33. விசாரணை
இறந்த அந்த மூதாட்டியை கருப்பு அங்கி அணிந்திருந்த நால்வர் வந்து தூக்கிச் சென்றனர். மாயாவும், சுற்றியிருந்த அனைவரும் அந்த மூதாட்டியின் உடல் பின்னே சென்றனர். அந்தக் குகையின் இடது புறம் செல்லச் செல்ல அங்கொரு சிறப்பு மயானம் இருப்பதை மாயா கவனித்தாள். அந்த மயானம், மிக சுத்தமாக அழகாக பராமரிக்கப்பட்டிருந்தது. இத்தனை நாட்கள் தங்களுக்காக தியாக வாழ்க்கையை வாழ்ந்தவர்களுக்கு தரக் கூடிய மரியாதை என அந்த மயானத்தை பராமரிப்பதை அவர்கள் நினைத்தார்கள்.
அங்கே, அந்த முன்னாள் தலைவிக்காக தோண்டி வைக்கப்பட்டிருந்த குழி இருந்தது. அந்தக் குழியில், அந்த மூதாட்டியின் உடலை ஒரு சந்தனப் பெட்டியில் வைத்து உள்ளே இறக்கினர். பின், அவளது உடலுக்கு ஜீயூஸ் படையினரின் ராணுவ மரியாதை தரப்பட்டது. அனைவரும் தங்களது ஆயுதங்களை, தரையில் வைத்தனர். பின், அனைவரும் அந்தப் பெட்டியின் மீது மண்ணைப் போட்டு மூடினர். பின், அங்கு சமாதியை கட்டுவதற்கான பணி தொடங்கியது. சிரியஸ் என்றழைக்கப்பட்ட ஜீயூஸ் படையின் பொறியாளர் குழுவின் தலைவன், தனது மாய சக்தியால் அங்கொரு அழகிய சமாதியை ஒரு நொடியில் உருவாக்கினான்.
அந்தச் சமாதி அத்தனை கலைப் பூர்வமாக இருந்தது. இதனை தனது மனதில் வடிவமைக்க சிரியஸ் பல மாதங்கள் எடுத்துக் கொண்டிருக்க வேண்டும். பொறியாளனில், அவன் ஒரு கலைஞன்.
சுற்றியிருந்த அனைவரும் அவரவர் ஆயுதங்களை எடுத்துக் கொண்டனர். அத்துடன் அங்கு இறுதி சடங்கு முடிந்தது. ஆனால், அங்கு யாருக்கும் ஒரு துளி கூட கண்ணீர் வரவில்லை.
முன்னாள் தலைவிக்கான இறுதிச் சடங்குகளை முடித்துவிட்டு அனைவரும் மீண்டும் அந்த பதவியேற்பு நிகழ்த்தப்பட்ட அறைக்கு வந்தனர். அது தான் படை சார்ந்த முக்கிய முடிவுகளை விவாதிக்கக் கூடிய ஆலோசனை சபையாக இருந்தது. அங்கே அவரவர் இருக்கைக்கு அருகே சென்று அனைவரும் நின்று கொண்டனர். அந்த சபையின் நடு நாயகமாக ஒரு மேடை இருந்தது. அந்த மேடையின் நடுவே ஒரு அரியாசனம் போடப்பட்டிருந்தது. தரையிலிருந்து இருபத்தியொரு படிகளைக் கடந்து அந்த மேடையில் ஏறி மாயா அந்த அரியாசனத்தில் அமர்ந்தாள். அவள் அமர்ந்ததும் அனைவரும் அவரவர் இருக்கையில் அமர்ந்தனர்.
அந்த சபையில் நலன் என்றழைக்கப்பட்ட ஒரு மூத்த அதிகாரி எழுந்து நின்று, “புதிய தலைவிக்கு வணக்கங்கள். இந்த சபை இதற்கு முன் பல தலைவர்களால் தலைமை தாங்கப்பட்டுள்ளது.அவர்களது திறனால் நமது படை பல வெற்றிகளைக் குவித்துள்ளது. அவர்களது புகழ் ஓங்குக. அது போல உங்களது தலைமையும் இந்தப் படைக்கு வெற்றிகளை அள்ளித் தருவதாக.
நமது சபைக்கு ஒரு வழக்கு வந்துள்ளது. அதனை தலைவி என்ற முறையில் தாங்கள்தான் விசாரித்து நல்ல தீர்ப்பை வழங்க வேண்டும். அந்த வழக்கை இங்கு முறையிட உங்களது அனுமதியைக் கோருகிறோம்.
“ம்…” என்றாள் மாயா.
“ம்” என்ற ஒற்றை எழுத்தில் அதிகாரத்தை குவிக்கிற கலையை தன் மகள் எப்படி கற்றாள்? என முத்துக்குமரன் வியந்து கொண்டிருந்தார்.
நலன், “இருவரும் வாருங்கள்“ என்று சொன்னவுடன், இரண்டு பேர் மாயாவின் முன் வந்து நின்றார்கள். அதில் ஒருவனுக்கு காட்டெருமையின் தலை இருந்தது. இன்னொருவனுக்கு குதிரையின் தலை இருந்தது. இருவருக்குமே கழுத்துக்கு கீழே மனிதர்களின் கட்டுமஸ்தான உடல் இருந்தது. அந்தச் சபையிலிருந்த அத்தனை பேரையும் இந்த இரண்டு பேர் நினைத்தால் எந்த ஆயுதமும் இன்றி கொலை செய்ய முடியும் என்று தோன்றுமளவிற்கு இருவரும் மிகுந்த பலசாலிகளாக தோன்றினர்.
நலன் தொடர்ந்தார், “தலைவி, இவர்களும் நம்மைப் போன்ற ஜீயூஸ் மனிதர்கள் தான். பூமி வாசிகளைப் போன்ற தோற்றம் இல்லாததால் காட்டில் யாருக்கும் தெரியாமல் பதுங்கி வாழ்கிற பல இனக்குழுக்களைப் போல இவர்களும் வாழ்கிறார்கள். குதிரையர்கள் எருமையர்கள் இந்த இரண்டு இனக்குழுக்களில் இருந்தும் நமது படைக்கு பலர் பங்காற்றியுள்ளனர். பங்காற்றிக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் இருவரும் அந்தந்தக் குழுக்களின் தலைவர்கள்.
இப்போது இவர்களுக்குள்ளே ஒரு பிரச்சனை எழுந்துள்ளது. இந்த இரு இனக்குழுக்களும் ஒரே காட்டில் தான் வாழ்ந்து வருகிறார்கள். இந்த இரு இனக் குழுக்களின் வாழ்விடங்களுக்கு இடையே ஒரு நதி ஓடுகிறது. அந்த நதி தான் இந்த இரு குழுக்களின் நிலங்களைப் பிரிக்கிற எல்லைக் கோடாக இருக்கிறது.
அந்த நதியை ஒட்டி ஒரு அதிசய மரம் உள்ளது. அந்த மரத்தின் வேர் குதிரையர்களின் நிலத்தில் உள்ளது. அதன் கிளைகள் ஆற்றைக் கடந்து எருமையர்களின் நிலத்தில் நீண்டுள்ளது. எருமையர்களின் நிலத்தில் நீண்டுள்ள கிளையில் ஒரு கனி கனிந்துள்ளது. அது அரிதினும் அரிதாக விளையக் கூடிய கனி. நூறாண்டுகளுக்கு ஒரு முறை விளையக் கூடியது. அதை உண்பவர்களுக்கு அவர்களுடைய ஆற்றலை நூறு மடங்கு பெருக்கக் கூடியது. ஆனால், அந்தக் கனியை ஒருவர் முழுதாக உண்ண வேண்டும்.
இந்தக் கனிக்கு உரியவர் யார் என்பது தான், இவர்களுக்கு இடையே இருக்கிற பிரச்சனை. மரத்தின் வேர் குதிரையர்களின் நிலத்தில் இருப்பதால் அந்தக் கனியை அவர்கள் உரிமை கோருகிறார்கள். அதன் கிளை தங்களது நிலத்தில் வருவதால் அந்தக் கனி தங்களுக்கு சொந்தமென எருமையர்கள் உரிமை கோருகிறார்கள். இதற்கான நியமான தீர்ப்பை வேண்டி இரு இனத்தாரும் தங்களிடம் வந்துள்ளனர்.” என்று முடித்தார் நலன்.
மாயா ஒரு நிமிடம் யோசித்தாள். சுற்றி இருந்த அனைவரும் மாயாவையே பார்த்தனர். ஒரு சிலர் அந்தப் பார்வையில் ஏளனத்தை ஒளித்து வைத்திருந்தனர்.
இந்த வழக்கில் பழத்தை யாரேனும் ஒருவருக்குத் தான் தர முடியும். பழம் பெறாத இனக்குழுவுக்கு மிக நிச்சயமாக தலைமை மீது அதிருப்தி ஏற்படும், அவர்கள் தங்களுக்கு அநீதி இழைக்கப்படதாக கருதுவார்கள். தங்களது இன வீரர்களை ஜீயூஸ் படையிலிருந்து விலகிக் கொள்ளச் செய்வார்கள். இதனால், படை பிரியும், இது படைக்குள்ளேயே ஒரு போரை உருவாக்கும். பொது லட்சியம் இந்தச் சிறிய பழத்தால் கெடும்.
இந்தச் சிறிய பெண் எப்படி இந்தப் பிரச்சனையை தீர்க்கப் போகிறாள்? இறந்து போன முன்னாள் தலைவி இறப்பதற்கு முன்னதாக இறுதியாக இந்தப் பிரச்சனையையாவது தீர்த்து வைத்திருக்கக் கூடாதா என்று பலர் நினைத்தனர். ஆனால், அந்தச் சபையில் வரக் கூடிய அனைத்து வழக்குகளுமே இதே போன்று தீவிரத் தன்மை கொண்டவை தான். இது போன்ற ஆயிரமாயிரம் வழக்குகளை விசாரித்து சலித்துப் போயிருந்த முன்னாள் தலைவியை மேலும் துன்புறுத்த வேண்டாமென்றெண்ணி இந்த வழக்கை அவளிடம் கொண்டு செல்லவில்லை.
மாயா தீர்க்கமான குரலில் சொன்னாள், “அந்தப் பழத்தைக் கொண்டு வாங்க”.
அந்த அதிசய கனி அவள் முன் கொண்டு வரப்பட்டது. மாயா அதனைக் கையில் வாங்கிப் பார்த்தாள். பின், தன் முன்னே இருந்த இருவரையும் நோக்கி,
“இந்தப் பழத்துல உங்க ரெண்டு பேருக்குமே உரிமை இருக்கு. ஆனா, இந்தப் பழத்தை யாரோ ஒருத்தருக்கு தான் தர முடியும். அதனால, இந்தப் பழத்தை யாரோ ஒருத்தர் இன்னொருத்தருக்கு விட்டுக் கொடுத்திருங்க. விட்டுக் கொடுக்கிறவங்களுக்கு உங்களோட தலைவிங்கிற முறையில என்னோட பாதுகாவலரா இருக்கிற பெருமையை நான் தறேன்.” என்றாள் மாயா.
இது ஒரு நல்ல பரிவர்த்தனை என சுற்றியிருந்த பலருக்கும் தோன்றியது. ஏனென்றால், தலைமுறை தலைமுறையாக குதிரையர் இனமும் எருமையர் இனமும் எப்போதுமே அதிகார வட்டத்திற்குள் வருவதற்கு அனுமதிக்கப்பட்டது இல்லை. அப்படி அனுமதிக்க மறுத்த பலருக்கும் இந்த பேரம் பிடிக்கவில்லை.
அவர்களைப் பெரும்பாலும் போரில் முன் வரிசையில் நிற்க வைப்பதற்கு மட்டுமே பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் இருந்து தலைவியின் அருகே நிற்கிற இடத்திற்கு செல்வது ஒரு நல்ல முடிவு என்று எருமையாருக்கு தோன்றியது. ஆனாலும், அதற்காக இந்த அதிசயக் கனியை இழக்க அவர் விரும்பவில்லை.
“இத்தனை நாட்களாக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த எங்களை உங்கள் பாதுகாவலராக நியமிப்பதாக சொல்வதை நான் வரவேற்கிறேன் தலைவி. ஆனாலும், அதற்காக இயற்கை எங்களுக்கு கொடுத்த அதிசயக் கனியை இழக்க நாங்கள் தயாராக இல்லை. அதனால், நாங்கள் கனியை விட்டுக் கொடுக்க மாட்டோம்” என்றார் எருமையார்.
அவசரமாக, “நானும் இதை விட்டுக் கொடுக்க மாட்டேன்” என்றார் குதிரையார்.
பேச்சுவார்த்தை தோல்வியுற்றதை உணர்ந்த மாயா நிதானமாக யாரும் எதிர்பாராத ஒரு நொடியில் அந்தப் பழத்தை தூக்கி அந்த சபை நடுவே பதவியேற்பு சடங்கிற்காக அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் வீசியெறிந்தாள். அத்தனை பேரும் திகைத்து எழுந்து நின்றனர்.
மாயா பொறுமையாக, “இந்தப் பழம் இனி யாருக்கும் சொந்தமில்லை. இந்த வழக்குல இதுக்கு மேல பேச ஒன்னுமில்லை.” என்றாள்.
இரண்டு இனத்தலைவர்களது கண்களும் கோபத்தில் கணன்று கொண்டிருந்தன.
முதலில் எருமையர் இனத் தலைவன் பேசத் தொடங்கினான்.
“இது என்ன அநியாயம்! இந்த அரிய கனியை ஏன் அழிக்க வேண்டும். படையினரின் உடைமையை அழிக்க தலைவிக்கு அதிகாரம் இல்லை?”
குதிரையர் இனத் தலைவன், “இவளுக்கு என்ன திமிர் இருந்தால் இப்படி ஒரு காரியத்தைச் செய்வாள்? யார் இவளுக்கு இந்த அதிகாரத்தை கொடுத்தது. பல நூறு ஆண்டுகளாக ஜீயூஸ் படையில் போரிடுபவர்கள் நாங்கள். இவள் ஒரு போரிலாவது கலந்து கொண்டிருக்கிறாளா? அல்லது கண்களால் கண்டிருக்கிறாளா? இன்று புதிதாக படையில் இணைந்து விட்டு எங்களுக்கு தலைவி ஆக இவளுக்கு என்ன தகுதி இருக்கிறது?” என்றான்.
அப்போது நந்தன் என்ற அதிகாரி குறுக்கிட்டு, “குதிரையரே இங்கே பேசப்படும் ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் பேசுபவர்களே பொறுப்பேற்க வேண்டும். முறைப்படி அவர் தலைவி ஆகி இருக்கிறார். ஜீயூஸ் படையின் தலைவியை மதிக்காமல் ஒருமையில் பேசுவது. சபை விதிகளின் படி தவறு. இதற்காகவே உங்களுக்கு மரண தண்டனை விதிக்க முடியும்.” என்றார்.
எருமையர் இனத் தலைவன், “என்ன நந்தன் அவர்களே மிரட்டிப் பார்க்கிறீர்களா? நீங்கள் இரு தனி ஆட்களை மிரட்டவில்லை, இரு போர் இனங்களை மிரட்டுகிறீர்கள். நாங்கள் நினைத்தால் இப்போதே எங்களது கானகம் இந்தச் சபை மீது போர் தொடுத்து வரும்.
புதிய தலைவி தன் ஏற்ற பொறுப்பை மறந்து அந்தப் பதவி கொடுத்த ஆணவத்திலும், அந்த மரகத ஊசி மூலம் கிடைத்த மரணமில்லா வாழ்வு கொடுத்த திமிரிலும் பேசுகிறார். நாங்கள் இந்த சபையில் நியாயத்தைக் கேட்கிறோம்.
தகுதியே இல்லாத ஒருவருக்கு இத்தகைய பொறுப்பு கொடுக்கப்படுகிற போது இது போலத் தான் நடக்கும். இந்த தலைவி மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. உடனடியாக இவரது பதவி பறிக்கப்பட வேண்டும். இவர் மீது நியாய விசாரணை நடத்தப்பட்டு, இவருடைய செயலுக்கு மரண தண்டனை கொடுக்கப்பட வேண்டும். இல்லையென்றால் எங்களுடைய இரு இனங்களும் ஜீயூஸ் படையிலிருந்து விலகிக் கொள்ளும்” என்றார்.
குதிரையர் இனத் தலைவனுக்கு போர் நன்றாகத் தெரியும். ஆனால், எருமையர் இனத் தலைவனுக்கு அரசியல் நன்றாக தெரியும். இப்போது, எருமையர் சொன்ன வார்த்தைகள் படையின் பிற உறுப்பினர்களை கண்டிப்பாக அசைத்துப் பார்க்குமென அவருக்குத் தெரியும். அது நிகழவும் செய்தது.
அதுவரை அமைதியாக இருந்த மாயா, “எருமையாரே, எனது போர்த்திறனைத் தான், தாங்கள் என்னுடைய தகுதி என நினைக்கிறீர்களா? எனது நிர்வாகத் திறன் தலைமைப் பண்பு என பல திறன்களை பரிசோதிக்கிற கடினத் தேர்வுகளைத் தாண்டி தான் நான் இங்கு வந்திருக்கிறேன், என்பது உங்களுக்கு தெரியாதா? அந்தத் தகுதிகள் போதாதா?”
“அந்தத் தகுதிகள் தேவை தான். ஆனால், போர் வீரர்களின் பிரச்சனைகளை புரிந்து கொள்ள கொஞ்சமேனும் தலைமையில் இருப்பவர்களுக்கு போர்த்திறன் தேவை. அது இல்லாததால் தான், இப்போது இது போன்ற அநியாய தீர்ப்பு தரப்பட்டுள்ளது.” என்றார் எருமையர் இனத் தலைவர்.
“சரி, அப்படியென்றால் நீங்களே சொல்லுங்கள், நான் எப்படி எனது போர்த்திறனை உங்களுக்கு நிரூபிப்பது.”
எருமையர் மிகுந்த அரசியல் சாதுரியத்துடன் ஒன்று சொன்னார். மொத்த சபையும் அதனை ஏற்றுக் கொண்டது. முத்துக்குமரன் மட்டும் தன் முஷ்டியை இறுக்கிக் கொண்டார்.