தந்தை பின்னால் பார்க்கும் கண்ணாடி வழியாக தன்னை பார்த்துக் கொண்டே இருப்பதை உணர்ந்தாலும் அவரின் பார்வையை லாவகமாக ஒதுக்கினாள் ஐஸ்வரிய நந்தினி.அவர் பாசத்தால் அவளை பார்க்கவில்லை. தன்னுடைய முகத்தில் இருக்கும் பருக்களை நகத்தால் கீறி கொண்டிருக்கிறாளோ என்று நோட்டமிட்டுக் கொண்டிருந்தார் ஈஸ்வரன்.
ஐஸ்வரிய நந்தினி, அவளது முகம் முழுவதுமே பிக்மென்டேஷன் எனப்படும் சரும குறைபாடு. அதாவது சாதாரண முகப்பருவை காட்டிலும் அதிக வலியைத் தரக்கூடியது. அளவிலும் 1 சென்டிமீட்டர் இருக்கும். முகத்தில் ஆங்காங்கே என்றால் பிரச்சனை இல்லை.முகம் முழுவதுமே இப்படி ஒரு சென்டி மீட்டர் அளவு கொண்ட பெரிய பெரிய பருக்களால் நிறைந்திருக்க பாவம் அவளும் தான் என்ன செய்வாள்?
நெற்றி, கன்னம்,நாசி, உதடை சுற்றி,ஏன் கழுத்தில் கூட சிலது இருக்கிறது. வெயிலில் சென்றாலோ வேர்க்கடலை அல்லது எண்ணெய் பதார்த்தங்களை விரும்பி உண்டாலோ இருக்கும் முகப்பரு பத்தாது என்று இன்னும் வந்து சேரும்.
வலி பொருக்க முடியாமல் சிலதை அவளே நகத்தை வைத்து கீறி விடுவாள். நகம் பட்டவுடன் அந்த இடம் கருப்பாக மாறி விடும்.கூடவே வடு விழுந்து விடும். ஏற்கனவே அவளைப் பார்ப்பவர்கள் எல்லாம் பரிகசித்து கொண்டிருக்கிறார்கள். காரணம் வேறொன்றுமில்லை ஐஸ்வரிய நந்தினியின் இடையே முப்பத்து ஐந்து தான். அவளுக்கு வயது இருப்பது மூன்று.
பிறக்கும் போதே மாநிறத்தில் துறுதுறுவென்று கலையாக பிறந்தாள் ஐஸ்வர்யா நந்தினி.ஆனால் பெண் பிள்ளை மாநிறத்தில் பிறந்ததை ஈஸ்வரன் விரும்பவில்லை.அதனால் அவளை வீட்டில் அவரே கருப்பி என்று தான் அழைப்பார் சில நேரம். மாநிறம் மெல்லிய உடல் வாகு, கூடவே முகம் முழுவதும் பருக்கள். பார்க்கவே பரிதாபாகரமாக தோற்றமளிக்கும் ஐஸ்வரிய நந்தினி ஈஸ்வரனின் மகள் என்றால் பார்ப்பவர்கள் என்ன நினைப்பார்கள்?
மகளை அவள் இறங்க வேண்டிய இடத்தில் இறங்கி விட்ட கையோடு ஈஸ்வரனின் கார் பறந்தது. மகளிடம் அவரும் ஒரு வார்த்தை பேசவில்லை. அவளும் பேசவில்லை. ஒரு பெருமூச்சை விட்டவள் வேகமாக நடந்து அந்த கட்டிடத்திற்குள் சென்றாள். அவள் வாழ்வில் நடந்து கொண்டிருக்கும் பெரும் புயலில் சிக்கி சிதையாமல் இன்னும் அவள் இருப்பதற்கு இரண்டு காரணங்கள் உண்டு.
ஒன்று அவளது அம்மா நர்மதா. இன்னொன்று இந்த நடனப்பள்ளி. 10 வயதிலேயே மேடை ஏறி அரங்கேற்றும் பண்ணியவள் அவள். நடனம் அவள் உயிரில் கலந்த ஒன்று. பிளஸ் 2வில் தந்தையின் பெல்ட் அடிக்கு பயந்து நல்ல முறையில் தேர்ச்சி பெற்றிருந்தாலும் கூட கல்லூரிக்கு செல்ல ஐஸ்வரிய நந்தினி விரும்பவில்லை.
அவள் விருப்பத்தை கேட்டால் அது ஈஸ்வரன் அல்லவே?எனவே பெயருக்கு ஏதோ ஒரு டிகிரியை முடித்து விட்டு தனது வாழ்வை நடனதுகாக அர்பணித்துக் கொண்டாள்.
தா த்தை தித்தீ த்தை
தா த்தை தித்தீ த்தை
வாஷ்ரூமில் ஆடையை மாற்றிக் கொண்டு வந்தாள் ஐஷு. நீல நிற டி ஷர்ட் கருப்பு டிராக் பேண்ட் அணிந்து கூந்தலை வாரி அள்ளி கொண்டையிட்டு,நெற்றியில் ஒற்றை கருப்பு பொட்டுடன் வந்தவளை பார்த்து அவளிடம் நடனம் கற்றுக் கொள்ளும் மாணாக்கள் ஹாய் ஐஷு மாஸ்டர் என்று புன்னகைத்தனர்.
அவர்களது நடனப் பள்ளியில் உடை கட்டாயம் இல்லை. சேலையோ சுடிதாரோ ட்ராக் பேண்ட்டோ நமக்கு தோதான உடையை அணிந்துக் கொள்ளலாம்.
"எங்கே என் புன்னகை
எவர் கொண்டு போனது
எங்கே என் புன்னகை எவர்
கொண்டு போனது தீ பட்ட
மேகமாய் என் நெஞ்சு ஆனது
மேக தீ அணைக்க வா வா வா
வா தாளத்தில் நீ சேரவா ஓ
தாளிசை நான் பாடவா"
ரிமிக்ஸ் வர்ஷன் பாடலின் மேற்கதிய இசையும் சேர்ந்து வர பரதத்துடன் சேர்த்து பிரேக் டான்ஸ் ஆடி அசத்திக் கொண்டிருந்தாள் ஐஷு.முகத்தின் உறுப்புகள் பருக்கலால் மறைந்திருந்தாலும் அவளது பெரிய கண்கள் உணர்ச்சிகளை கண்ணாடி போல படம் பிடித்துக் காட்டின.
"ஆதி.. டேய் கண்ணா ஆதி.." வழக்கம் போல அமர்ந்து போதையில் எழாமல் சண்டித்தனம் செய்ய சில கண்ணீர் துளிகள் அவன் முகத்தில் விழுந்தன.அதன் பயனாய் மெல்ல கண் திறந்தான் ஆதித்த கரிகாலன்.அவசர அவசரமாக அவன் கண் திறப்பதற்குள் தன்னுடைய விழிகளைத் துடைத்துக் கொண்டார் அவனைப் பெற்ற மகராசன் அமுதன்.
அப்பொழுதும் தகப்பனின் கண்ணீரை கண்டு கொண்டான் ஆதி. இது என்ன அவனுக்கு புதிதா? இருந்தாலும் தினமும் இப்படி அழுது கொண்டே தன்னை எழுப்பும் தகப்பனை பார்க்கும் போது அவனுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது.
"காலையிலேயே ஏன்பா இப்படி ஒப்பாரி வைக்குற. இந்த அழு மூஞ்சிய பாத்து கண்ண தொறந்தா நாள் வெளங்குமா"
கண்ணீரை துடைத்துக் கொண்ட அமுதன்"அதுக்கு தான் ஒரு கல்யாணத்தை பண்ணிக்க சொல்றேன். பொண்டாட்டி மூஞ்சில முழிச்சா நாள் அமோகமா வெளங்கும் தெரியுமா?"
பதிலே பேசாமல் தந்தையை தாண்டி சென்றான். மகனின் முதுகை வெறித்து பார்த்து விட்டு அவன் குடிக்கவே மாட்டான் என்று தெரிந்தும் நப்பாசையில் அவனுக்கு காபி கலந்து வைத்தார். அவனோ குளித்து வந்து அறைக்குளிருந்த மினி குளிர்சாதன பெட்டியை திறந்து பீர் டின்னை எடுத்து திறந்து வாயில் சரித்தான்.
பின் கீழிறங்கி வந்தவனை பார்த்த அமுதன்"ஆதி சாப்பிட்டு போடா. உனக்கு புடிக்குமேனு பால் அப்பம் செஞ்சிருக்கேன்"..தன்னை ஏக்கமாக பார்க்கும் தந்தையின் பார்வையை தவிர்க்க முடியாமல் ஒரே ஒரு பால் அப்பதை ஒரு அண்டா பால் அப்பம் சாப்பிடும் நிலையில் கஷ்டப்பட்டு உள்ளே தள்ளிவிட்டு கிளம்பி விட்டான்.
அவனது அறைக்கு சென்று பார்க்கும் போது ஏடு படிந்த காப்பி அமுதனை வரவேற்றது.அனைத்தையும் சுத்தம் செய்து மதிய சமையலை முடித்து அக்கடா என்று அமர்ந்தார் அமுதன்.
மகன் கோடிஸ்வரன். வீட்டில் பறக்கும் தூசியை எட்டி பிடிக்க கூட ஆள் வைத்துக் கொள்ளலாம். அதனை அமுதன் விரும்பவில்லை. அந்த பெரிய வீட்டின் வேளைகளை அவரே செய்ய தான் விரும்பினார். மதியம் அவன் வர மாட்டான் என்பது தெரிந்தும் அவனுக்கும் சேர்த்தே சமைத்திருந்தார். இரவு அந்த உணவை அவர் உண்டு அவனுக்காக லேசான உணவை தயாரித்து வைக்க ஆதியோ நள்ளிரவில் தள்ளாடி வந்து விழுந்தான் வாசலில்.
விழுந்ததும் இல்லாமல் வாந்தி வேறு. தினமும் நடக்கும் கூத்து என்பதால் அவனை இழுத்து கொண்டு போய் சுத்தப்படுத்தி படுக்க வைப்பதற்குள் அமுதனுக்கு நாக்கு தள்ளி விட்டது.படுக்கையில் விழுந்தும் உறக்கம் வராமல் புருண்டவர் பார்வை சுவரில் படமாய் தொங்கிய மனைவியை தழுவியது.
"காஞ்சு.. பாத்தியா என் நிலைமைய?என் அம்மா அதான் உன் மாமியா கடைசியில படுத்த படுக்கையில கிடந்தாங்க. அவங்களுக்கு பீ மூத்திரம் அள்ளி, ஒரு குழந்தைய போல நீ பாத்துக்கிட்ட. அப்போல்லாம் அம்மா என்கிட்ட சொல்லுவாங்க.
டேய் அமுதா, உன் பொண்டாட்டி பொம்பள இல்லடா நம்ம குலசாமினு. என் மனசு நெறைஞ்சு சொல்றேன் அவ தீர்க்க சுமங்கலியா நோய் நொடி அண்டாமா மனசு நிறைஞ்சி வாழ்வானு. அவங்க சொன்ன மாறி தீர்க்க சுமங்களியா நோய் நொடி அண்டாம வாழ்ந்த. ஆனா மனசு நிறைஞ்சு வாழ்ந்தியா? பெரிய மானஸ்தி அவமானம் தாங்க முடியாம மார புடிச்சிகிட்டு போயி சேந்துட்ட.
இங்க உன் புள்ள பண்ற அட்டகாசத்த என்னால தாங்க முடியலடி.குடி குடின்னு எந்நேரமும் அந்த வீணாப் போன குடி.இதுல கார் ரேஸ் வேற. எனக்குன்னு யார் டி இருக்கா? இவனும் போயி சேந்துட்டா?உன் மவன் குடிக்குற குடிக்க ஒன்னு குடல் வெடிச்சு சாவான். இல்லனா கார் ரேஸ்ல போயி சேருவான். கடைசியில இந்த அமுதன் குடும்பமே கிளோஸ்.
கடைசி காலத்துல எனக்கு உறுதுணையா இருப்பானு பாத்தா அவன் வாந்திய நான் கழுவிட்டு கெடக்கேன். இன்னும் என்னனா பாக்க இருக்கோ".. கண்ணீரோடு கண்ணை மூடினார் அமுதன்.