Yayum Yayum - 30 in Tamil Love Stories by Nithyan books and stories PDF | யாயும் யாயும் - 30

The Author
Featured Books
Categories
Share

யாயும் யாயும் - 30

30. இறுதி முத்தம்

விழித்துப் பார்த்த போது அது பகலா இல்லை இரவா என்று தெரியவில்லை. மாலை வெளிச்சம் மங்கத் தொடங்கி இருந்தது. தன் மார்பின் மீதிருந்த வாக்மேனை எடுத்துக் கீழே வைத்தான். இளையராஜாவின் ஏதோவொரு பாடல் அந்த வாக்மேனில் கசிந்து கொண்டிருந்தது.

கொஞ்சம் கொஞ்சமாக தன்னைச் சுற்றி இருந்த அத்தனை மர்மங்களும் விலகுவது போல இருந்தது. இன்னும் இரு கேள்விகளுக்கு மட்டும் முடிவு தெரிந்து விட்டால், பின்னர் தன் மனம் இது தொடர்பாக அரிப்பதை நிறுத்திவிடும் என்று நினைத்தான்.

தனது தாயும் தந்தையும் எப்படி இறந்தார்கள்? தன்னைப் பற்றி தானே தெரிந்து கொள்ளக்கூடாது என ஏன் அத்தை அவனுடைய நினைவுகளை அழித்தாள்?. 

அவள் தன் தந்தையுடன் பிறக்கவில்லை தான், இருந்த போதிலும் அவள் தான் தன்னுடைய அத்தை என்பதில் அவனுக்கு சிறிதும் குழப்பமில்லை. அவள் அப்படி தான் அவனை வளர்த்திருந்தாள். அன்று காலை அவன் கலைவாணியிடம் கோபமாய் நடந்து கொண்டதை நினைத்து வருந்தினான். அத்தை வந்தவுடன் அவளிடம் தனது பெற்றோரைப்பற்றி விசாரிக்கும் முன்பு முதலில் காலை தான் நடந்து கொண்ட விதத்திற்கு மன்னிப்பு கேட்க வேண்டுமென எண்ணிக் கொண்டான்.

யாரோ அந்த வீட்டின் கதவைத் திறந்து மின் விளக்கின் சுவிட்சைப் போட்ட சப்தம் கேட்டது. அந்த அதிர்வில்லாத காலடி ஓசையிலேயே அது அத்தை தான் எனத் தெரிந்தது.

மோகன் எழுந்து தனது முகத்தைக் கழுவி விட்டு ஹாலிற்கு சென்றான். அங்கே அவனது அத்தை என்றும் காணாத ஒரு சோர்வுடன் சோஃபாவில் தலை சாய்த்து, கண்களை மூடி உட்கார்ந்திருந்தாள். அருகில் அவளது கைப்பையை போட்டிருந்தாள்.

மோகன் சென்று அருகில் இருந்த சோஃபாவில் அமர்ந்து கொண்டு, “அத்தை” என்றான்.

மோகனது குரல் கேட்டு கண்விழித்தக் கலைவாணியின் கண்களில் ஏதோவொரு சோகம் ததும்பிக் கொண்டிருந்தது.

“வா மோகன். இன்னைக்கு ரொம்ப சீக்கிரமா வந்துட்டியா? நான் காஃபி போடவா?” என்று சொல்லிவிட்டு சோஃபாவில் இருந்து எழ முற்பட்டாள்.

“இல்லை அத்தை. எதுவும் வேண்டாம். கொஞ்சம் உட்காருங்க உங்ககிட்டப் பேசணும்” என்றான்.

அவனது குரலிலிருந்த முதிர்ச்சி கலைவாணிக்கு வித்தியாசமாக தெரிந்தது. ஒரே நாளில் எப்படி இந்தப் பையன் ஒரு ஆளுமையாக மாறினான் என யோசித்தாள்.

பின்னர், திடமான குரலில், “அதுக்கு முன்னாடி நான் உன்கிட்ட ஒன்னு சொல்லணும் மோகன். நான் உன்னோட சொந்த அத்தை இல்லை. உன் அப்பா கதிரவன் என் கூடப் பொறந்த அண்ணன் இல்லை.

ஆனா, ஒரு அண்ணன் தன் தங்கச்சிக்கு என்ன செய்யணுமோ அதை உன் அப்பா எனக்கு செஞ்சாரு. நான் உனக்கு ஒரு அத்தையா இல்லை. உனக்கு ஒரு அம்மாவா தான் இருக்கணும்னு முயற்சி பண்ணுனேன். இப்போ வரைக்கும் முயற்சி பண்ணிட்டு இருக்கேன்.” என்றாள் கலைவாணி.

அவள் தனது அத்தை இல்லையென்பது முன்னமே தெரிந்திருந்தாலும், அதனை அவளே சொல்லும் போது மோகன் உடைந்து போனான். அவனது தொண்டைக்குழியில் விழுங்க முடியாத ஏதோவொரு கனமான பொருள் சிக்கி இருப்பதைப்போல உணர்ந்தான். அவன் கண்களில் இருந்து அவனை மீறிக் கண்ணீர் வழிந்தது. அந்தக் கண்ணீரோடு அவன் பொய்யாக அணிந்திருந்த முதிர்ச்சியும் கலைந்து போனது,

“ஏன், அத்தை இதை முன்னாடியே சொல்லல?” என்று கேட்டான்.

“நீ கொஞ்சம் பெரிய பையன் ஆனதும் உன்கிட்ட சொல்லலாம்னு இருந்தேன். ஆனா, இதைச் சொன்னா, நீ என்கிட்ட முன்ன மாதிரி பழக மாட்ட, என்னை உன்னோட அத்தையா ஏத்துக்க மாட்டானு நினைச்சு தான் என்னால சொல்ல முடியல.” என்று மோகனுடைய கைகளைப் பிடித்துக் கொண்டு அழுதபடியே சொன்னாள்.

அத்தை மோகனுடைய கையை மிக அழுத்தமாக பிடித்திருந்தாள், அப்போது மோகன் அவனுடைய முழங்கையில் இருந்த தழும்பைப் பார்த்தான். தான் ஒருமுறை சைக்கிள் ஓட்டும் போது கீழே விழுந்து தனது கையில் அடிபட்டு ரத்தம் வழிந்து கொண்டிருந்த போது அத்தை தான் தன்னை தூக்கிக் கொண்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு ஓடினாள். அப்படி ஓடும் போதும் டாக்டரிடம் பேசும் போதும் அவள் அழுது கொண்டே இருந்தது ஒரு நொடியில் நினைவுக்கு வந்தது. அந்த அழுகையை மிக நிச்சயமாக வேறு யாராலும் பொய்யாக வர வழைத்திருக்க முடியாது.

“அத்தை. அத்தைங்கிறது வெறும் லேபிள் தான். ஆனா, நீங்க என் மேல வைச்சுக்கிற பாசம், அக்கறை நீங்க எனக்காக செஞ்ச தியாகம் எல்லாம் எப்படி அத்தை பொய்யாப் போகும். நான் என் அம்மா அப்பாவைப் பத்திக் கூட அதிகமா நினைச்சதே இல்லை. ஏன்னா, நான் உங்களைத்தான் என்னோட அம்மாவா நினைக்கிறேன் அத்தை. அது எப்பவும் மாறாது” என்றான்.

மோகனின் வார்த்தைகள் கலைவாணிக்கு மிகுந்த ஆசுவாசத்தைக் கொடுத்தது. மோகன் இன்னும் தான் வளர்த்த அதே அண்ணன் பையன் தான் என்பதை உறுதி செய்து கொண்ட தருணத்தில் அவளது கண்களில் ஆனந்தக் கண்ணீர் துளிர்த்தது. அவள் மோகனை மிகுந்த வாஞ்சையோடு அணைத்துக் கொண்டாள். மோகனுக்குத் தன் அத்தையிடம் கேட்பதற்கு பல கேள்விகள் இருந்த போதும் இந்த தருணத்தைக் கெடுக்கக்கூடாது என எண்ணி தனது அத்தையைக் கட்டிக் கொண்டான். அவனாலும் இப்போது அவனது கண்ணீரை அடக்க முடியவில்லை.

இருவரும் சில நொடிகள் அழுது கொண்டே கட்டிப் பிடித்துக் கொண்டிருந்த பின்னர், மோகன் கேட்டான், “அத்தை நான் உங்ககிட்ட ஒண்ணு கேட்கலாமா?”

“நீ என்ன கேட்கப் போறேன்னு எனக்குத் தெரியும் மோகன். உன் அப்பா அம்மாவுக்கு என்ன ஆச்சு? நான் ஏன், உன்னோட நினைவுகளை அழிச்சேன். இதைத் தான நீ தெரிஞ்சுக்கணும்னு நினைக்கிற?” என்றாள் கலைவாணி.

“எப்படி தான் நினைத்தது அத்தைக்குத் தெரிந்தது?” எனக் குழம்பினான் மோகன்.

“நான் வீட்டுக்கு வரும் போது வாசல்ல டெஸ்லா காத்துட்டு இருந்தான். அவன் இன்னைக்கு நீ காலேஜ்க்கு வரல அதனால உன்னைப் பார்த்துட்டுப் போக வந்துருக்கேன்னு சொன்னான். நீ, காலேஜ்க்குப் போகாத போதே நான் தெரிஞ்சுக்கிட்டேன். நீ அவங்களைத்தான் பார்க்கப் போயிருக்கேனு. நீ மட்டும் அங்கப் போயிருந்தா உனக்கு கண்டிப்பா அந்த ரெண்டுக் கேள்வி வந்திருக்கும்.

நான் அதுக்கு பதில் சொல்றேன் மோகன். இதுக்கு மேல அதை மறைச்சு வைக்கிறதுல்ல எந்தப் பயனும் இல்லை.”

என்று சொல்லிவிட்டு அதனை அந்த சோஃபாவில் இருந்து எழுந்து தனது அறைக்குள் சென்றாள். உள்ளேயிருந்து ஒரு அட்டைப்பெட்டியை எடுத்து வந்து டீப்பாயின் மேல் வைத்து அதனைத் திறந்தாள். அதில் சரடுகள் போட்டு கட்டி வைக்கப்பட்டிருந்த கடிதங்கள் இருந்தன.

அந்தப் பெட்டியில் எந்தச் சரடுகளாலும் கட்டப்படாத ஒரு இன்லேண்ட் கடிதம் மட்டும் தனியாக இருந்தது. கலைவாணி அதனை எடுத்தாள். அதனை மோகனிடம் நீட்டி, 

“இது தான் உன்னோட அப்பா எனக்கு கடைசியா எழுதுன லெட்டர். இந்த லெட்டரைப் படிச்சதுக்கு அப்புறம் என் வாழ்க்கையே மொத்தமா மாறிப் போச்சு. நீ எப்படி இப்போ உன் வாழ்க்கையில் நீ நம்புனது எல்லாமே பொய்யோன்னு நினைச்சுட்டு இருக்கியோ, அதே மாதிரி தான் நானும் குழம்பிப் போய் நின்னேன்.

என் வாழ்க்கையை நான் எதுக்கு வாழணும்னு நான் நினைச்சுட்டு இருக்கும் போது தான் நீ என்னைப் பார்த்து சிரிச்ச, அப்ப தான் நான் முடிவு பண்ணுனேன். இனிமேல், நான் உனக்காக வாழனும்னு. உன்னை எப்படியாவது வளர்த்திப் பெரிய ஆள் ஆக்கி, உனக்கு பிடிச்ச மாதிரி ஒரு அமைதியான வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுக்கணும்னு.

அதுக்காக தான் இவ்வளவு ஓட்டமும். ஒரு கங்காரு மாதிரி உன்னை எனக்குள்ளயே வைச்சு வளர்த்ததுக்கு காரணமும் அது தான். இப்போ எனக்குள்ள இருந்த ஏதோவொன்னு என்னை விட்டுட்டுப் போன மாதிரி இருக்கு.

இந்தா, இது தான் உன்னோட அப்பா எழுதுன கடைசி லெட்டர். இதுல உன்னோட எல்லாக் கேள்விக்கும் பதில் கிடைக்கும்.

உன் அப்பா சொல்வாரு, ‘காகிதத்துல எழுதுனதை ரொம்ப சுலபமா அழிச்சிட முடியும். ஆனா, அதே நேரத்துல அது ஒரு இரும்பு மாதிரி கனமான ஒண்ணுன்னு.’ இப்போ தான் புரியது அது எவ்ளோ கனமான ஒன்னுன்னு. இந்தாப் பிரிச்சு படி” என்று சொல்லி விட்டு அந்தக் கடிதத்தை மோகனிடம் நீட்டினாள்.

மோகன் அந்தக் கடிதத்தை வாங்கி அதனைப் பிரித்தான்.

‘அன்புள்ள தங்கைக் கலைவாணிக்கு, 

ஆரம்பிப்பதற்கு கொஞ்சம் கிளீஷேவாகத் தான் இருக்கிறது. ஆனாலும், இந்தக் கடிதத்தை வேறு எவ்வகையிலும் ஆரம்பிக்க முடியாது.

இந்தக் கடிதத்தை நீ படித்து விடக் கூடாது என்ற குறிக்கோளுடன் தான் எழுதுகிறேன். அதையும் மீறி நீ இந்தக் கடிதத்தைப் படித்துக்கொண்டிருக்கிறாய் என்றால், நானும் உன் அண்ணியும் இன்னேரம் இறந்திருப்பேன்.

நாங்கள் ஒன்றும் உன்னை எதுவும் இல்லாமல் வெறுமனே விட்டுச் செல்லவில்லை. உன்னால், சுமக்க முடியாத ஒரு சுமையை உன் தோள்களின் மீது விட்டுச் செல்கிறோம்.

இனிமேல், மோகன் உன்னுடையவன். அவளை வளர்த்து அவனுக்கு ஒரு நல்ல வாழ்வை நீ அமைத்துக் கொடுப்பாய் என நாங்கள் நம்புகிறோம்.

இவ்வளவு பெரிய பொறுப்பை நீ சுமக்க வேண்டுமானால், உனக்கு சில விஷயங்கள் நிச்சயமாக தெரிந்திருக்க வேண்டும். ஏனென்றால், நாங்கள் இறந்தவுடன், நீ இதுவரை பார்த்திராத பல புதிய முகங்கள் உன்னைத் தேடி வரும். ஏதேதோ சொல்லி மோகன் மீதான உனது உரிமையை உடைத்து அவனை உன்னிடம் இருந்து பிடுங்கிக் கொள்ள நினைப்பார்கள். அப்போது நீ குழம்பி விடக்கூடாது என்பதற்காகவே இப்போது உன்னிடம் சில உண்மைகளை சொல்ல விரும்புகிறேன்.

நீ என் தங்கை தான் என்பதும் நான் உன் அண்ணன் என்பதும் எப்போதும் மாறாதவொரு உண்மை. ஆனால், நாம் இருவரும், ஒரே தாயின் கருவில் பிறந்தவர்கள் அல்ல.

“இங்கப் பாரு தங்கச்சி” என்று என் பெற்றோர்கள் உன்னை என்னிடம் கொடுக்கவில்லை. ஆனால், “இந்தாப் பிடி, நீ வாழ்வதற்கு ஒரு காரணம்” என இந்த வாழ்க்கை எனக்குக் கொடுத்த தங்கை நீ. இதை நீ எப்படி எடுத்துக் கொள்வாய் என எனக்குத் தெரியவில்லை. ஆனால், மிக விரைவிலேயே இதனை ஜீரணம் செய்து கொள். ஏனென்றால், உன்னிடம் இன்னும் பல உண்மைகளை சொல்ல வேண்டும்.

நான் ஒரு ரகசிய அமைப்பில் வேலை செய்தேன். என் வாழ்வில் என்னைத் தவிர வேறு யாரும் இருந்ததில்லை. ஒரு மிக உயரிய ஒரு நோக்கத்திற்காக என் உயிரைப் பணயம் வைத்தும் பல உயிர்களை எடுத்தும் செய்கிற வேலை எனது. அப்படி வேலையின் பொருட்டு நான் அலைந்து கொண்டிருந்த நேரத்தில் ஒரு விபத்தில் இருந்து உன்னைக் காப்பாற்றி அழைத்து வந்தேன்.

ஒரு வார காலம் நீ வெறுமனே மூச்சு மட்டும் விட்டுக் கொண்டிருந்தாய். உன்னை பரிசோதித்த மருத்துவர்கள் எந்நொடியும் நீ இறப்பாய் என்று சொன்னார்கள். ஆனால், நீ ஒவ்வொரு நொடியாக வென்று ஒரு வாரத்திற்கு மேல் உயிரோடு இருந்தாய்.

‘இது என்ன அதிசயம்?’ என டாக்டர்கள் குழம்பிக் கொண்டிருந்த போது என் வாழ்வில் ஒரு பேரதிசயம் நிகழ்ந்தது. ஒரு நாள் நீ கண் விழித்தாய், என்னை “அண்ணா” என்றழைத்தாய்.

எனக்கு முதன் முதலாக குடும்பம் என்ற ஒன்று வேண்டுமெனத் தோன்றியது. அந்நொடியே உனக்கு அண்ணனாகிப் போனேன். வாழவேண்டுமென ஆசையும், உயிர் மீதான பயமும், ஒரு சேர என்னை வந்து இறுக்கிக் கொண்டது.

அந்த நேரத்தில் எனது உயிர் நான் வேலை செய்கிற அமைப்பிற்கு சொந்தமாக இருந்தது. அந்த அமைப்பிலிருந்து வெளியேற நினைத்த நேரத்தில் தான், உன் அண்ணி மேக்னாவைச் சந்தித்தேன்.

உன்னை நான் அக்கறையாக கவனித்துக் கொண்டதை கவனித்த மேக்னாவுக்கு என் மீது காதல் வந்தது. ஒரு சூடான காஃபியினூடாக அவள் தனது காதலைச் சொன்னாள். அது போன்ற ஒரு காஃபியை நான் அதற்கு முன் குடித்ததில்லை. என்னைப் பற்றிய முழுவதையும் உன் அண்ணியிடம் சொன்னேன். அவளுக்கு என் கடந்த காலத்தால் எந்தப் பிரச்சனையும் இல்லை. நான் மட்டும் “ம்…” என்று சொன்னால் போதும், என் வாழ்க்கையை மாற்றி விடுகிறேன் என்றாள்.

நானும், “ம்…” என்று சொன்னேன். என் வாழ்க்கையை மாற்றி விட்டாள். என் வேலையை ராஜினாமா செய்து விட்டு முழு நேர குடும்பஸ்தன் ஆனேன். அண்ணன், கணவன் என வாழ்க்கை இன்பமாய் போய்க் கொண்டிருக்கையில் மோகன் பிறந்தான். என்னை முழுமை செய்தான். என் கண்களுடனும் அவள் மூக்குடனும் பிறந்தான். 

ஒரு தந்தை ஆனேன். அவனுக்கு மட்டுமல்ல இந்த உலகிற்கே தந்தை ஆனேன். அவன் பிறந்த பிறகு உலகிலுள்ள அனைத்துக் குழந்தைகளும் என் குழந்தைகள் ஆயின. எங்கு எந்தக் குழந்தைக்கு எந்தத் தீங்கு நடந்தாலும் என் உள்ளம் கசிந்தது. மற்ற அனைத்து குழந்தைகளின் சிரிப்பிலும் நான் மோகனையே கண்டேன்.

அது தான் நான் என்னுடைய உச்ச கட்ட மகிழ்ச்சியில் இருந்த நாட்கள். ஒரு மனிதனுக்கு எப்போதும் அவன் சோகமான நாட்கள் தான் நினைவிலிருக்கும். ஏனென்றால், மகிழ்ச்சியான நாட்களையெல்லாம் அது மகிழ்ச்சியான நாள் தான் என்பதை அவன் அறிந்திருக்க மாட்டான். ஆனால், நான் அப்படியல்ல. அந்த ஒவ்வொரு நாட்களையும் நான் எண்ணி எண்ணி மகிழ்ந்திருந்தேன்.

திடீரென இன்று நான் அந்த ஜப்பானிய சிறுமியை காப்பற்றியது. என்னுள் எதையோ கிளறிவிட்டுவிட்டது. நான் இப்போது என் வேலையில் விட்டு வைத்த மிச்சத்தை தீர்க்கப் போகிறேன். ஒரு வேளை இதில் நானும் உன் அண்ணியும் இறக்க நேரிடலாம்.

அப்படி நாங்கள் இறக்கும் பட்சத்தில் மோகன் உன்னுடைய பொறுப்பு. அவனுக்கு அவனுடைய தந்தை இது போல ஒரு ரகசிய அமைப்பில் இருந்தான் என்பது தெரியவே கூடாது. அவன் ஒரு சாதாரணமான அமைதியான ஒரு வாழ்க்கையை வாழ வேண்டும், அது உன் கையில் தான் இருக்கிறது.

மீண்டுமொருமுறை சொல்கிறேன். இந்தக் கடிதம் நீ படிக்கக் கூடாது என்று நினைத்து தான் எழுதிக் கொண்டிருக்கிறேன். ஆனால், அதையும் மீறி, நீ இந்தக் கடிதத்தைப் படிக்கிறாய் என்றால்,

நீ என்னிடம் சண்டை போட்ட எனது எழுத்து மேஜை இனி உனது. அதன் சாவி, அந்த மேஜையில். இருக்கிற பேனா ஸ்டேண்டிற்கு அடியில் இருக்கிறது. அந்த மேஜையின் டிராயரைத் திறந்தால். நான், எனக்கு நானே எழுதிக் கொண்ட சில கடிதங்களை நீ கண்டுபிடிக்கலாம். அதை நீ வாசிக்கின்ற போது, என்னைப் பற்றியும் எனது வேலையைப் பற்றியும் இன்னும் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம்.

உன்னை நீ பார்த்துக் கொள். மோகனைப் பார்த்துக் கொள். கவனமாக இரு.

என்னிடமும் உன் அண்ணியிடமும் இருந்து உனக்கு இறுதி முத்தங்கள்.

போய் வருகிறோம்.

பேரன்புடன்,
உன் அண்ணன் கதிரவன்.’