இறைவன் நினைத்து
விட்டால்
நீ எதையும் வெல்வாய்!
வேகம் வேகம் வேகம் ரேஸ் கார்களின் வேகம் காற்றைக் கிழித்துக் கொண்டுப் பறந்தன.சுற்றி நிற்கும் மக்களின் கண்களுக்கு எந்த கார் முதலிடம் வரும் என்று புரியவில்லை. முதலில் வருவதை கணித்து அவர்கள் ஆரவாரம் செய்தால் இரண்டாவதாக வருவது அதனை முந்தி அவர்களின் கருத்தை பொய்யாக்கி வருகிறது.முதலில் வரும் காருக்காக ஒரு பக்கம் பணம் கட்டிப் பந்தயம் வைத்துக் கொண்டிருந்தார்கள் சிலர்.
அதில் ஒருவன்"மச்சான் ஒரு லட்ச்சம் பெட்றா"
"டேய் என்னடா வாங்குன சம்பளத்த அப்படியே இதுல எறக்குற.அப்புறம் பிச்சை எடுத்து தான் வீடு போயி சேரப் போற. என் கிட்ட மச்சி அஞ்சு கொடு பத்துக் கொடுனு வாய தொறந்த கொன்றுவேன் பாத்துக்கோ"
"டேய் பெட்டா இல்லயா"
"டேய் உன் நல்லதுக்கு சொன்னா.சரிடா பெட்டுடா" இரண்டாமவனும் ஒத்துக் கொள்ள
"என்னைப் பார்த்தா பிச்சை எடுக்கப் போறேன்னு சொல்ற. பாருடா வெண்ண மவனே. நான் பெட்டு கட்டுனது யாரு மேலனு நெனச்ச"மனதிற்குள் சிரித்துக் கொண்டான்.
கார்களின் வேகம் அசுரத்தனமாக இருக்க முதலாமவன் பந்தயம் கட்டிய கார் கடைசியாக வந்து கொண்டிருந்தது.அதிலும் ஒரு கட்டத்தில் கட்டுப்பாட்டை மீறி இரண்டு தடவை பல்டி அடித்து விட்டது.
"மச்சான் போச்சா இதுக்கு தான் ஓவரா ஆடக் கூடாதுனு சொல்றது.காரு கரப்பான் பூச்சிய கவுத்து போட்ட கணக்கா கெடக்குது.அநேகமா ஆளு அவுட்டுனு நெனைக்குறேன்"
முதலாமவன் உலகத்தில் உள்ள மொத்த கடவுளின் வேண்டிக்கொண்டு மரண பீதியில் கவிழ்ந்து கிடக்கும் காரை பார்த்துக் கொண்டிருக்க பாதுகாப்பு படையினர் வந்து காரில் உள்ளவனை வெளியே இழுக்க முயற்சி செய்து கொண்டிருந்தனர்.மற்றும் சிலர் காரை நிமிர்த்த அடி பட்டவன் தனக்கு ஒன்றுமில்லை என சமாளித்து மற்றவர்கள் தடுக்க மீண்டும் காரில் ஏறி அமர்ந்தான்.மற்றைய கார்கள் எல்லாம் வேகமாய் முடிவிடத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் வேளை.
ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டவன் தன் காரை அசுரவேகத்தில் இயக்கினான். மக்கள் அனைவரும் திறந்த விழி மூடாமல் பார்த்துக் கொண்டிருக்க அனைத்து காரையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு முதலிடத்தை தொட்டு விட்டான் அவன். இங்கே பந்தயம் கட்டிய முதலாமவன் துள்ளி குதித்தான்.
"ஹேய் சொன்னேன்ல மச்சி. அவன் யாரு?அக்கௌன்ட் நம்பர் சொல்றேன் இப்பவே பணத்த என்னோட் அக்கௌன்ட்டுக்கு போட்டு விடு." இரண்டாமவன் தன் தோல்வியை ஒத்துக் கொண்டு பணத்தை மற்றவனின் வங்கிக் கணக்குக்கு மாற்றினான்.
அங்கே தனது காரில் இருந்து இறங்கி அவன் முக கவசத்தை கழட்டினான். மக்கள் அனைவரும் "ஏகே ஏகே" என கோஷமிட்ட தனது வலது கையை தூக்கி அனைவருக்கும் காட்டினான் ஏகே எனும் ஆதித்த கரிகாலன்.
ஆசியாவின் புகழ்பெற்ற முன்னணி கார் ரேஸர்களில் ஒருவன். ஒரு சாமானிய குடும்பத்தில் பிறந்து தனது கனவுக்காக உயிரை பணயம் வைத்து, என்று அனைவரும் நிமிர்ந்து பார்க்கும் ஒரு நிலைக்கு வந்திருப்பவன். இந்நிலைக்கு அவன் வர இழந்தது கொஞ்ச நஞ்சமில்லை.
இரவு நட்சத்திர விடுதியில் சொகுசு அறையின் பால்கனியில் நின்று நட்சத்திரங்களைப் பார்த்துக் கொண்டிருந்தான்.கையில் வோட்கா.மேல்சட்டை அணியாமல் வெறும் டிரேக் பேண்ட் அணிந்திருந்தவனின் சிகை தோளை தொட்டு உரசி முத்தமிட்டுக் கொண்டிருந்தது. இலக்கில்லாமல் வெறித்துக் கொண்டிருந்தவனின் நினைவை அது தொல்லை கொடுக்கவே கையில் வைத்திருந்த க்ளாஸில் இருந்த மதுவை ஒரே மடக்கில் வாயில் சரித்தான். கிளாஸை மேஜையில் வைத்து விட்டு கூந்தலை அள்ளி கொண்டையாக போட்டான்.
நீண்ட நாள் சவரம் காணாத முகமும், தோளைத் தொடும் சிகையும் மற்றவர்களுக்கு வேண்டுமானால் ஃபேஷனாக இருக்கலாம். ஆனால் அவனுக்கு அது பெரும் வலி. தனது தோற்றத்தின் மேல் அக்கறை காட்டாத பாவம். பணம் காசு பேரு புகழ் அனைத்தும் இருந்து என்ன? அவள் ஒருத்தி இல்லாமல் போய் விட்டாளே.
ஆயிற்று இன்றோடு அவள் விட்டுச் சென்று ஐந்து வருடங்கள் ஆகி விட்டது. புரிந்து கொள்ளாமல் பிரிந்து சென்றவளை எண்ணி இன்னும் வாடிக் கொண்டிருக்கிறான் ஆதி.
"வேணா ஆதி, எனக்கு ரொம்ப பயமா இருக்கு"
"ஹேய் என்ன பயம் உனக்கு? நான் தான் உன் கூடவே இருக்கேனே?"அவளது கையைத் தொட்டான் ஆதி.
அவன் கைப்பிடியில் இருந்து தனது கையை உருவிக் கொண்ட குழலி
" பயமே உன்ன நெனச்சு தான். உனக்கு ஏன் இந்த வேண்டாத வேலை. இத்தன நாள் நீ உருப்படியா தானே இருந்த.திடீர்னு என்ன கார் ரேஸ்"
அவள் எதைப் பற்றி பேசுகிறாள் என்பதை அறிந்து கொண்டே
" குழலி இது தான் உன் பிரச்சனையா?உனக்கு புரியுதா?என்னோட ட்ரீமே இது தான்.பெஸ்ட் ரேஸர் ஆகணும். அதுக்கான நேரம் இப்பதான் கூடி வந்துருக்கு.எவ்வளவு பெரிய ஒப்புர்ச்சுனிட்டி தெரியுமா இது.இதுல கலந்துக்கிட்டு என்னோட பெஸ்ட் கொடுத்தே ஆகணும்."
குழலியின் முகம் கோபத்தில் சிவந்தது.
"வேணா ஆதி என் வாயில நல்லா வந்துறப் போவுது.நீ இதுல கலந்துக்கவே கூடாதுன்னு நான் சொல்லிக்கிட்டே இருக்கேன்.நீ என்னடானா திரும்பத் திரும்ப அதையே சொல்ற.எனக்கு நீ ரேஸர் ஆக வேணாம். புரிஞ்சுக்கோ ஆதி நமக்கு இன்னும் ஒரு வாரத்தில கல்யாணம் ஆகப் போகுது.
உனக்கு நான் முக்கியம் இல்லையா.என் பயம் உனக்கு பெருசா தெரியலையா."
வார்த்தைகள் முடியும் முன்பே கண்ணீர் வெளி வந்து விட்டது.அவளது கண்ணீர் அவனது இதயத்தை சுட்டது. உயிர் வரை துடித்தது.
"குழலி இப்ப எதுக்கு நீ அழற? ப்ளீஸ் எனக்கு எதுவும் ஆகாதுன்னு மொத நீ நம்பனும். நீ எனக்கு ஏதாச்சும் ஆயிடும்னு பயம் இருந்தா ஆகத்தான் செய்யும்"
அவன் எதார்த்தமாக சொல்ல போனதை அவள் விபரீதமாக புரிந்து கொண்டாள்.
"ஓ ஆமா ஆதி.இப்ப சொல்லிட்டீங்க தானே. உங்களுக்கு இனிமே எது ஆனாலும் அதற்கு நாம் தான் பொறுப்பு.ஏன்னா நான் தான் மூதேவி மாதிரி அழுதுட்டே இருக்கேன்.என்னோட பயம் தான் உங்களுக்கு ஆக்சிடென்ட் ஆக காரணம்.அப்படித்தான் சொல்ல வரீங்க"
என்றுமே குழலி பேசினால் அதனை குறுக்கிடாமல் கேட்டுக்கொண்டே இருப்பான் ஆதி.அவளின் குரல் பட்டிலும் மென்மையாக இருக்கும். பேசும்போது அவளது கண்களும் புருவ நெளிவுகளும் கூட அவனை போதையேற்றும். ஆனால் இன்றோ முதன் முறையாக அவளது குரல் அவனுக்கு கடுப்பை தந்தது. ஒரு விஷயம் அது நல்லதோ கெட்டதோ எது நடந்தாலும் சரி, பதறாமல் அந்த இடத்தை அமைதியாகக் கடந்து செல்பவன் ஆதித்த கரிகாலன்.
அப்படி இருக்கும் பட்சத்தில் விபத்தே நடக்காமல் அவனுக்கு ஏதோ விபத்து நடந்து அவன் மரணித்தத்தை போல அவள் பேசிக் கொண்டே செல்ல யாருக்கு தான் கடுப்பு வராது.
"என்ன நான் பேசிக்கிட்டே இருக்கேன் நீங்க பேசாம உட்கார்ந்திருக்கீங்க.என்னை அழ விட்டு வேடிக்கை பார்க்குறீங்க தானே?"
"ப்ச் குழலி நீயா எதுவும் கற்பனை பண்ணிக்காத. நீ எங்க என்ன பேச விடுற?இல்ல நீ கேட்கிற கேள்விக்கு என்ன பதில் சொல்லனும்னு நினைக்கிற.உன்னோட ஓவர் திங்கிங்க மொத நிப்பாட்டு.உன்னோட குருட்டு கேள்விக்கு எல்லாம் என்னால பதில் சொல்ல முடியாது"
"ஓகே பைன் மிஸ்டர் ஆதித்த கரிகாலன்.உங்களுக்கு என்னிக்குமே உங்கள பத்தி மட்டும் தான் நினைப்பு.என்னை பத்தி உங்களுக்கு எந்த அக்கறையும் கிடையாது. நீங்க ஆட்டி வைக்கிற பொம்மை மாதிரி என்னை நினைக்கிறீங்க.நான் ஒன்னும் பொம்மை இல்ல.உயிர் இருக்கிற மனுஷி.என்னோட பயம் என்னோட மனசு இது எதுவுமே உங்களுக்கு தேவையில்ல.அந்த வீணாப்போன கார் ரேஸ் தானே உங்களுக்கு ரொம்ப முக்கியமா போயிடுச்சு.அதையே கட்டிக்கிட்டு அழுங்க."குழலி வேகமாக அங்கிருந்து கிளம்பினாள்.
அவள் கையை இறுக்கமாக பிடித்த ஆதித்த கரிகாலன்" எங்க போற"
" உங்கள விட்டு போறேன்" அவள் சொன்ன பதிலில் அவனது கண்கள் இடுங்கியது. வெளியே ரேஸர்கள் தயார் நிலையில் இருக்கும்படி அறிவிப்பு வந்தது.இன்னும் சிறிது நேரத்தில் அவன் இத்தனை நாட்களாக போராடி கொண்டிருக்கும் கார் பந்தயம் தொடங்கியிருக்கிறது. ஆதித்த கரிகாலனின் முதல் கார் பந்தயம்.
ஆதித்த கரிகாலனின் கோச் வந்து அழைத்தார்.இன்னும் அவனின் கரம் குழலியை இருக்கமாக பிடித்து இருந்தது.
"குழலி ரொம்ப பெரிய தப்பு பண்ற.அவசரப்படாதே.எதுவா இருந்தாலும் மொத நா போயி ரேஸ் முடிச்சுட்டு வரேன். பொறுமையா உட்கார்ந்து பேசலாம்"
அவனின் சமாதானங்களை கேட்கும் நிலையில் குழலி இல்லை " நீ ரேஸ்ல கலந்துக்க கூடாது "முடிவாக கூறினாள்.
" பைத்தியம் மாதிரி பேசாத. "
"என்கூட வா ஆதி"
" முடியாது குழலி.இது என்னோட வாழ்க்கைடி உனக்கு புரியுதா இல்லையா"
அவளைத் தன் நெஞ்சோடு இறுக்க அணைத்து இந்த வார்த்தைகளை கூறினான். அதற்கு குழலி தனது நீண்ட நகத்தால் அவனது இருபக்க கன்னத்தையும் பிடித்து
" நானா இல்ல இந்த ரேஸ்ஸா இப்போ முடிவு பண்ணு" என்றாள்.கோச் திரும்ப அழைத்தார்.கண்களால் அவளிடம் கெஞ்சினான் ஆதித்த கரிகாலன்.குழலி மசியவில்லை. மீண்டும் அவனுக்கு அழைப்பு வந்து விட கண்களை இறுக்கமாக மூடி திறந்தவன் அவள் கரத்தை மெல்ல நழுவ விட்டான்.குழலி கண்ணீரோடு அவன் முகத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே இரு வினாடிகள் அவளது முகத்தில் தன் கண்களை மேய விட்டான் ஆதித்த கரிகாலன். பின் தன்னுடைய முகத்தை மாற்றிக் கொண்டு அவளை திரும்பியும் பாராமல் சென்று விட்டான்.
இந்த முதல் கார் பந்தயத்தை பற்றி அவனுக்கு ஆயிரம் கனவுகள்.அனைத்துமே சுக்கல் சுக்கலாக நொறுங்கி விட்டது. வலி மனம் முழுவதும் வலி. வார்த்தையால் விவரிக்க முடியாத வலி. கம்பனும் ஏமாந்து விட்டான் இந்த வலிகளை வார்த்தையால் கோர்க்க.எழுத்து கடவுள் சரஸ்வதி தேவி வந்தால் கூட காதல் உடையும் வலியை எடுத்துச் சொல்ல முடியுமா? நெஞ்செல்லாம் எரிந்தது. தொண்டையை அடைத்தது. ஸ்டேரிங்கை பிடிக்க முடியாமல் கைகள் நடுங்கியது.ஆனாலும் ஒரு வெறி. எப்படி தன்னுடைய காதலை தூக்கி எறியலாம் என்ற வெறி.அந்த வெறியை அவனது முதல் கார் பந்தயத்தில் வெற்றி அடைய செய்தது.
ஐந்து ஆண்டுகள் இன்றோடு. இன்னும் குழலி பத்த வைத்து சென்ற தீ அவனது நெஞ்சத்தில் அணையாமல் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது.
தொடரும்..