kollaiyadithaval neeyadi - 2 in Tamil Love Stories by theannila books and stories PDF | கொள்ளையடித்தவள் நீயடி - 2

Featured Books
Categories
Share

கொள்ளையடித்தவள் நீயடி - 2

காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியில் நோக்க
தாக்கத் தாக்கத் தடையறத் தாக்க 
பார்க்கப் பார்க்கப் பாவம் பொடிபட..

இறுக்கமாக மூடிய விழிகளின் ஓரத்தில் துளிர்த்த கண்ணீர் கன்னங்களில் வழிந்து ஓடிடும் முன்பே விழி மடல் திறந்து அதற்கு முட்டுக் கட்டை போட்டாள்  ஐஸ்வர்ய நத்தினி. சில நேரங்களில் வாய் விட்டு கூற முடியாத பிரார்த்தனையை ஒரு துளி கண்ணீர் வார்த்தையாக வடித்து விடும். சொல்லிச் சொல்லி மரத்து போன விஷயம். சொல்வதற்கு அவளிடம் வார்த்தையே இல்லை.  வார்த்தைகள் வற்றி போகும் போது கண்ணீர் அந்த இடத்தை நிரப்புவது இயல்பு தானே?

"நர்மதா இன்னும் எவ்ளோ நேரம்டி வெயிட் பண்றது. உன் பொண்ணு என்ன கோவில் பூசாரியா? சாமி கும்பிட போனா ஒரு மணி நேரம்,  குளிக்கப் போனா ஒரு மணி நேரம், ஒருவேளை சொன்னா முடிஞ்சது.அன்னைக்கு நாள் பூரா அதையே செஞ்சிகிட்டு இருக்கிறது. சரியான அசமஞ்சம்.. பட்டுனு வர சொல்லுடி உன் பொண்ண" ஈஸ்வரன் காலில் சாக்ஸ் மாட்டிக் கொண்டே மனைவியை சத்தம் போட்டார்.

"ஏங்க, அவ இன்னும் சாப்பிடக் கூட இல்ல. ஒரு பத்து நிமிஷம் வெயிட் பண்ணுங்க."நர்மதா மெதுவாக கணவனிடம் கூறினார்.

மனைவி கூறியதைக் கேட்டு கடுப்பாக்கிய ஈஸ்வரன்

"இன்னும் உன் மக கொட்டிக்கலையா?எப்ப சாப்பிட்டு நான் எப்போ ஆபீஸ் போய் சேர்ரது? ஒரு வேலைன்னா சட்டுனு செய்யணும். உன் பொண்ணு தான் போனா போன இடமாச்சே..அவ சாப்பிட்டு ஆடி அசைஞ்சு வரச் சொல்ல விடிஞ்சிரும்.ஹெவி டிராபிக். கொஞ்சம் லேட்டா போனாலும் தலை வலி.ஒரு நாள் சாப்பிடலைனா உன் பொண்ணுக்கு ஒன்னும் ஆயிடாது வர சொல்லுடி"..

தந்தையின் குரல் கேட்க ஆரம்பித்த அந்த நொடியே தனது பூஜையை முடித்து விட்டு,  தண்ணீர் பாட்டிலில் தண்ணீரை நிரப்பி,அதனை நர்மதா ஆசையாக பூ வேலைப்பாடு செய்து கொடுத்த எம்பிராய்டரி பேக்கின் உள்ளே வைத்தபடி வந்து நின்றாள் நந்தினி.

"அப்பா நான் கிளம்பிட்டேன்" அவளை ஒரு பார்வை கூட பார்க்காமல் தனது கார் சாவியை எடுத்துக் கொண்டு முன்னால் நடந்தார் ஈஸ்வரன்.

"வரேன்மா"

"ஹேய் என்னடி காலையில அஞ்சு மணிக்கு எந்திரிச்ச.. இன்னும் ஒரு வாய் டீ கூட குடிக்கல.உங்கப்பாவுக்கு தான் அவசரம்.அவர் மட்டும் நல்லா சாப்டாரு.மத்தவங்களுக்கும் பசிக்கும்னு அவருக்கு ஏன் புரிய மாட்டுதோ.வெறும் வயித்துல எப்படிடி இருப்ப. மதிய சாப்பாடு டப்பால போட்டு வெச்சேனே எடுத்துட்டியா".. நர்மதா கேட்கவும் தான் சாப்பாடு எடுக்க மறந்தது நினைவு வந்தது நந்தினிக்கு.

" என்னடி நீ"குடுகுடுவென்று உள்ளே ஓடினார் நர்மதா. அதற்குள் வெளியே காரில் அமர்ந்திருந்த ஈஸ்வரன் ஹார்ன் அடிக்க அவசரமாக செருப்பை மாட்டிக்கொண்டு அம்மா போயிட்டு வரேன் என்று நந்தினி காரின் பின் இருக்கையில் ஏறி அமர்ந்தாள். அவள் கதவை கூட ஒழுங்காக சாத்தவில்லை அதற்குள் ஈஸ்வரன் வண்டியை கிளப்பினார்.

நந்தினி என்று அழைத்துக் கொண்டு ஓடிவந்த நர்மதா கண்களுக்கு கார் மறைந்து தேய்ந்தது.கையிலிருந்த உணவு பாத்திரத்தை பார்த்த நர்மதாவுக்கு மனம் கனத்துப் போனது. காலையில் ஐந்து மணிக்கு எழுந்ததிலிருந்து ஒரு நிமிடம் கூட அமராமல் பம்பரமாய் வேலை செய்த பெண். ஒரு வாய் தேநீர் கூட அருந்தாமல் கிளம்பி விட்டாள்.

ஈஸ்வரன், காஞ்சிபுரம் தான் அவரின் பிறப்பிடம். நெசவுத் தொழில் அவரின் குடும்பப் பின்னணி. பள்ளிக்கூடப் பக்கம் எட்டியும் பாராத குடும்பத்தில் பிறந்த ஈஸ்வரன் மட்டுமே அந்த குடும்பத்தின் முதல் பட்டதாரி. அது கூட அவரின் தந்தை பன்னீர்செல்வம், மிதி மிதி என மிதித்து படிக்க வைத்ததால் எடுத்த பட்டம்.படிப்பு என்றாலே எட்டிக்காய் ஈஸ்வரனுக்கு. அப்படிப்பட்ட அவரை அடித்து துவைத்து பி ஏ பி எல் படிக்க வைத்திருந்தார் பன்னீர்செல்வம்.

சட்டம் படித்து வக்கீலாக பிரபல வக்கீல் பீதாம்பரம் அவர்களிடம் ஜூனியராக சேர்ந்தார் ஈஸ்வரன்.படிப்படியாக சட்ட நுணுக்கங்களை கற்றுத் தேர்ந்தார். பன்னீர்செல்வம் எதில் எப்படியோ ஆனால் ஒரு விஷயத்தில் மகனின் குணமறிந்து பெண்ணைத் தேர்ந்தெடுத்தார். தூரத்து உறவுக்கார பெண்ணான நர்மதா பார்வைக்கு நல்ல அழகி. ஆனால் பாவம் ஒருவேளை கஞ்சிக்கு படாத பாடுபடும் குடும்பம். பள்ளிப்படிப்பை அறவே அறியாத குடும்பத்தை சேர்ந்தவர் நர்மதா.கிராமத்தில் பண்ணையாரிடம் வாங்கிய சொற்ப பணத்திற்கு கணக்கு தெரியாமல், அசலுக்கு மேலேயே வட்டி கட்டி பஞ்சத்தில் அடி வாங்கிய குடும்பம்.

பணத்தை ஒரு கட்டத்திற்கு மேல் கொடுக்க முடியாமல் நர்மதாவை பண்ணையார் வீட்டில் எழுதப்படாத அடிமையாக வேலைக்கு சேர்த்து விட்டார்கள் அவரது வீட்டார். இளம் பிராயத்தில் நர்மதா அறிந்தது அனைத்துமே வேலை வேலை வேலை மட்டுமே. அப்படி கஷ்டத்தை மட்டுமே அனுபவித்து பக்குவப்பட்ட பெண்ணாக இருந்த அவரை தான் பன்னீர்செல்வம் தேடி வந்து பெண் கேட்டு தன் மகனுக்கு திருமணம் முடித்து வைத்தார்.

ஈஸ்வரனுக்கு நர்மதா மேல் பெரிதாக ஈர்ப்பு ஒன்றுமில்லை.பார்வைக்கு அழகாக இருந்தார். ஈஸ்வரன் வாயைத் திறந்து சொல்வதற்குள் அவரின் தேவைகளை நொடியில் நிறைவேற்றி வைத்தார் நர்மதா. அவருக்காகவே அளவெடுத்து செய்த அடிமை போல நர்மதா இருந்ததால் அவர்கள் குடும்ப வாழ்க்கை எந்த பிரச்சனையும் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறது இன்று வரை.

இன்று சென்னையில் பிரபல வக்கீல் ஈஸ்வரன் பி ஏ பி எல் என்றால் தெரியாதவர்கள் யாரும் இல்லை. ஈஸ்வரன் நர்மதா தம்பதிகளுக்கு மொத்தம் மூன்று குழந்தைகள்.

பெரியவள் செல்வகுமாரி. அம்மாவின் அழகை கொள்ளையடித்துப் பிறந்தவள். பிறக்கும்போதே தந்தைக்கு அதிர்ஷ்டத்தைக் கொண்டு வந்தவள்.  அப்படிதான் ஈஸ்வரன் எண்ணினார்.  யாராலயும் வெல்லவே முடியாது என்று நிராகரித்து பயந்து பின் வாங்கிய வழக்கை ஏதோ ஒரு அசட்டு தைரியத்தில் கையில் எடுத்தார் ஈஸ்வரன்.  செல்வகுமாரி பிறக்கும் அன்று தான் அந்த வழக்கின் இறுதி முடிவு. மனைவியை பிரசவ வார்டில் சேர்த்து விட்டு,  தன்னுடைய அம்மாவை துணைக்கு இருக்க வைத்தவர் நீதிமன்றம் வந்து விட்டார்.

அவராலயே நம்ப முடியாத விஷயம் அந்த வழக்கு ஜெயித்தாகி விட்டது. பெரியப் பெரிய வக்கீல்கள் கூட எடுத்து நடத்த யோசித்த வழக்கை வெற்றி கண்டு பெருமிதத்தில் மருத்துவமனை வந்து சேர்ந்தார் ஈஸ்வரன்.  அந்நேரத்தில் அவருடைய அம்மா மயிலம்மாள்

"ஈஸ்வரா பாருடா பொண்ணு கிடைச்சாலும் புதன் கிடைக்காதுனு சொல்லுவாங்க. புதன் கிழமை பொண்ணு பொறந்துருக்குடா".. சில நேரங்களில் சூழ்நிலை நம்மை வெற்றிக் கொண்டு விடும். அது மாதிரி தான் முதல் குழந்தை ஆணாகப் பிறக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட ஈஸ்வரனே பெண் குழந்தை பிறந்த நேரம் தான் இந்த வழக்கில் வெற்றி பெற்றதாக எண்ணினார்.

தனக்கு அதிர்ஷ்டத்தைக் கொண்டு வந்த குழந்தைக்கு செல்வகுமாரி என்று பெயரிட்டார்.பெயரைப் போலவே செல்வகுமாரி தந்தையின் செல்வ மகளாக வளர்ந்தாள்.அவள் ஆசைப்பட்டது எல்லாமே அந்த வீட்டில் நடக்கும்.ஈஸ்வரன் ஒரு சிக்கலான குடும்ப வழக்கை வெற்றிகரமாக வாதாடி ஜெயித்து கொடுக்க அதற்கு நன்றிக்கடனாக, அவருக்கு உண்டான ஃபீஸ்ஸையும் கொடுத்து கூடவே போனசாக கார் ஒன்றினை பரிசளித்தார் விநாயகம்.

அப்போது வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வந்த செல்வகுமாரியை பார்த்த விநாயகம், தன் மகனுக்கு அவளைப் பெண் கேட்டார்.இருபக்கமும் பேச்சு வார்த்தை வேகமாக வளர்ந்தது. மணமகன் மணமகளுக்கு திருமணத்தில் பூரண சம்மதம். இருவரின் ஜாதகங்களும் பொருத்தம் பார்க்கப்பட சிறிது குறை மணமகன் ஜாதகத்தில் இருந்ததால் திருமணம் மூன்று மாதம் தள்ளி வைக்கப்பட்டது.

இரண்டாவதாக பிறந்தது அவரது மகன் கார்த்திகேயன்.அவன் பிறந்த போது பெரிதாக ஒன்றும் மாற்றம் இல்லாவிட்டாலும் ஆண் வாரிசு என்பதால் அவன் மீது எப்போதுமே தனிப்பட்ட பாசம் உண்டு ஈஸ்வரனுக்கு.

ஆண் ஒன்று பெண் ஒன்று பிறந்து விட்டது. இனி பிள்ளைகள் தேவையில்லை என்று முடிவை எடுக்கையில் அந்த முடிவை பொய்யாக்கி ஜனித்தவள் ஐஸ்வர்ய நந்தினி. கருவை கலைத்து விடும்படி ஈஸ்வரன் சொல்லியதற்கு நர்மதா பிடிவாதமாக மறுத்து விட்டார்.  கருவைக் கலைப்பது பாவம் என்று அவர் வாதாட இருக்கும் பாவ மூட்டைகளை பத்தாதா இதை வேறு ஏற்றுக் கொள்வதா என்ற ஒரே காரணத்தால் ஈஸ்வரன் குழந்தை பெற்றுக் கொள்ள சம்மதித்தார்.

சரியாக ஏழாம் மாதத்தில் கருவுற்றிருக்கும் மருமகளை பார்த்துக் கொள்வதற்காக காஞ்சிபுரத்தில் இருந்து சென்னை வந்தார்கள் ஈஸ்வரனின் பெற்றோர் இருவரும்.  வரும் வழியிலேயே விபத்தில் இருவருமே ஒன்றாக சிவப் பாதம் அடைந்து விட ஈஸ்வரன் உடைந்து விட்டார். வந்த உறவுகளில் சிலர்

"உன் பிள்ள வயித்துல இருக்கும் போதே உங்கம்மா அப்பாவுக்கு எமனா இருக்கு.."இப்படியாக அவர்கள் கொளுத்திப் போட்டது ஈஸ்வரன் மனதில் ஆழமாகப் பதிந்தது.

தாய் தந்தை இருவருக்கும் தகனம் செய்துவிட்டு ஈஸ்வரன் வீட்டிற்கு வர பளிங்குத் தரையில் வழுக்கி விழுந்து வயிற்றில் பலமாக அடிபட்டதால் மருத்துவமனையில் நர்மதாவை சேர்த்திருப்பதாக வீட்டில் இருந்த உறவு பெண்கள் அழுதுக் கொண்டே தகவல் கூற விழுந்தடித்துக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடினார் ஈஸ்வரன். மனைவி என்றால் அவருக்கு கிள்ளுக்கீரை தான்.  ஆனால் பாசம் இருப்பதும் உண்மை தான்.

எங்கே இரண்டு சிறு குழந்தைகளை தன் தலையில் கட்டிவிட்டு மனைவி தன்னை விட்டு சென்று விடுவாளோ என்ற பயம் அவரை ஆட்டுவித்தது.  மருத்துவரிடம் குழந்தையை காப்பாற்றி கொடுக்காவிடினும் பரவாயில்லை என் மனைவியை எப்படியாவது காப்பாற்றிக் கொடுங்கள் என்று மன்றாடினார்.ஆனால் மருத்துவர்கள் இருவரையும் காப்பாற்றி விட்டார்கள்.

பிறக்கும் போதே ஒரு ஆட்டு ஆட்டி வைத்து பிறந்த மகளை வெறுப்போடு நோக்கினார் ஈஸ்வரன். சின்ன வயதில் இருந்தே மெல்லிய தேகம் உடையவள் ஐஸ்வரிய நந்தினி.அவளுக்கு ஈஸ்வரன் வைத்த பெயர் வெறும் நந்தினி மட்டுமே. கூடவே சனியன் தரித்திரம் எல்லாம் அவளுக்கு தகப்பனால் சூட்டப்பட்ட பட்டப் பெயர்களாகும்.

நர்மதா பள்ளியில் சேர்க்கும் போது நந்தினிக்கு முன் ஐஸ்வர்யாவை சேர்த்து விட்டார். இப்படியாக சொந்த வீட்டில் தந்தைக்கு பிடிக்காத மகளாய் வந்து வாய்த்தாள் ஐஸ்வரிய நந்தினி.சொல்லி வைத்தார் போல வெளியே கிளம்பும் போது அவளின் முகத்தை பார்த்து விட்டு சென்றால் கண்டிப்பாக ஏதாவது துர் சம்பவங்கள் நடக்கும்.

நர்மதா பல தடவை கூறி விட்டார்." நீங்க ஐசு மூஞ்சில முடிச்சுட்டு போனா கெட்டது நடக்கும்னு நினைச்சிக்கிட்டே போறீங்க.நீங்க நினைக்கிற மாதிரியே நடக்குது. அதுக்கு எதுக்கு வீணா அவ மேல பழி போடுறீங்க" நியாயத்தை எடுத்து கேட்ட நர்மதாவின் பஞ்சு கன்னம் பிஞ்சி போனது தான் மிச்சம்.

எது எப்படியோ தன்னை பிடிக்காதவர்களையும் நேசிக்கும் அழகிய மனது படைத்தவள் ஐஸ்வரிய நந்தினி.  அந்த மனமே அவளது வெளித்தோற்றத்தை காட்டிலும் உள் தோற்றத்தில் அவளை சிறந்து விளங்க வைத்தது.