The grandson you came looking for...?? in Tamil Love Stories by vaanya books and stories PDF | தேடி வந்த பேரன்பே....??

The Author
Featured Books
  • RAAKH - खामोश चीखों का शहर

    इस शहर में, सूरज उम्मीद जगाने नहीं उगता था; वह तो बस पिछली र...

  • Flower

    यह उस वक्त की बात है जब मैं 15 साल का था। मेरे लिए प्यार शब्...

  • औद्योगिक कचरा

    औद्योगिक कचरा और विकास  विवेक रंजन श्रीवास्तव आज आधुनिक विका...

  • अदृश्य पीया - 15

    (कमरा वही है… पर अब खाली नहीं—बल्कि दिखाई न देने से भरा हुआ।...

  • तेरे मेरे दरमियान - 76

    जानवी ने अपना चेहरा अपने हाथों में छुपा लिया।कार मे वो अकेली...

Categories
Share

தேடி வந்த பேரன்பே....??

அவன் அந்த மாளிகையின் உள்ளே நுழையும் போது, அவனின் மனம் போல வெறுமையாக காட்சியளித்தது..

இத்தனைக்கும் நேரம் அப்படி ஒன்றும் அதிகம் ஆகிவிடவில்லை...

ஆனாலும் அவரவர் தங்களின் இரவு உணவை உண்டு விட்டு,

அது செரிமானம் ஆவதற்காக கேளிக்கை பேச்சும், வேடிக்கையுமாக இருந்து,

இப்போது பறவைகள் கூடு அடைந்தது போல் தங்கள் அறையில் நித்திரையில் சொர்க்கத்தை எட்டிப் பார்த்தபடி இருப்பர்..

இத்தனைக்கும் அந்த மாளிகையில் இன்றைய நிலவரப்படி குறைந்தது நாற்பது பேர் வேலைக்காரர்கள் உட்பட இருக்கின்றனர்..

ஆனால் யாரும் இருப்பதற்கான அறிகுறியே இல்லாமல் மயான அமைதியோடு காட்சியளித்தது..

இந்த மாளிகை இந்த அளவிற்கு செல்வ செழிப்போடு வெளி உலகின் மரியாதையோடு மிடுக்கோடு இருப்பதற்கு காரணம் ஆனவனோ..?

யாருமற்ற தனிமையில் அமர்ந்து வயிற்றில் இருக்கும் பசிக்கு உணவு பரிமாற ஆளின்றி,

சூனியத்தை வெறித்தபடி தனக்குத் தானே உணவை போட்டுக்கொண்டு சாப்பிட முயன்று கொண்டிருந்தான்.

உண்மையில் அது சாப்பிடுவதற்கான முயற்சித்தான்..

மனம் கனத்து தனிமையில் மூழ்கி இருக்கும் போது எவ்வாறு எதுவும் நடக்காதது போல் உண்ண முடியும்..

இதில் குறிப்பிட வேண்டிய முக்கியமான இன்னொரு விஷயம் ஒரு வாரத்திற்கு முன்புதான் அவனுக்கு திருமணமாகி இருந்தது..

அவனின் தர்மபத்தினியும் அதே மாளிகையில், அவன் அறையில், நிம்மதியான நித்திரையில் இருக்கின்றாள்.

தன் கணவன் வேலை முடிந்து பசியோடு களைப்பாக வரும் போது உணவருந்த வேண்டுமே என்ற எந்த சிந்தனையும் இல்லாது..

ஏன் கணவன் என்ற ஒருவனை பற்றிய சிந்தனையே இல்லாது உறங்கிக் கொண்டிருக்கிறாள்..

இப்படிப்பட்ட நிலைமையை யாரிடம் விளக்க முடியும்..? அதுவும் அவன் அந்த மொத்த மாளிகையின் ஒரே சொந்தக்காரன் ஆவான்..

ஊருக்குள் அவனுக்கு மிக நல்ல பெயர்..

அவன் கைப்பட்டால் துலங்கும்.. தொட்டதெல்லாம் பொன்னாகும் என்று ஊரில் ராஜ மரியாதை...

சிறு வயதில் உழைத்து ஒருவேளை உணவிற்கு கஷ்டப்பட்ட தன் குடும்பத்தை,

இன்று ஊரே மூக்கில் விரல் வைத்து பிரம்மிக்கும்படி ஒரே ஆளாக இருந்து உயர்த்தியவன்...

தனக்கென தனிப்பட்ட எந்த விருப்பு, வெறுப்பும் இல்லாமல் தன் குடும்பமே உலகம் என்று வாழ்கின்றவன்...

அதே குடும்பத்தால் இன்று வஞ்சிக்கப்பட்டு இந்த நிலைமையில் இருப்பவன்..

இன்றும் ஊருக்குள் இவனுக்கு இருக்கும் மரியாதை சற்றும் குறையவில்லை...

வீட்டுக்குள்ளும் கண்ணால் பார்த்த பிறகு கிடைக்கும் மரியாதைக்கு குறைவில்லை..

ஆனால் ஆத்மார்த்தமான அன்பு என்பது மிகப்பெரிய கேள்விக்குறி..?

அவனுக்கு கிடைக்கும் அனைத்தும் மரியாதையும் அவனிடம் இருக்கும் பொன்னுக்கும், பொருளுக்கும்...

ஆனால் ஆத்மார்த்தமான அன்பு என்பது தனி மனிதனுக்கு கிடைக்கும் ஒரு வரம் அல்லவா..

அப்படி இருக்க அவனின் தனிப்பட்ட அன்பு என்ற இடம் இன்றும் வெறுமையாக மட்டுமே காட்சி அளிக்கும் இடமாக உள்ளது..

பரிதாபத்திற்குரிய விஷயம் ஆகும்...

அவன் சர்வேஸ்வரன்...

சர்வா பிறக்கும் போது அவன் மீது உண்மையான அன்போடு இருந்த தாய் சகலத்திற்கும் தலைவனாக வேண்டும் என்று ஆசையோடு,

சர்வேஸ்வரன் என்று ஆசையாக பெயர் சூட்டி..

இன்று அந்த பெயரின் முழு அர்த்தத்தை தன் வாழ்வில் சாதித்து காட்டியவன்..

பொறுப்பற்ற தந்தைக்கு பிறந்தாலும் பொறுப்பான மூத்த பிள்ளையாக இருந்து,

தனக்குபின் பிறந்த இரண்டு தம்பி ஒரு தங்கைக்கு அண்ணனாக தன் வாழ்வை முழுவதுமாக அர்ப்பணித்தான்...

40 வயது ஆகும் வரை தன் திருமணத்தை பற்றி எந்த சிந்தனையும் இல்லாமல் தன் குடும்பத்தில் இருப்பவர்கள் வாழ்வில் அடுத்தடுத்த நிலைக்கு செல்ல பாடுபட்டவன்...

இவ்வளவு விளக்கங்கள் கூறப்படுபவனுக்கு தன் சொந்த குடும்பத்தை பற்றி தெரியாதா என்ன..?

அந்த ஊரிலேயே மிகப்பெரிய தொழிற்சாலை வைத்து கிட்டத்தட்ட 500 பேருக்கு வேலை கொடுக்கும் ஒருவனால்..

தன் சொந்த வீட்டில் இருப்பவர்களின்  உள்நோக்கத்தையும், அவனிடம் காட்டப்படும் பொய் அன்பையும், அவனை வெறும் பணம் காய்க்கும் மரமாக பயன்படுத்துவதையும் பகுத்தறிய முடியாத அளவிற்கு முட்டாள் அல்ல..

இருந்தும் தன் குடும்பம் என்ற ஒரே காரணத்திற்காக தான் அவர்கள் மீது வைத்த அன்பு உண்மை என்பதால்,

அவர்களின் குறைகளை புறந்தள்ளி இன்றுவரை உண்மையாக நேசிப்பவன்...

இதில் இன்னொரு வேதனையான விஷயம் ஆரம்பத்தில் சர்வாவால் தான் தன் குடும்பம் நல்வழியில் செல்கிறது என்று சர்வாவின் மீது அபரிமிதமான அன்பை பொழிந்தவர் தான் அவனுடைய தாய்..

ஆனால் இன்று அதே தாய் எங்கே தன் மூத்த பிள்ளை தனக்கான வாழ்வை தேடிக் கொண்டால்,

தன் மற்ற பிள்ளைகளின் வாழ்வு பாதிக்கப்படுமோ என்று அஞ்சுபவர்...

உலகத்தில் இருக்கும் நியதிப்படி ஒரு குடும்பத்தை காப்பாற்ற ஒருவனை பலியிடலாம் என்பதாக தன் மூத்த மகனை தன் குடும்பத்தின் வளத்திற்காக பலியிட்டவர்...

40 வயது வரை அவனின் திருமணத்தை பல விதமாக தடுத்தவர்கள் ஒரு நிலையில் ஊராரின் ஏச்சுபேச்சுக்களை தாங்க முடியாமல் அதே ஊரில் வசித்து வந்த வசதி குறைவான குடும்பத்தில் இருந்து "முல்லை.." என்ற பெண்ணை

அவளுக்கு ஒப்புதல் உள்ளதா இல்லையா என்று அறியாமலேயே திருமணம் செய்து வைத்தவர்கள்..

முல்லையின் தந்தை சர்வாவின் தொழிற்சாலையில் பல வருடங்களாக வேலை பார்த்தவர்..

ஒரு விபத்தில் கால் பெரிதாக பாதிக்கப்பட அவரால் தொடர்ந்து வேலைக்கு வர முடியாத சூழ்நிலை...

அந்தக் குடும்பத்திற்கு பல விதத்திலும் உதவி செய்து இன்றுவரை காப்பாற்றி வருபவன் சர்வா..

வசதி இல்லாத வீட்டில் பெண்ணெடுத்தால் கடைசிவரை தங்கள் பேச்சை கேட்பாள் என்று தங்கள் மகனுக்கு அவன் விருப்பப்படி பெண் தேடாமல்,

தங்களின் சுயலாபத்திற்காக பெண் தேட அந்த பண பேய்களின் கண்களில் விழுந்தவள் முல்லை..

பெற்றவரின் நிலை,, குடும்ப சூழ்நிலை எல்லாம் ஒரு விதத்தில் அவளை படுத்தி எடுக்க

அவளுக்கு பிறகு இருந்த இரு தங்கைகளின் எதிர்காலத்திற்காக அம்மாவும், தாய் மாமாவும் பலவிதமாக வற்புறுத்தியதால்,

இன்று சர்வேஸ்வரனின் மனைவியாக அந்த மாளிகையில் "முல்லை" இருக்கின்றாள் ஊரைப் பொறுத்தவரை சர்வாவின் மனைவியாக...