்து என்கூட விளையாடுமா, நான் அத தொட்டு பாக்கலாமா இப்படி எதாவது கேட்டு கொண்டிருப்பாள். சந்தியாவும் அவளுக்கு சலிக்காமல் பதில் சொல்லுவாள். தன் வாரிசுக்காக காத்திருக்கும் விக்ரமிற்கு யாழினி போல்தான் தன் குழந்தையும் மழலை பேசும் என்ற எண்ணமே யாழினி மேல் தனி பாசத்தை ஏற்படுத்தியது. படிக்கும் நேரம் போக அவளுடன் விளையாடுவது, சந்தியாவிடம் அவள் பேசும்போது அவர்களுடன் இணைந்துகொள்வது என்று விக்ரம் யாழினியின் ஸ்பெஷல் நபராக மாறிப்போனான்.
மிஸ் என்று நந்தனாவை கூப்பிட்டு கொண்டிருந்த யாழினி, நந்தனா கதிரை தோஸ்த் என்று கூப்பிடுவதை பார்த்து அதற்கு அர்த்தம் கேட்டாள். அப்படினா ப்ரண்ட்னு அர்த்தம் என்று சொன்னாள் நந்தனா, நான் உங்கள அப்படிகூப்பிடட்டா என்று கேட்டு அன்றில் இருந்து அப்படித்தான் கூப்பிடுகிறாள். அப்ப என்ன என்னனு கூப்பிடுவ என்று கேட்ட விக்ரமை யோசனையாக பார்த்தவள் மாமானு கூப்பிடுறேன். அது ஏன் மாமா என்று நந்தனா கேட்க, டார்லிங் அப்படித்தான் கூப்பிடுறாங்க என்றவுடன் அனைவரும் சிரிக்க தொடங்கினர். சந்தியா சில சமயங்களில் விக்ரமை மாமா என்றுதான் அழைப்பாள் அதைத்தான் யாழினி சொன்னாள். இப்படியாக அந்த வீட்டில் உள்ள அனைவரையும் உறவு சொல்லி அழைக்க தொடங்கிய யாழினி அந்த வீட்டு பெண்ணாகவே மாறிப்போனாள். அவள் வரும் மூணு நாளும் வீட்டில் ஒரே பேச்சும் சிரிப்புமாக இருக்கும், அந்த இனிய நினைவுகளில் இருந்த நந்தனாவை அங்கு வந்த கதிரின் குரல் நினைவுலகத்துக்கு கொண்டுவந்தது.
இன்னும் என்மேல கோவமா தோஸ்த் என்றவளை பார்த்து சிரித்தவன் உன்மேல எனக்கு என்ன கோவம் மச்சான், ஒருத்தன் உங்கிட்ட தப்ப பேசியிருக்கான். அவன ஒன்னு செய்யமுடியலைனு ஆதங்கம் அவ்ளோதான், சரி அத விடு எங்க என் செல்லகுட்டி யாழினிய இன்னும் காணோம், அவள பாக்கத்தான் வந்தேன் என்றான். இந்த வீட்டுல வர வர யாரும் என்ன கண்டுக்குறதே இல்ல எல்லாரும் யாழினியைத்தான் கேக்குறீங்க எல்லா நேரம் என்று போலியாக சலித்துக்கொண்டவள், அவளுக்கு ஸ்கூலில் ஸ்போர்ட்ஸ் டே வர லேட்டாகும் என்று சொல்லிக்கொண்டே தன் அறைக்கு சென்றாள். விக்ரம் ஆஃபீஸ் பார்ட்டிக்கு சந்தியாவும், விக்ரமும் சென்றிருந்தனர். யாருமில்லாததால் டிவி பார்க்கத்தொடங்கினான் கதிர், உடைமாற்றி வந்த நந்தனா கதிருக்கு பால்கொழுக்கட்டையை கொடுத்துவிட்டு உடன் அமர்ந்து பேசத்தொடங்கினாள்.
இன்னைக்கு அர்ஜுன் நான் மூட் அவுட்டா இருக்கனு சமாதானம் செஞ்சாரு, என்று சொல்லி நடந்ததை சொன்னாள், ஹ்ம்ம் காதல் புறாக்கள், அதுதான் சார் கோவத்த பார்த்தனே, நீங்க இப்படி செஞ்ச நந்தனாக்குதான் பிரச்சனை அதுதான் உங்களுக்கு வேணுமா என்று அர்ஜுன் போல பேசிக்காட்டி தன் தோழியை கிண்டல் செய்தான். உடன் இணைந்து சிரித்த நந்தனா, அவரே பல்பு எரிஞ்சு காதலை சொல்லிட்டா நல்ல இருக்கும் என்றாள், சொல்லுவாரு சொல்லுவாரு எங்க போய்டப்போறாரு என்று சொல்லிக்கொண்டிருந்தவன் அங்கு வந்த யாழினியை பார்த்து, ஹாய் யாழ் குட்டி ஏன் இவ்வளவு லேட் என்றான். அவனுக்கு பதில் சொல்லாமல் நந்தனாவை வந்து கட்டிக்கொண்டாள் யாழினி.
எப்பொழுதும் வெளியில் கதிரின் வண்டியை பார்த்தவுடன் கதிர் மாமா என்று உள்ளே ஓடிவரும் யாழினி இன்று தன்னை தவிர்ப்பதை பார்த்து குழம்பிப்போனான் கதிர். நந்தனா, யாழினிடம் என்ன ஆச்சு யாழ்மா ஏன் ஒருமாதிரி இருக்க என்று கேட்டாள். தோஸ்த் நான் உங்ககூடவே இருந்துகவா நான் தொல்லையெல்லாம் பண்ணமாட்டேன் ப்ளீஸ். என்ன வீட்டுக்கு அனுப்பாதீங்க பாட்டி ஹாஸ்டல் அனுப்பிடுவாங்க எனக்கு ஹாஸ்டல் போக பிடிக்கல என்று சொல்லி அழதொடங்கினாள். கதிருக்கு முகம் தெரியாத யாழினி பாட்டி மீது கோவம் வந்தது. நந்தனா யாழினியை மடியில் அமரவைத்து சமாதானம் செய்து கொண்டிருந்தாள். யாழ் குட்டி அழ கூடாது, உன்ன யாரும் ஹாஸ்டல் அனுப்ப மாட்டாங்க, நீங்க வீட்டுல பாட்டிய தொல்ல பண்ணுனீங்களா என்று கேட்டாள்,
இல்லை என்று உதடு பிதுக்கியது மழலை, அப்புறம் பாட்டி எதுக்கு அப்படி சொன்னாங்க என்று கேட்டாள் நந்தனா, நான் இருந்த அப்பா கல்யாணம் செய்துக்க மாட்டாராம். என்ன ஹாஸ்டல்ல விட்டாதான் அப்பா ஹாப்பிய இருப்பாராம் என்று சொல்லி முன்னிலும் அதிகமாக அழ தொடங்கிய யாழினி நான் உங்ககூடயே இருந்துக்குற தோஸ்த், என்ன விட்டுட்டு எங்கயும் போய்டாதீங்க என்று சொல்லிக்கொண்டே அப்படியே சரிந்து விழுந்தாள்.
என்னவென்று நந்தனா உணரும் முன் யாழினிக்கு வலிப்பு வர தொடங்கியது. பதறி போன நந்தனாவும், கதிரும் அவளை தூக்கிக்கொண்டு ஹாஸ்பிடலுக்கு விரைந்தனர். போகும்வழி எல்லாம் யாழினிக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்று வேண்டிக்கொண்டிருந்த நந்தனா, தன் போனில் இருந்து அரவிந்திருக்கு தகவல் சொல்லி ஹாஸ்பிடலுக்கு வர சொன்னாள்.
விஷயம் கேட்டு பதறி போன அரவிந்த் தன் அண்ணனுக்கு விஷயத்தை சொல்லி ஹாஸ்பிடலுக்கு வரசொல்லி விட்டு, ஹாஸ்பிடலுக்கு விரைந்தான். அரவிந்த் சொன்னதை கேட்டு அர்ஜுன் ஒரு நிமிடம் எது நடக்கக்கூடாது என்று டெல்லியில் இருந்து யாழினியை இங்கு கூட்டி வந்தானோ அது எப்படி திரும்ப நடந்தது என்று புரியாமல் தன் மகளை பார்க்க ஓடினான். டாக்டர் கண்டிப்பாக அவளுடைய பழைய ரிபோர்ட்ஸ் கேட்பார்கள் என்று உணர்ந்து அதை எடுத்துவர நேராக வீட்டுக்கு சென்றான். அதற்குள் ஹாஸ்பிடல் வந்துவிட்ட அரவிந்த் நந்தனாவிடம் என்ன ஆச்சு மார்னிங் கூட நல்லாதானே இருந்தா என்றான், அவனை தீர்க்கமாக பார்த்தவள் இப்பகூட வர முடியாத அளவுக்கு உங்க அண்ணன் பிஸியா இருக்காரா அரவிந்த் என்றவளிடம் அண்ணனுக்கு சொல்லிட்டன் வந்துட்டு இருப்பான். ஆனா யாழினிக்கு வலிப்பு எப்படி என்று மீண்டும் கேட்டான். தெரியல டாக்டர் இன்னும் எதுவும் சொல்லல என்று சொல்லிக்கொண்டிருக்கும் போது வெளியில் வந்த டாக்டர் யாழினியோட பழைய ரிபோர்ட்ஸ் எங்க என்று அவர்களிடம் கேட்டார். பழைய ரிபோர்ட்ஸ்? யாழினிக்கு முன்னாடி வலிப்பு வந்ததில்லை டாக்டர் என்றான் அரவிந்த். நிச்சயம் இது குழந்தைக்கு முதல் டைம் இல்ல எங்களுக்கு பழைய ரிபோர்ட்ஸ் வேணும் என்று சொல்லி கொண்டிருக்கும் போது, ரிபோர்ட்ஸ் இங்க இருக்கு டாக்டர். யாழினிக்கு இது 3 முறையா வருது. இதுல அவளோட மெடிக்கல் பைல்ஸ் எல்லாமே இருக்கு என்று குடுத்தான் அர்ஜுன். அதை வாங்கிக்கொண்டு டாக்டர் உள்ளே சென்றுவிட, அண்ணா என்ன சொல்ற யாழினிக்கு முன்னாடியே வலிப்பு வந்து இருக்க நீ ஏன் எங்க கிட்ட சொல்லல என்றான் அரவிந்த். அங்கு நடப்பதை நம்ப முடியாமல் பார்த்து கொண்டிருந்தாள் நந்தனா, அரவிந்த் அண்ணன், யாழினியின் அப்பா அர்ஜுனா, அர்ஜுனுக்கு கல்யாணம் ஆகி குழந்தை இருக்கா அவளால் கண் பார்ப்பதை உண்மை என்று நம்ப முடியவில்லை, கதிரும் கிட்டத்தட்ட அந்த நிலையில்தான் இருந்தான்.
அரவிந்திடம் பேசிக்கொண்டிருந்த அர்ஜுன் எப்படி யாழினிக்கு வலிப்பு வந்துச்சு, நல்லாதானே இருந்தாள் என்று கேட்டான். தெரியல அண்ணா டியூஷன் போனா அங்க இருந்து நந்தனா தான் எனக்கே போன் பண்ணாங்க என்று நந்தனாவை கட்டினான், அதுவரை அவர்களை கவனிக்காத அர்ஜுன், நீதான் யாழினியோட டான்ஸ் டீச்சரா? என்றான். தலையை மட்டும் அசைத்தவள், யாழினி உங்க ------------ என்று மேற்கொண்டு கேட்காமல் நிறுத்தினாள். ஆமா யாழினி என்னோட பொண்ணுதான் என்றான். அந்த நொடி தான் அடுத்து செய்யவேண்டியதை முடிவுசெய்துவிட்டாள் நந்தனா.