அழும் நந்தனாவைப் பார்க்க அர்ஜுனிற்கு கஷ்டமாக இருந்தது, நந்தனா ப்ளீஸ் அழுறத நிறுத்து யாரவது பார்த்த தப்ப நினைக்கப்போறாங்க என்றான், இருக்கும் இடம் கருதி நந்தனாவும் தன் அழுகையை அடக்கினாள். பின் சிறிதுநேரத்திற்கு அங்கு கடல் அலையின் ஓசையை தவிர வேறு எந்த பேச்சுகளும் இல்லை.
நீண்ட மௌனத்திற்கு பிறகு நந்தனா பேசத் தொடங்கினாள், அப்ப நீங்க துர்காவுக்கு பயந்துதான் கல்யாணம் வேண்டான்னு சொல்றீங்களா?
இல்ல, எனக்கு பயந்து வேண்டான்னு சொல்ற, திருமண வாழ்க்கைக்கு நான் ரெடி ஆகிட்டேனானு தெரியாமலே ஸ்வாதியை திருமணம் செஞ்சுக்கிட்டேன், அதுக்கப்புறமும் அவ என்ன செய்றா, அவளோட பிரச்சனைகள் என்னனு தெரியாமலே என்னோட வேலை, என்னோட முன்னேற்றம்னு ஓடிட்டு இருந்துட்டேன். ஒரு வகையில ஸ்வதியோட மரணத்துக்கு நானும் காரணம். ஒரு கணவனா அவளுக்கு நான் எதையும் சரியா செய்யல. என்னோட கேரியர்ல சக்ஸஸ் பண்ணிட்டேன், ஆனா பேமிலி லைப்ல மோசமா தோத்துட்டன். என்னால திரும்ப ஒரு பொண்ணோட வாழ்க்கையை கெடுக்க முடியாது. குறைஞ்சபட்சம் யாழினிக்கு ஒரு நல்ல அப்பாவ இருக்கனுன்னு நினைக்குறேன்.
சொல்லிமுடித்தவனைக் கோவமாகப் பார்த்தவள் அதே கோவத்தோடு வெரி குட், நீங்க செஞ்ச தவறு உங்களுக்கு தெரிஞ்சிருக்கு, அதை நினச்சு வருத்தப்படுறீங்க ஆனா அந்த தப்புக்கு நீங்க பலிகொடுத்தது ஒரு பொண்ணோட உயிர், நீங்க மட்டும் சரியா இருந்திருந்தா இன்னைக்கு யாழினி அம்மா இல்லாத குழந்தையா வளர்ந்திருக்க மாட்டாள். உங்களோட பொறுப்பில்லாத தன்மைக்கு ஸ்வாதி கஷ்டப்பட்டு, நீங்க கஷ்டப்பட்டு, உங்க குடும்பத்தை கஷ்டப்படுத்தி இப்ப யாழினியையும் கஷ்டப்படுத்திகிட்டு இருக்கீங்க.
அன்னைக்கு நீங்க என்கிட்ட ஒன்னு சொன்னீங்க நியாபகம் இருக்கா, வாழ்க்கை எல்லாருக்கும் சிரிக்குறதுக்கான வாய்ப்பை குடுக்குறதில்லைனு, இப்ப நான் சொல்றேன் சிரிக்க முடியாத உங்களோட இந்த நிலைக்கு நீங்க தான் காரணம். அழகான குடும்பம் இருந்தும், தோல்கொடுக்க தம்பி இருந்தும் உங்க வாழ்க்கையை நீங்கதான் சிக்கலாக்கி வெச்சிருக்கீங்க. இப்ப அதுல உங்களோட சேர்ந்து யாழினியும் சிரிப்பை தொலைச்சிகிட்டு இருக்காள். யாழினிக்கு நல்ல அப்பாவ இருக்கனுன்னு நீங்க உண்மையா நினைசீங்கனா இந்த கல்யாணத்துக்கு ஓத்துக்கோங்க என்று ஒரு வேகத்தோடு சொல்லி முடித்தாள்.
கண் மூடி அவள் சொல்லியவற்றை நினைத்துப் பார்த்த அர்ஜுனிற்கு அவள் சொல்வதில் இருந்த உண்மை சுட்டது. யாழினி தன்னால் கஷ்டப்படுவது உண்மை, தன் குடும்பம் சந்தோசத்தை தொலைத்திருப்பது உண்மை, அதை சரி செய்யும் பொறுப்பு தனக்கு இருக்கிறது என்று எண்ணியவன் ஒரு முடிவோடு கண்களை திறந்தான்.
நந்தனாவைக் கண்ணோடு கண் பார்த்து நிதானமாக நான் இந்த கல்யாணத்திற்கு சம்மதிக்கிறேன் என்று கூறினான் அர்ஜுன். அவனது பார்வை நந்தனாவின் உயிர் வரை தொட்டது, தன்னை மறந்து அவள் அவனை பார்த்துகொண்டிருந்தாள், மேற்கொண்டு ஏதோ கேட்கவந்தவனை அவளது பார்வை பேசவிடாமல் செய்தது, ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு நின்றது எவ்வளவு நேரமோ தெரியவில்லை. கடல் அலையில் விளையாடி கொண்டிருந்த சிறுவர்களின் கூச்சலில் இருவரும் மோனநிலையில் இருந்து கலைந்தனர்.
அவனைப் பார்க்க சங்கடபட்டு நந்தனா முகத்தை வேறுபுறம் திருப்பிக்கொண்டாள், சில நிமிடங்கள் கழித்து அர்ஜுன் அந்த கேள்வியைக் கேட்டான்,
இந்தக் கல்யாண விஷயத்துல ஏன் இவ்வளவு பிடிவாதமா இருக்க?
அவனை திரும்பி பார்த்தவளுக்கு உனக்காகத்தான் என்று கூற வேண்டும்போல் இருந்தது, அதை மறைத்து உங்களுக்கு சொன்னா புரியாது அர்ஜுன், என்னைக்கு நீங்க யாழினி பற்றி என்கிட்ட சொன்னீங்களோ அன்னைக்கே நான் உங்கள கல்யாணம் செஞ்சுக்குறதுனு முடிவு பண்ணிட்டேன். இப்ப இல்லை எப்பவும் அந்த முடிவுல மாற்றம் கிடையாது என்று ஒரு உறுதியோடு சொன்னாள்.
அர்ஜுன் மேற்கொண்டு அதைப் பற்றி எதுவும் கேட்காமல், நானே ரெண்டு வீட்டுலையும் விஷயத்தைச் சொல்லிடுறேன், நீ சொல்லாத என்று கூறினான். சரி என்று ஒத்துக்கொண்டவள், கதிர்கிட்ட மட்டும் நான் சொல்லிடுறேன் என்னால அவன்கிட்ட சொல்லாம இருக்க முடியாது என்றவள், அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் எனக்கு இந்த கல்யாணத்துல எந்த கண்டிஷனும் கிடையாது என்னால எப்பவும் எதுக்காகவும் கதிரை விட்டுகுடுக்க முடியாது, அவன்கூட பேசாம என்று சொல்லி கொண்டிருந்தவளை கையை காட்டி தடுத்தான் அர்ஜுன்.
நந்தனா, ஏதோ வெளி ஆள் பத்தி சொல்ற மாதிரி சொல்ற, ஒரு விஷயம் நல்லா புரிஞ்சுக்கோ இந்த கல்யாணம் உனக்கு புதுசா ஒரு குடும்பத்த கொடுக்குமே தவிர, உன்கிட்ட இருந்து யாரையும் பிரிக்காது. உங்க நட்பை பார்த்து நான் பொறாமைபட்டிருக்கேன், நமக்கு இப்படி ஒரு நட்பு இல்லாம போச்சேன்னு, அதுனால உனக்கு இந்த கவலையே வேண்டாம் என்று கூறியவனை காதலோடு பார்த்தாள். அவன் பார்ப்பதற்கு முன் பார்வையை திருப்பிக்கொண்டவள், பொறாமைபட்டீங்களா? அப்ப இன்னைக்கு வீட்டுக்கு போன உடனே அம்மாகிட்ட சொல்லி எங்களுக்கு சுத்தி போட சொல்லணும் என்று கூறியவளை பார்த்து சிரித்தவன் இந்த அடாவடி நந்தனாவை கொஞ்சநாளா நான் மிஸ் பண்ணினேன் என்று கூறினான். வரும்போது இருந்த இறுக்கமான மனநிலை மாறி இருவரும் லேசான மனதோடு வீட்டிற்கு சென்றனர்.
அங்கிருந்து கிளம்பிய நந்தனா, வீட்டிற்கு செல்லாமல் வீட்டிற்கு அருகில் இருக்கும் பார்க்கில் இருந்து கதிருக்கு போன் செய்து அவனை அங்கு வர சொன்னாள். கதிரின் அப்பா அவனுக்கென்று சென்னையில் ஒரு வீட்டை வாங்கி இருந்தார். கீழ் வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டு மேல் வீட்டைத் தனக்கென்று வைத்துக்கொண்டான் கதிர். ஆனால் அவன் அந்த வீட்டில் தங்கிய நாட்களை விரல் விட்டு எண்ணிவிடலாம், அவன் எப்பொழுதும் நந்தனா வீட்டில் தான் இருப்பான். அவனாக அவன் வீட்டிற்கு சென்றாலும் சாவித்திரியும், சந்தியாவும் மாற்றி மாற்றி போன் செய்து எப்போ வர எப்போ வர என்று கேட்டே அவனை வரவைத்து விடுவார்கள்.
நந்தனா வீட்டிற்குத் தெரியாமல் கதிரிடம் ரகசியம் பேசவேண்டும் என்றால் அவனை எப்பொழுதும் அந்த பார்க்கிற்குத் தான் வர சொல்வாள், என்ன பிரச்சனைன்னு தெரியலையே என்று எண்ணிக்கொண்டே வந்த கதிர், தோழி முகத்தில் இருந்த சிரிப்பைக் கண்டு நிம்மதி அடைந்தான். என்ன மச்சான் சுவிட்ச் போடாமயே பல்பு எரியுது என்ன விஷயம் என்றான், நந்தனாவிற்கு அர்ஜுனின் கடந்தகாலத்தைக் கதிரிடம் சொல்ல விருப்பமில்லை. எனவே அர்ஜுன் கல்யாணத்திற்கு சம்மதித்த விஷயத்தை மட்டும் கூறினாள்,
அய்யனார் ஓகே சொல்லிட்டாரா? வாவ்! சூப்பர் டா. என்று தோழியை கட்டியணைத்து அவனது சந்தோசத்தை வெளிப்படுத்தினான்.
இருவரும் சந்தோசமாக அதைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தனர், அவர்கள் சந்தோஷத்தில் மரத்திற்கு பின் வேறுஒருவருக்காக காத்துகொண்டிருந்த துர்காவை கவனிக்கத் தவறி விட்டனர். அர்ஜுன் பெயரைக் கேட்டவுடன் காதுகள் கூர்மையாகி அவர்கள் பேசுவதைக் கேட்ட துர்காவிற்கு அவர்கள் பேசிக்கொண்ட விஷயம் வெறியைக் கிளப்பியது. இந்த சந்தோசத்தை நிலைக்க விடமாட்டேன் என்று மனதினில் கருவிக்கொண்டவள் அவர்கள் கவனிக்கும் முன் அங்கிருந்து வேகமாக சென்றுவிட்டாள்.