Yayum Yayum - 16 in Tamil Love Stories by Nithyan books and stories PDF | யாயும் யாயும் - 16

The Author
Featured Books
Categories
Share

யாயும் யாயும் - 16

16. டையோனைசஸ்

ராகுல் என்கிற டையோனைசஸ் என்கிற கிரேக்கக் கடவுளும் மாயாவும் கேண்டீனுக்குச் சென்றனர்.

இரண்டு காஃபி என மாயா ஆர்டர் செய்தாள்.

"எனக்கு எதுக்கு காஃபி எனக்கு தான் இது இருக்குல்ல" என்று தனது கருப்பு நிற ஸ்டீல் வாட்டர் பாட்டிலைக் காட்டினார் ராகுல்.

"காலேஜ்குள்ள அதெல்லாம் நாட் அலோவ்ட் அன்க்கிள் அதனால காஃபி மட்டும் தான்." என்றாள் மாயா.

"நான் யார்னு தெரியுமில்ல எனக்கே கட்டுப்பாடு போட இந்தக் காலேஜால முடியுமா?"

"அய்யோ, ராகுல் அன்க்கிள் நீங்க திடீர்னு ரிகர்சல் ஹால்ல வந்துட்டதுனால தப்பிச்சீங்க. கேட் வழியா வந்திருந்தா உங்களை உள்ளேயே விட்டிருக்க மாட்டாங்க."

"என்னை நிகழ்த்துக் கலையோட கடவுள்னு சொல்றாங்க என்னையே உள்ள விட மாட்டாங்களா?"

"நீங்களாவது கடவுள் தான், நாங்கெல்லாம் இங்கேயே தான் படிக்கிறோம். ஆனாலும் ஐ.டி. கார்டு போடாட்டி எங்களையே உள்ள விட மாட்டங்க"

"ஓஹோ! இவனுக அவ்ளோ பெரியா லார்டுகளா?" என்றார் ராகுல்.

மாயா புன்னகைத்து விட்டு, “அது சரி அன்க்கிள் உங்களுக்கு வாழ்க்கை எப்படி போகுது?"

"என்ன பெரிய வாழ்க்கை மயிறு? நத்திங் இன்ட்ரஸ்டிங்க்" என்றார் ராகுல்.

"ஏன் அன்க்கிள் இப்படி சலிச்சுக்கிறீங்க?"

"வேற என்ன மாயா பண்றது. எனக்குப் பொறந்ததுக எதுவும் சரியாயில்லை. எல்லாம் எப்போ பாரு குடிச்சிக்கிட்டே இருக்காங்க. அதுலேயும் அந்த ப்ரையேபைஸ் எப்போப் பாரு பொம்பளை சோக்குலயே திரியிறான்."

"உங்கப் பசங்க வேற எப்படி அன்க்கிள் இருப்பாங்க?" சிரித்துக் கொண்டே சொன்னாள்.

ஜீயூஸ் பூமிக்கு வந்த முதல் ஆயிரம் ஆண்டுகள் எல்லாம் சரியாகத் தான் போய்க் கொண்டிருந்தது. பின்னர், ஜீயூஸ் கிரக வாசிகளும் பூமியில் இருந்த மனிதர்களும் கலந்து ஜீயூஸ் மனிதர்கள் என்றொரு புதிய இனம் பூமியில் தோன்றியது. அவர்களும் ஜீயூஸின் வாரிசுகள் என்று அடையாளப்படுத்தப் பட்டனர். அதனால் அவர்களே தங்களது மக்களை காக்கிற வேலையை எடுத்துக் கொண்டனர். 
சில ஜீயூஸின் வாரிசுகள் அவர்களது கிரகத்திற்கு திரும்பி சென்றாலும், சில அதிசய சக்திகள் கொண்டவர்கள் பூமியிலேயே இருக்க முடிவு செய்தனர். அவர்களில் ஒருவர் தான் மாபெரும் மேடைக் கலைஞனான டையோனைசஸ்.
ஜீயூஸ் கிரகத்தின் கணக்குப்படி அவருக்கு இப்போது ஐம்பது வயதாகிறது‌. ஆனால், பூமியின் கணக்குப்படி அவர் இங்கு வந்து ஐயாயிரம் ஆண்டுகள் முடிந்து விட்டன. நீண்ட நெடும் வாழ்வை வாழ்ந்து விட்டவர்.

ஜீயூஸ் மனிதர்களுக்கு எதிராக இந்திரசேனையினர் என்ற இன்னொரு அதிசய சக்திகள் கொண்ட மக்கள் பூமியில் தோன்றிய போது, அந்த இனத்திற்கும் இவர்களுக்கும் போர் மூண்டது.

அந்தப் போரில் பல ஜீயூஸ் மனிதர்கள் கலந்து கொண்டனர். ஆனால், டையோனைசஸ் அந்தப் போரிலிருந்து விலகி இசை, நாடகம் என ஒரு அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தார்.

அவர்கள் ஆர்டர் செய்திருந்த காஃபி அந்த மேஜைக்கு வந்தது. இருவரும் அந்த காஃபியை எடுத்துக் கொண்டு தங்களது பேச்சைத் தொடர்ந்தனர்.

"ம்...கேட்க மறந்துட்டேன். டையன்னைரியா எப்படி இருக்காங்க?" என்று கேட்டாள் மாயா.

"இன்னும் அப்டியே தான் இருக்கா. நான் அவனைக் கொன்னுருக்கக் கூடாது கொன்னுருக்கக் கூடாதுன்னு சொல்லிக்கிட்டே இருக்கா" என்றார் ராகுல்.

"இத்தனை வருஷமாவா?"

"எத்தனை வருஷம் ஆனாலும் அவ அப்படித்தான் சொல்லுவா"

"ஏன் அவங்கனால இன்னும் ஹெர்குலீஸை மறக்க முடியல?"

"அவ என் பொண்ணுன்னு சொல்லல மாயா, உண்மையிலேயே அவ ரொம்ப நல்லவ. யாருக்கும் எந்தக் கெடுதலும் அவ நினைச்சதேயில்லை. அவளுக்குப் போய் ஏன் இப்படி ஆச்சுன்னு புரியல.

அவ அக்குலஸ்ன்னு ஒரு வீரனைக் காதலிச்சா. நானும் அந்தக் காதலுக்கு தடை சொல்லல. அவங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிகிட்டு சந்தோஷமா இருப்பாங்கன்னு நினைச்சேன்.

அப்போ தான் திடீர்னு இந்த ஹெர்குலீஸ் வந்தான். என் பொண்ணை பந்தய பொருளா வைச்சு, அக்குலஸ சண்டைக்கு கூப்பிட்டு ஜெயிச்சான். தோத்தவன் நான் அதனால நீ எனக்கு வேண்டாம்னு அக்குலஸ் சொன்னான். ஜெயிச்சவன் நான், அதனால நீ எனக்கு தான் சொந்தம்னு ஹெர்குலீஸ் சொன்னான். அவளோட சம்மதம் இல்லாம அவன் அவளைக் கல்யாணம் பண்ணிக்கிட்டான்.”

ராகுல் தொடர்ந்தார், "ஒரு பொண்ணைக் காதலிச்சவன் அந்தப் பொண்ணோட சந்தோஷமா வாழ்வான் மாயா. ஆனா, அந்தப் பொண்ணை ஜெயிச்சவனுக்கு, அவ ஒரு வெற்றிக் கோப்பை மட்டும் தான். அவனுக்கு இன்னொரு கோப்பை தேவைப்பட்டுச்சு.

லோலேய கல்யாணம் பண்ணிக் கொடுங்கன்னு அவளோட அப்பன் கிட்டப் போய் கேட்டுருக்கான். ஆனா அவன் லோலேய அவனுக்குக் கல்யாணம் பண்ணி வைக்கல.

மரத்துக்கு மரம் தாண்டுற குரங்கு மாதிரி ஒவ்வொரு பொண்ணா தாண்டிட்டு இருக்கிற அவன் கூட ஒரு பொண்ணு எப்படி வாழ முடியும்?

ஒரு பொண்ணுனால எவ்வளவு கொடுமையை தான் மா ஏத்துக்க முடியும். அதான், அவனோட அங்கியில நெசூசோட ரத்தத்தை தடவி அவனைக் கொன்னுட்டா.”

அவர் ஒரு நிம்மதிப் பெரு மூச்சை விட்டு விட்டு, “அவனுக்கு அது தேவை தான் மாயா. ஹெர்குலீஸோட உடம்பே வேக ஆரம்பிச்சிருச்சு. கடைசியில வேதனை தாங்க முடியாம அவனுக்கு அவனே கொள்ளி வைச்சுட்டு சிதையில ஏறிப் படுத்துக்கிட்டான்.” என்று சொல்லிவிட்டு காஃபியை ஒரு மிடறு அருந்தினார்.

“தப்பு அவன் செஞ்சான். அதுக்கான தண்டனை அவனுக்கு கிடைச்சது. ஆனா, வலி மட்டும் என் பொண்ணுக்கு. யாருக்குமே கெட்டது நினைக்காத என் பொண்ணு, இப்படி ஒருத்தனை கொன்னுட்டமேங்கிற குற்ற உணர்வுல பைத்தியம் ஆயிட்டா.

அப்போ இருந்து இப்போ வரை, ‘நான் அவனைக் கொன்னுருக்க கூடாதுன்னு’ புலம்பிட்டே இருக்கா.

நீ இதை மட்டும் நியாபகம் வைச்சுக்கோ மாயா. எல்லோராலயும் ஒரு தப்பு பண்ணிட்டு அதுல இருந்து வெளியில வந்துற முடியாது. நீ என் பொண்ணு மாதிரி மாயா. அவ பண்ணுன தப்பை நீ என்னைக்குமே பண்ணிறக் கூடாது." என்று சொல்லிவிட்டு பெருமூச்சு விட்டார்.

மாயா, இந்தப் பேச்சை மாற்றுவதற்காக, "நான் அப்படி எதுவும் பண்ண மாட்டேன் அன்க்கிள். அதை விடுங்க, ரொம்ப நாள் கழிச்சு என்னைப் பார்க்க வந்திருக்கீங்க. எனக்கு என்ன கொண்டு வந்தீங்க? இல்லை மறந்துட்டீங்களா?" என்று கேட்டாள்.

"அதை எப்படி மாயா மறப்பேன். உனக்காகவே உலகத்துல எங்கேயும் கிடைக்காத ஏதென்ஸ் தோட்டத்துல விளைஞ்ச திராட்சையைக் கொண்டு வந்திருக்கேன்." என்று சொல்லி விட்டு ராகுல் காற்றில் கையை ஆட்டினார். அதில் கருஞ்சிவப்பான திராட்சைப்பழங்கள் தோன்றியது.

"ஐயோ அன்க்கின் நாம காலேக்குள்ள இருக்கோம். தயவு செஞ்சு இங்க எந்த மேஜிக்கும் காட்டாதீங்க." என்றாள் மாயா.

"சரிம்மா சரிம்மா" என்று தலையை ஆட்டினார் ராகுல்.

"சரி, நான் நடிக்கிறத பார்த்தீங்களே, நான் எப்படி நடிக்கிறேன்?"

"மீனுக்கு யாரும் நீந்தச் சொல்லித் தர வேண்டாம் மாயா, அது தான் அதோட இயல்பு. நடிப்பு உனக்கு ரொம்ப இயல்பா வருது. உன்னால யாரா வேணும்னாலும் மாற முடியும். அந்தக் காலத்தில எல்லா தியேட்டர்லையும் நாடகம் போடுறதுக்கு முன்னாடி எனக்கு வணக்கம் சொல்லி அவங்களோட நாடகத்துக்கு வரச் சொல்லுவாங்க. ஆனா, யாரும் கூப்டாமயே நான் உன்னோட நாடகத்துக்கு வரேன்னா, அதுக்கு உன்னோட நடிப்புத் திறமை தான் காரணம்."

"ரொம்ப தேங்ஸ் அன்க்கிள். அப்பாவுக்கு அப்புறம் நீங்க தான் அன்க்கிள் என்னை இவ்ளோ என்கரேஜ் பண்றது. " என்றாள்.

"நானாவே இருந்தாலும் அது அப்பாவுக்கு அப்புறம் தான். இல்லையாமா?" என்று சொன்னார்.

"ஆப்வியஸ்லி அன்க்கிள். சரி எப்படியோ காலேஜ்ஜுக்குள்ள வந்துட்டீங்க. வாங்க அப்படியே எங்களோட ரிகர்சல்லை பார்த்துட்டுப் போங்க."

"நீ எங்க வேணும்னாலும் கூப்பிடு நான் வரேன். ஆனா, உங்க ரிகர்சலுக்கு மட்டும் கூப்பிடாத. அங்க ஒருத்தன் உன்னையே பார்த்துட்டு லூசு மாதிரி சிரிச்சுக்கிட்டே இருந்தானே அவன் பேரு என்ன?"

மாயாவுக்கு கருக்கென்று இருந்தது. "ஏன் அன்க்கிள் கேட்குறீங்க?" என்றாள்.

"ஒன்னுமில்லை மாயா, இந்த உலகத்துல டிரமா ரொம்ப வருமா இருக்கு. அதுக்கும் முன்னாடி இருந்தே நடிப்பு இருக்கு. ஆனா, அவன் நடிப்புன்னு ஒன்னு பண்ணுனான் பாரு, அவனை நான் மறக்கவே மாட்டேன். ஹெர்குலிஸ் மாதிரி அவனையும் உயிரோட எரிச்சு விடப்போறேன் பாரு. அவனெல்லாம் எதுக்கு நடிக்க வரான்னே தெரியல" என்றார் ராகுல்.

அவன் எதுக்கு நடிக்க வருகிறான் என்று மாயாவுக்கு நன்கு தெரியும். அவள் மென்மையாக சிரித்துக் கொண்டாள்.

பின்னர் இருவரும் டிராமா ரிகர்சல் நடக்கிற அறைக்குச் சென்றனர்.

"மாயா, என்ன ஆச்சு? ஏன் திடீர்னு போன? ஏதாவது எமெர்ஜென்சியா?" என்று கேட்டான் மோகன்.

"அப்படியெல்லாம் இல்லை மோகன், என்னைப் பார்க்க திடீர்னு மாமா வந்துட்டாரு அதான் அவரைப் பார்க்கப் போயிருந்தேன்.

இவர் தான் என்னோட மாமா ராகுல். அன்க்கிள் இவங்க தான் என்னோட ஃப்ரெண்ட்ஸ்.

இவ கீதா, இது மகேந்திரன், அவன் டெஸ்லா, அப்புறம் இவன் மோகன்.

நாங்க எல்லோரும் ‘மேக்பத்’ டிராமா போடலாம்னு இருக்கோம்." என்றாள்.

"ஓ! மேக்பத் பண்ணப் போறீங்களா? நான் ஏதாவது ஹெல்ப் பண்ணட்டுமா?" என்று கேட்டார் ராகுல்.

'இந்த பூமர் அன்க்கிள் நமக்கு என்ன பெருசா ஹெல்ப் பண்ண முடியும்' என மகேந்திரன் யோசித்தான்.

மகேந்திரன் மனதில் நினைப்பதைப் புரிந்து கொண்ட ராகுல், "நான் ஷேக்ஸ்பியர் டிராமாவுல கொஞ்சம் எக்ஸ்பெர்ட். அவர் எழுதின எல்லாப் ப்ளேவும் தெரியும். எல்லா டிராமாவும் தெரியும். ஏன், நானே கிட்டத்தட்ட நானூறு வருஷமா ஷேக்ஸ்பியர் டிராமாவுல நடிச்சிட்டும் டைரக்ட் பண்ணிட்டும் இருக்கேன்." என்றார்.

நானூறு வருடம் என்ற வார்த்தையைக் கேட்ட எல்லோரும் ஒரு நிமிடம் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால், டெஸ்லா மட்டும்,

'ஆள் சரியான போதைக் கை போல காலையிலேயே ஏதோ போட்டுட்டு வந்துட்டார் போல' என எண்ணிக் கொண்டான்.

மாயா உடனே, "அது அன்க்கிள் நாப்பது வருஷமா டிராமா போட்டுட்டு இருக்கேன்கிறத தான் அப்படி சொல்றாரு" என்று சொல்லி சமாளித்தாள்.

ராகுலும் "ஆமா ஆமா" என்று சொல்லி தலையை ஆட்டினார்.

'நாம மாயா மனசுல இடம் பிடிக்கனும்னா முதல்ல இவர் மனசுல நம்மளப் பத்தி ஒரு நல்ல அபிப்ராயம் வரணும். ஒருவேளை அது நமக்கு எதிர் காலத்துல தேவைப்பட்டாலும் படலாம். ஆனா, கண்டிப்பா இவர் கிட்ட எந்த கெட்ட பேரும் வாங்கிக் கூடாது.' என மோகன் முடிவெடுத்தான்.

"சரி அன்க்கிள் சொல்லுங்க நாங்க என்னப் பண்ணனும்?" என்று கேட்டான் மகேந்திரன்.

"நீங்க ரிகர்சல் பண்ணுங்க. நான் அதைப் பாத்திட்டு என்னோட சஜெஷன்ஸ் சொல்றேன்." என்றார் ராகுல்.

அனைவரும் அதனை ஒப்புக் கொண்ட பின்னர் ஒத்திகை தொடங்கியது.

மேக்பெத் அரசனாக ஆன பிறகு அனைத்து பிரபுக்களுக்கும் விருந்து கொடுத்தான். அவர்களையெல்லாம் அவர்களது பதவிக்கு ஏற்ப வரவேற்ற பின் அவன் தன் நாற்காலியில் அமரச் சென்றான். ஆனால், அந்த நாற்காலியில் அவனால் வஞ்சகமாக கொலை செய்யப்பட்ட பேங்க்கோவின் ஆவி அமர்ந்திருந்தது அதைப் பார்த்து, மேக்பெத் தான் செய்த குற்றங்களையெல்லாம் உளறத் தொடங்கினான். லேடி மேக்பெத் அதனை மிக சாமர்த்தியமாக சமாளித்து அன்றையை விருந்தை பாதியிலேயே நிறுத்தி விட்டு அவர்களை வெளியே அனுப்பினாள். இந்தக் காட்சியை அவர்கள் ஒத்திகை செய்தனர்.

ராகுல், "போங்கோ, நீ ஆவி தான். ஆனா, அதுக்காக பேய் மாதிரி சிரிக்காத. நீ கொலை பண்ணினதுனால உருவான பேய் இல்லை. தன்னோட நண்பனையே கொன்னுட்டோமேன்னு நினைக்கிற மேக்பெத்தோட குற்றவுணர்வுல இருந்து உருவானப் பேய் அதனால, நீ யாரையும் பயமுறுத்தக் கூடாது. ஒரு நண்பனைப் பார்த்து சிரிக்கிற மாதிரி நீ சிரிக்கணும்" என்று பேங்கோவ் பாத்திரத்தை ஏற்ற ஆட்டோமொபைல் அருணைப் பார்த்து சொன்னார்.

"அப்பறம் மேக்பெத் நீ, இப்போ ராஜா உன்னால எது வேணும்னாலும் பண்ண முடியும். நீ பண்ணுன பாவமெல்லாம் யாருக்கும் தெரியாதுன்னு நினைச்சிட்டு இருக்க, ஆனா இப்போ அது உன் கண் முன்னாடி வந்து உட்கார்ந்திருக்கு அதைப் பார்த்து நீ பைத்தியம் ஆகுற. அப்போ, நீ பேசுற டோன்ல இது எல்லாம் வரணும். நீ சாதாரணமா விருந்தாளிகளை வரவேற்கிறதுக்கு ஒரு டோனும், உன் தப்பையெல்லாம் உளறிக் கொட்டுறதுக்கு ஒரு டோனும் வைச்சிக்கோ. இந்த ரெண்டாவது டோன்ல கொஞ்சம் கிறுக்குத் தனம் இருக்கணும்" என்றார்.

இது போல அவர் அங்கிருந்த அனைவருக்கும் ஆலோசனைகளை வழங்கினார். அந்த ஆலோசனைகளை ஏற்று அவர்கள் ரிகர்சல் செய்ய செய்ய அந்த டிராமாவே அதன் அடுத்த கட்டத்தை நோக்கிப் போய்க் கொண்டிருந்தது.

இந்த பூமர் அன்க்கிளால் தங்களுக்கு என்ன உதவி செய்ய முடியும் என்பதை மகேந்திரன் புரிந்து கொண்டான்.

இறுதியாக அந்த ரிகர்சல் முடிகிற போது ராகுல் சொன்னார்,

"மனுசனா பொறந்த எல்லோருக்குமே ஒரே ஒரு வாழ்க்கை தான் இருக்கு. ஆனா, புத்தகம் படிக்கிறவனுக்கும் நடிக்கிறவனக்கும் தான் இன்னொரு வாழ்க்கையை வாழ்ந்துப் பார்க்க வாய்ப்பிருக்கு. அதனால, மேடையில நீங்க நடிக்கிறீங்கனு நினைக்காதீங்க. நீங்க எடுத்துகிட்ட உங்க பாத்திரத்தோட வாழ்க்கை கொஞ்ச நேரம் வாழ்ந்து பார்க்கணும்னு நினைங்க"