kollaiyadithaval neeyadi - 4 in Tamil Love Stories by theannila books and stories PDF | கொள்ளையடித்தவள் நீயடி - 4

Featured Books
Categories
Share

கொள்ளையடித்தவள் நீயடி - 4

ஈஸ்வரன் வீடே பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. இருக்காதா பின்னே நாளை ஈஸ்வரனின் செல்வமகள், அதிர்ஷ்ட தேவதை, செல்வக்குமாரியின் திருமண நாள். நிச்சயம் முடிந்து மூன்று மாத இடைவெளி கடந்த நிலையில் வந்த முதல் முகூர்த்தத்திலேயே திருமணத்தை அவசரமாக குறித்து விட்டார் ஈஸ்வரன். என்னதான் அவர் சமூகத்தில் நல்ல மதிப்பான பெயரோடு, நாகரீகத்தில் ஊறிப் போயிருந்தாலும் சில பல விஷயங்களில் அவரை மாற்ற முடியாது. மகளும் அவளது வருங்கால கணவரும் அவ்வப்போது வெளியே சென்று நேரம் தாழ்ந்த வீடு வந்து சேரும்போது, பெற்ற தகப்பனாக அவரது அடிவயிறு பற்றி எரிந்தது.

மகளிடம் வெளியே போகாதே என சொல்ல முடியவில்லை. மருமகனிடம் திருமணத்திற்குப் பிறகு ஜோடியாக ஊர் சுற்றலாமே நாசுக்காக கேட்டு பார்த்தார். " என்ன அங்கிள் எந்த காலத்துல இருக்கீங்க நீங்க? வாழ்க்கைய என்ஜாய் பண்ணனும் அங்கிள் என்ஜாய்" சிறிதும் மட்டு மரியாதை இல்லாமல் ஈஸ்வரன் தோளில் கை போட்டு, கீரிப்பிள்ளை பிராண்டி விட்டது போல இருந்த அவனது தலை மயிரை சுண்டு விரலால் ஒதுக்கி கொண்டே கூறினான் ஆகாஷ்.

மனதிற்குள் கருவிக் கொண்டாலும் வெளியே அதனை காட்டாமல்" நீங்க கொஞ்சம் இருங்க மாப்பிள்ளை நான் இப்ப வந்துர்றேன்" அவசரமாக அறைக்குள் வந்தவர் கட்டிலில் தேமே எனக் கிடந்த தலையணையை அடித்து துவம்சம் செய்து பஞ்சு வெளியே பறக்கும் வரை கிழி கிழி என்ன கிழித்து விட்டார். அப்போது ஆத்திரம் தீராமல் கதவை திறந்து கொண்டு வந்தவர் முன்பு வந்து நின்றாள் ஐசு.

" அப்பா டீ" அவர் கேட்டிருந்த டீயை பக்குவமாக கலந்து எடுத்து வருவதற்குள் ஹாலில் அவரை ஆளைக் காணோம். அப்பாவை தேடிக்கொண்டு அறைக்கு வந்த ஐசுவை அந்த நிமிட அடி தாங்கியாக பாவிக்க அவரது ஆண் மனம் யோசித்தது.

" எப்ப டீ கேட்டா எப்ப எடுத்துட்டு வர? இதான் நீ வேலை செய்ற அழகா? செத்ததுக்கு வர சொன்னா பதினாறுக்கு வந்து நிக்கிற? நீ எல்லாம் வந்து பொறக்கலன்னு யாரு அழுதா?" தேவையே இல்லாமல் அவளின் மனதை சில்லு சில்லாக உடைத்து விட்டு ஓங்கி அறை வேறு.. டீ கப் பறந்து சுவரில் பட்டு தெறித்தது.

" உன்னால வீடே நாசமாககுது. இன்னும் அஞ்சு நிமிஷத்துல இது எல்லாத்தையும் தொடச்சி பொறுக்கி சுத்தம் பண்ணி எனக்கு இன்னொரு டீயோட வந்து சேருற"அவர் சென்று விட்டார். உடைந்த டீ கப்பை விட ரணப்பட்ட மனதிற்கு ஆசிட் ஊற்றியது போல இருந்தது அவரின் அபத்தமான குற்றம். அவர் அடித்த அடியில் இடது கன்னத்தில் இருந்த முகப்பருக்கள் ஓரிரண்டு உடைந்து விட்டது. வலியோடு முகத்தில் வலியும் உதிரத்தோடு சுவரை, தரையை சுத்தம் செய்தாள்.

திருமண பேச்சு ஆரம்பித்ததில் இருந்து, ஈஸ்வரன் கவனமாக ஐஸ்வர்ய நந்தினியை ஒதுக்கி விட்டார். ஐசுவிடம் அவர் விடுத்த கட்டளை, சும்மா சும்மா ஆட்கள் முன்பு வந்து நிற்க கூடாது என்பதுதான். செல்வகுமாரிக்கு, சிறு வயதில் இருந்தே எங்கே தங்கை தனக்கு போட்டியாக வந்து விடுவாளோ எனும் பயம். அதனாலயே  தந்தை அவளை வெறுப்பதை தன்னால் முடிந்தவரை இன்னும் தூபம் போட்டு ஏற்றி கொண்டிருப்பாள்.

ஆகாஷ் வாயை வைத்துக் கொண்டு சும்மா இல்லாமல்" உன் தங்கச்சி லேசா பாக்கும்போது சாய் பல்லவி மாதிரி இருக்கு." என்று விட்டான்.

"ஆமா சாய் பல்லவி தான் இப்படி அடுப்புல தீயிச்ச கலருலா இருக்காளா உனக்கு" பொங்கி விட்டாள் செல்வகுமாரி. மாப்பிள்ளை வீட்டு உறவுகளின் முன்பு, வேறு வழி இல்லாமல் தனது இரண்டாவது மகள் என அறிமுகப்படுத்தினார் ஈஸ்வரன்.

இன்று மாலையே மண்டபத்திற்கு செல்ல நேரம் குறிக்கப்பட்டிருக்க, குடும்பமே பரபரப்பாக கிளம்பி கொண்டிருந்தது. முதல் காரில் பெண்ணை அழைத்துக் கொண்டு ஈஸ்வரன் நர்மதா கார்த்திகேயன் ஆகியோர் செல்ல இருந்தனர்.

" ஏங்க ஐசு? " தயங்கி கொண்டே கேட்டார் நர்மதா.

" ஏன் அவளுக்கு என்ன கேடு"

" என்னங்க நம்ம குடும்பத்து ஆளுங்க எல்லாம் ஒரு வண்டியில போறோம். ஐசு அவளை மட்டும் எதுக்கு விட்டுட்டு போகணும்"

" யாரு அவளை விட்டுட்டு வர சொன்னா? பூனையை மடியில கட்டுன மாதிரி அவள கூட வச்சுக்கிட்டு நிம்மதியா ஒரு மனுஷன் நல்ல காரியத்துக்கு போக முடியுமா? எப்ப என்ன நடக்கும்னு பக்கு பக்குனு இருக்கும். அவ பின்னாடி அக்கா கூட வரட்டும். கூட்டமா ஒரே வண்டியில அடைச்சுக்கிட்டு போய் தான் ஆகணுமா? பின்னால வண்டியில வந்தா உன் பொண்ணுக்கு கௌரவ கொறச்சலா? என்ன கேட்டா அந்த தரித்திரம் புடிச்சவ வரவே கூடாது. இந்த விளங்காத பய சம்மதிக்கு நான் சொன்னா எங்க மண்டையில ஏறுது. அவளுக்கு உடம்பு சரியில்ல. ரெண்டாவது பொண்ணு வீட்டில் இருக்கட்டும்னு நாசுக்கா சொல்லி பார்த்தா அதெல்லாம் ஒன்னும் இல்ல. மண்டபத்துல வந்து தூங்கி ரெஸ்ட் எடுக்கட்டும்னு சொல்றான். பொண்ணு குடுக்கறதுனால வாய மூடிக்கிட்டு இருக்கேன்.. என்ன என் வாய பார்த்துகிட்டு நிக்கிற போ போய் வண்டியில் ஏறு" மனைவியை அதட்டி வண்டியில் ஏறச் சொன்னார் ஈஸ்வரன்.

பின்னால் நின்று அவர் பேசியதை எல்லாம் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தாள் ஐஸ்வர்ய நந்தினி. நர்மதா எதுவும் செய்ய முடியாமல் மகளை இறைஞ்சும் பார்வை பார்க்க, கண்களால் தன் தாய்க்கு ஆறுதல் கூறினாள் ஐசு.

ஒரு வழியாக குடும்பமே மண்டபத்திற்கு வந்து சேர, அதன் பிறகு  வேலைகளும் சொந்த பந்தங்களின் அரட்டையும் மண்டபத்தை கிடுகிடுங்க வைத்தது.

எப்போதுமே கண்ணீரோடு மகனை எழுப்பும் அமுதன், இன்று அவசர கதியில் எழுப்பிக் கொண்டிருந்தார். மது போதையின் பிடியில் திறக்கவே முடியாது என ஒட்டிக் கொண்டிருந்த கண்களை சிரமப்பட்டு பிரித்தான் ஆதித்த கரிகாலன். தந்தையின் கண்கள் என்று அவனை அவசரமாய் எழுப்பியது.

தூக்க கலக்கத்தில்" என்னப்பா இன்னைக்கு அழுவாம இருக்க"

" என்ன பாத்தா அழுமூஞ்சி மாதிரி இருக்கா உனக்கு? நீ பண்ற கூத்த பார்த்து தான் தினம் அழுது வடிக்கிறேன். சரி சீக்கிரம் எந்திரிச்சு தொலை."

" எதுக்கு"

" எதுக்கா? இன்னிக்கு ஆகாஷுக்கு கல்யாணம். அது கூட மறந்து போச்சா உனக்கு? "

" அவனுக்கு கல்யாணம் நடந்தா எனக்கு என்ன கருமாதி நடந்தா எனக்கு என்ன? எதுக்கு என்ன அங்க கூப்பிடுற"

" டேய் ஆதி. ஆகாஷோட அப்பன் விநாயகம் எனக்கு சின்ன வயசுல இருந்து ஃப்ரெண்ட். நீயும் அந்த ஆகாஷும் நல்ல திக் ஃப்ரண்ட்ஸா தானே இருந்தீங்க. அதெல்லாம் மறந்து போயிட்டியா? இன்னிக்கு அவனுக்கு கல்யாணம் டா. தயவு செஞ்சு எனக்காக வாடா"

" ப்பா நீ போனும்னா போ. என்ன எதுக்கு வலுக்கட்டாயமா கூப்பிடுற? எனக்கும் அவனுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது." சொல்லிவிட்டு திரும்பி படுத்து விட்டான் ஆதி.

"ஆதி, அம்மா இருந்தா இப்படி என் பேச்சை மதிக்காம நடந்து இருப்பியா? உங்க அம்மாவுக்கு பதிலா நான் போய் இருந்திருக்கணும். இந்த மாதிரி அவமானம் எல்லாம் எனக்கு நடந்திருக்காது." சொல்லிவிட்டு தளர்ந்த நடையோடு அறைக் கதவை அவர் தாண்டும் வேளை 

" வந்து தொலையறேன். ஆனா இன்னைக்கு இல்லன்னா என்னைக்காச்சும் ஒரு நாள் இப்படி சென்டிமென்ட்டா பேசி சீன் போடறதுக்கு கண்டிப்பா வாங்குவ" அமுதன் சிரித்துக் கொண்டார்.

மகனும் அப்பாவும் திருமண மண்டபத்தை நெருங்கும் வேளை வாசலில் நின்று விருந்தினர்களை வரவேற்றுக் கொண்டிருந்த விநாயகம்,பாலிய சினேகிதனை கண்டதும் ஓடோடி வந்தார். இருவரும் ஒருவரை ஒருவர் கட்டி தழுவிக் கொண்டனர்." அமுதா, நீ வருவன்னு ரொம்ப எதிர்பார்த்தேன். நல்ல வேலை என்னை ஏமாத்தாம வந்துட்ட. டேய் ஆதி! என்னடா அங்கிள பார்த்தும் பார்க்காத மாதிரி மூஞ்ச திருப்பிக்கிட்டு நிக்கிற? எப்படி இருக்க"

"ஆங் ஆங் உங்க மகனோட சங்கார்த்தமே இல்லாம இப்ப ரொம்ப நல்லா இருக்கேன்." விநாயகம், அமுதன் முகத்தை பார்க்க அமுதன் கண்களால் ஜாடை காட்டினார். அதன் பிறகு இருவரையும் அழைத்துச் சென்று முன் வரிசையில் அமர வைத்தார் விநாயகம். வழியில் இவர்களைக் கண்டதும் புன்னகை முகமாக வரவேற்றார் ஈஸ்வரன். அமுதன் மரியாதை நிமித்தமாக ஈஸ்வரன் நீட்டிய கரத்தை பிடித்துக் கொள்ள, ஆதியோ தாடியை சொரிந்து கொண்டிருந்தான் எங்கேயோ வெறித்துக் கொண்டு.

அவனது அலட்சியத்தை உள்ளுக்குள் கருவிக் கொண்டார் ஈஸ்வரன்." அமுதா, உனக்கு ஒன்னு தெரியுமா? இந்த கல்யாணம் முடிச்சு அடுத்த மூணு மாசத்துல இவரோட மகனுக்கும் என் தங்கச்சி பொண்ணு குழலிக்கும் சம்பந்தம் பேசியிருக்கோம்." விநாயகம், ஆதியை ஆராய்ச்சி பார்வை பார்க்க, அமுதன் பயந்த பார்வை பார்த்தார். ஈஸ்வரனுக்கு, ஏற்கனவே ஆதி குழலி இருவருக்கும் திருமணம் நிச்சயமாகி இருந்ததும், இறுதி நேரத்தில் அது ஏதோ ஒரு காரணத்தால் தடைப்பட்டதும் தெரியும்.

குழலியின் தந்தையும் சமூகத்தில் பெரிய ஆள். செல்வகுமாரி நிச்சயத்தின் போது, கார்த்திகேயன் குழலி இருவருக்கும் முடிச்சு போட்டு ஜாதகம் பொருந்தி, இரு மனங்களும் பொருந்தி வர இந்த திருமணம் முடிந்து அடுத்த மூன்று மாதத்தில் அடுத்த திருமணம் என்று முடிவு செய்தார்கள்..

முதல் வரிசையில் அமர்ந்திருந்த ஆதி, மணமேடையை பார்ப்பதை கவனமாக தவிர்த்தான். அவன் வந்ததும் மணமேடையில் இருந்து இறங்கி வர முயற்சித்த ஆகாஷை அப்படியே கோழி அமுக்குவது போல அமுக்கி அமர வைத்தார் அவனது அம்மா. ஆகாஷ் தனது திருமணத்திற்கு ஆதி வந்ததே போதும் என மிகுந்த மகிழ்ச்சியோடு இருந்தான்.

செல்வகுமாரி மணமேடையில் வந்து ஆகாஷ் அருகே அமர, சற்று நேரத்தில் ஐயர் மந்திரம் ஓத ஆகாஷ் செல்வகுமாரி கழுத்தில் தாலி கட்டினான். அதுவரை யாரை வலை போட்டு தேடிக் கொண்டிருந்தானோ, அந்த முகம் அவன் கண்களில் விழுந்தது. கார்த்திகேயன் அருகே தோளோடு தோள் உரச நின்று கொண்டிருந்தாள் குழலி. அழகு தேவதையான அவளை கண்களால் பருகிக் கொண்டிருந்தான் கார்த்திகேயன். தமக்கையின்  திருமணம் அவனுக்கு பெரிதாக படவில்லை.

அவனது திருமணத்தை எதற்காக மூன்று மாதம் ஒத்தி வைத்தார்கள் என்பதே அவனது தற்காலிக பிரச்சனை. குழலியின் கண்கள் இப்போது ஆதியை பார்த்து விட்டது. கண்டிப்பாக ஆகாஷ் மேல் இருக்கும் கோபத்தில் அவன் இந்த திருமணத்திற்கு வரவே மாட்டான் என நம்பிக் கொண்டிருந்தவளுக்கு அவனைப் பார்த்ததும் சட்டென்று குளிர் பரவியது உள்ளே. அடுத்த நிமிடம் அவளது கண்களில் அலட்சியம் வந்து அமர்ந்து கொண்டது.

அது அகங்காரமாக உருவெடுத்தது. தன் காதலை, தன்னை நிராகரித்து கார் ரேஸ் பெரிதென சென்ற ஆதியை பழிவாங்க அவள் மனம் துடித்தது. காரணம் இன்னும் அவள் மனதில் ஆதி ஒரு ஓரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறான். எப்படி அவளை அலட்சியம் செய்யலாம்? அப்படி என்றால் உருகி உருகி அவனை காதலித்தது எல்லாம்?

ஆத்திரத்தில் என்ன செய்கிறோம் என்பதே கிடையாமல் வேகமாக அறைக்குள் ஓடினாள். அங்கே மஞ்சள் கிழங்குகள் வெத்தலை பாக்குகள் எல்லாம் கொட்டி கிடந்தன. அவதியும் போதியுமாக வெள்ளை நூலை தேடி எடுத்து, அதை சந்தனத்தில் முக்கி, மஞ்சள் கிழங்கை நடுவில் கட்டி மணவறைக்கு எடுத்துக் கொண்டு ஓடினாள். அங்கே பெண் மாப்பிள்ளை இருவரையும் பெரியவர்கள் ஆசிர்வாதம் செய்து கொண்டிருந்தார்கள்.

கார்த்திகேயன் அருகே சென்றவள், " கார்த்திக் நான் சொன்னா செய்வியா? "

" என்ன குழலி? மொட்டையா சொன்னா எனக்கு என்ன தெரியும்?  நீ என்ன சொல்லணும் அத நான் என்ன செய்யணும்" புரியாமல் கேட்டான் கார்த்திகேயன்.

" இப்பவே இந்த மேடையில எனக்கு தாலி கட்டு" அவளது வாதத்தை கேட்டு கார்த்திகேயன் அதிர்ந்து விட்டான்.

" என்ன குழலி லூசு மாதிரி பேசுற? இன்னும் மூணு மாசம் இருக்கு நம்ம கல்யாணத்துக்கு. இப்போ நடக்கிறது என் அக்காவோட கல்யாணம். இந்த நேரத்துல போய் இப்படி விளையாடிட்டு இருக்க"

" என் கழுத்துல தாலி கட்டுன்னு சொல்றது உனக்கு விளையாட்டா இருக்கா? நான் ஒன்னும் விளையாடல. சீரியஸா சொல்றேன். கார்த்தி இப்பவே இந்த நிமிஷமே என் கழுத்துல தாலி கட்டு"

" என்னடி நானும் பாக்குறேன் சும்மா தாலி கட்டு தாலி கட்டுனு சொல்லிட்டே இருக்க.. உனக்கு இதெல்லாம் விளையாட்டா போச்சா? நீ புரிஞ்சுதான் பேசுறியா? நம்ம ஃபேமிலி ஒன்னும் சாதாரண பேமிலி கிடையாது. இங்க வந்திருக்கிற ஒவ்வொருத்தங்களும் விஐபிஸ். இந்த மாதிரி ஒரு வேலைய நாம செஞ்சா நாளைக்கு நியூஸ்ல நாம ரெண்டு பேரும் தான் வருவோம்." கார்த்தி சுற்றிலும் உறவினர் கூட்டம் அலைமோத குரலை தணித்து அவளிடம் பேசினான். கார்த்திக் கூறிய எந்த ஆலோசனையையும் குழலி ஏற்கவில்லை.

இவர்கள் இருவரும் ஒரு பக்கமாக நின்று விவாதித்துக் கொண்டிருந்த வேளை" அண்ணா, அம்மா உன்ன" அவள் என்ன பேச வருகிறாள் என்பதை காதில் போட்டுக் கொள்ளாமல் கிடைத்த வாய்ப்பை பட்டென்று பிடித்து விட்டான் கார்த்திகேயன்.

"தோ என் தங்கச்சி இருக்கா. அவ இருக்கும் போது நான் எப்படி கல்யாணம் பண்றது? இந்த மூணு மாசத்துல அவளுக்கு வேற இடத்துல பார்த்து மொத கல்யாணம் பண்ணிட்டு எனக்கு பண்ணி வைக்கிறதா அப்பா யோசிச்சிகிட்டே இருக்காரு. இந்த நேரத்துல நீ இப்படி செஞ்சுக்கிட்டு இருக்க" கார்த்தி, அவசர கல்யாணத்திலிருந்து தப்பிக்க வாய்க்கு வந்த பொய்யை அடித்து விட்டான்.

அதைக் கேட்டு ஐஸ்வர்யா நந்தினி அதிர்ந்து நின்றாள்.

தொடரும்.