பிறவி பைத்தியத்தை பார்ப்பது போல குழலியை பார்த்துக் கொண்டிருந்தான் கார்த்திகேயன். அவனது சமாதானங்கள் கொஞ்சல்கள் கிஞ்சல்கள் மிஞ்சல்கள் எதுவுமே அவளிடம் எடுபடவில்லை. தங்கையை காட்டி பொறுப்பை கூறினால் சமாதானம் ஆகி விடுவாள் என்று எண்ணி நடக்காத விஷயத்தை நடப்பதை போல திரித்து கூற, குழலி அதிர்ச்சியில் உறைந்து நின்று கொண்டிருந்த ஐஸ்வர்ய நந்தினி அக்கினியாய் முறைத்தாள்.
" உன் தங்கச்சிக்கு கல்யாணமா? எனக்கு காது குத்திட்டாங்க சின்ன வயசுலயே. உன் தங்கச்சி மொகரைய பாத்தியா? உன் அக்கா செல்வா, சொல்லும் போது கூட நான் நம்பல. உன் தங்கச்சி முகத்துல மூக்கு எங்க இருக்கு? வாய் எங்க இருக்குனு தெரியுதா? அங்கங்க புத்து வெச்ச மாறி ஓ மை கோட். வருஷக்கணக்கா தேடுனா கூட உன் தங்கச்சிக்கு மாப்பிள்ளை கிடைக்கிறது கஷ்டம். இந்த அழகுல மூணு மாசத்துல மாப்பிள்ளை பார்த்து கல்யாணமா? " யார் மேலும் இருக்கும் கோபத்தில் இதுவரை பேசி அறியாத ஐசுவை காயப்படுத்திக் கொண்டிருந்தாள் நந்தினி.
எப்போதுமே தங்கை மேல் பாசம் டன் கணக்கில் வழியாமல் இருந்தாலும், எப்போதும் ஐஸ்வர்ய நந்தினி மறைமுகமாக அக்கறை எடுத்துக் கொள்வான் கார்த்திகேயன். சிறு வயதிலிருந்தே ஈஸ்வரன், ஐசுவை நடத்தும் முறை கார்த்திக்கு பிடிக்காது. அதனை தந்தையிடம் கூறினால், அதற்கும் சேர்த்து அடி வாங்கிக் கொள்வது ஐசுவே. என் மகனை என்னிடம் இருந்து பிரிக்க பார்க்கிறாயா என்று போனஸ் வேறு.
இதுவரை வீட்டில் இருந்தவர்கள், தெரிந்தே அவளை காயப்படுத்தி இருப்பதை கண்டிருக்கிறான். பள்ளியில் உடன் பயின்ற மாணவர்கள், கல்லூரியில் உடன் பயின்ற மாணவர்கள், யார் என்றே தெரியாத நபர்கள், உறவினர்கள், இப்படி இந்த சமூகமே தங்கையை தீண்ட தகாதவள் போல் நடத்துவதை அவன் பார்த்திருக்கிறான். அதையெல்லாம் தாண்டி வந்தவனுக்கு தனக்கு வருங்கால மனைவியாக வரவேண்டியவள், நாத்தனாராகப் போகும் பெண்ணை இவ்வளவு தரை குறைவாக பேசினால்?
" இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசாத குழலி. உனக்கு பைத்தியம் தான் புடிச்சிருக்கு.ச்சீ நீ எல்லாம் ஒரு பொண்ணா? என் தங்கச்சிக்கு என்ன தொட்டா ஒட்டிக்கிற சீக்கா? சாதாரண பிக்மென்டேஷன். இதுக்கு போய் ஓவரா சீன் போடுற? என் முன்னாடியே என் தங்கச்சிய இப்படி பேசுறியே நான் இல்லன்னா நீ இன்னும் என்ன பேச்சு பேசுவ?"
" என்ன கார்த்தி. இவளுக்காக என்னையே மிரட்டுற" குழலியின் கண்கள் கலங்கி விட்டது. ஐசுவுக்கு தன்னுடைய அண்ணன் தனக்காக பேசுவதை பார்த்து ஆனந்தப்படுவதா, அல்லது தனக்காக அவனது திருமண வாழ்வில் தடை ஏற்படுவதை கண்டு துக்கப்படுவதா என தெரியவில்லை. இந்த விஷயம் மட்டும் ஈஸ்வரன் காதுக்கு போனால் மண்டபம் என்றும் பாராமல் அவளை கிழித்து நாராக்கி விடுவார்.
"அண்ணா, இப்போ எனக்கு கல்யாணம் ரொம்ப முக்கியமா. அத பத்தி பேசுற நேரமா இது? அவங்களோட ஒப்பினியன் அவங்க சொல்றாங்க. அதுக்கு போய் நீ ஏன் சண்டை போடுற? ப்ளீஸ். அம்மா உன்னை கூட்டிட்டு வர சொன்னாங்க" கிட்டத்தட்ட அவனைப் பிடித்து இழுத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்து விட்டாள்.
குழலி ஆத்திரத்தின் உச்சியில் கார்த்தியின் முதுகை வெறித்தாள். அவனது கண்கள் இப்போது முன் வரிசையில் அமர்ந்திருந்த ஆதித்த கரிகாலனை தேடியது. அங்கே அவன் இல்லை. வேகமாக மண்டபம் முழுவதும் அலசியது. எங்கும் அவன் தென்படவில்லை. எப்படி தெரிவான் அவன் தான் அவளுக்கு பின்னால் மறைந்திருந்து இங்கே நடந்த சம்பாஷனைகளை கேட்டுக் கொண்டிருந்தானே.
அதன் பிறகு கார்த்தி குழலியிடம் பேசவில்லை. குழலிக்கும் கார்த்தியை சந்திக்கும் வாய்ப்பு கிட்ட வில்லை. மற்றும் சடங்குகள் நடந்தேறி, விருந்துகள் முடிந்து, போட்டோக்கள் எடுக்கப்பட்டு, பெண் மாப்பிள்ளை வீட்டுக்கு அழைத்து பால் பழம் கொடுத்து, முதல் இரவு கொண்டாடப்பட்டு, மறு வீட்டுக்கு வந்து சென்று ஒரு வாரம் ஆகிவிட்டது.
இந்த ஒரு வாரமும் ஈஸ்வரன், ஐசுவை பேசிய பேச்சு கொஞ்சம் நஞ்சம் இல்லை. செல்வகுமாரியை பிரியப் போகும் சோகம், மகள் திருமணமாகி சென்று விட்டால் அவளது அதிர்ஷ்டமும் உடன் சென்று விடுமோ என்கிற பயமும் சேர்ந்து துரதிஷ்டசாலி எனும் பட்டத்தை பெற்றிருந்த ஐஸ்வர்ய நந்தினி கண்ணால் பார்க்கும் நேரம் எல்லாம் பாம்பாய் கொத்தினார்.
அவளுக்கு என்ன இதெல்லாம் புதிதா? வழக்கம் போல கடந்து விட்டாள். ஒரு வார திருமண வேலைகள் அனைத்தும் முடிவுற்ற நிலையில் மறுவாரத்தில் இருந்து மீண்டும் நடனப் பள்ளிக்கு செல்ல தொடங்கினாள். நடனப் பள்ளிக்குச் செல்லும் போது ஈஸ்வரன் அவளை ட்ராப் செய்வார். திரும்பி வரும்போது அவளாகவே பஸ் பிடித்து வந்தாக வேண்டும். அன்று நல்ல மழை. காலையிலிருந்து வைத்து வாங்கிய மழையால் ஆங்காங்கே நீர் தேங்கி விட்டது.
பேருந்து கிடைக்க தாமதமாகியது. ஒரு வழியாக பேருந்து கிடைத்து வீடு வந்து சேர்வதற்கும் கூடுதலாக ஒன்றரை மணி நேரம் தாமதம் ஆகியது. பயத்தோடு வீட்டிற்குள் சென்றாள். போனில் சார்ஜ் இல்லாததால் அது எப்போதும் சுவிட்ச் ஆஃப் ஆகி இருந்தது. நர்மதா பல தடவை அழைத்துப் பார்த்து அவள் போன் எடுக்காததால் பயத்தில் இருந்தார்.
ஈஸ்வரன் வாகனத்தை வாசலில் பார்த்ததும் தெரிந்து விட்டது என்று அவளுக்கு கச்சேரி. வீட்டின் உள்ளே நுழையும் போதே பேச்சு சத்தம் கேட்டது. கேஸ் சம்பந்தமாக யாரோடு ஈஸ்வரன் பேசிக் கொண்டிருக்கிறார் என்பது புரிந்தது. உள்ளே நுழைந்த ஐசுவை கண்டதும் ஈஸ்வரன் அமர்ந்திருந்த நாற்காலியில் இருந்து ஷாக் அடித்ததை போல எழுந்தார். அவரது உடல் மொழியை வைத்து அவர் தன்னை அடிக்கப் போகிறார் என்று உடலை இறுக்கமாக வைத்திருந்த ஐசுவை நெருங்கியவர் தனது மேல் துண்டால் அவளது தலையை துடைத்தார்.
ஐஸ்வர்ய நந்தினி முன்பு ஈஸ்வரனும் பார்வதியும் ஜோடியாக வந்து நின்றால் கூட இந்த அளவிற்கு அதிர்ந்து நின்று இருக்க மாட்டாள். அந்த அளவிற்கு உயிருள்ள சிலையாக மாறிவிட்டாள்.
" என்ன பொண்ணுமா நீ?உனக்கு எத்தன தடவ போன் பண்றது? ஃபோன ஒழுங்கா சார்ஜ்ல போட மாட்டியா? என்னமோ ஏதோ நான் பயந்து போயிட்டேன். இன்னும் கொஞ்ச நேரத்துல நீ வரலைனா நானே உன்னை தேடி வந்து இருப்பேன். இனிமே இப்படி அப்பாவ பயமுறுத்தக்கூடாது." தலையை துவட்டி அவளது முகம் கை எல்லாவற்றையும் துடைத்து விட்டு
" இந்த கால பிள்ளைகளே இப்படித்தான். இவளுக்கு சின்ன வயசுல இருந்தே பிடிவாதம் ஜாஸ்தி. எந்த வேலைக்கும் யார் கையையும் எதிர்பார்க்க மாட்ட. நானும் அப்படித்தான் என் பிள்ளைகள வளர்த்துருக்கேன். எப்பவுமே எந்த சிட்டுவேஷன் வந்தாலும் தைரியமா பேஸ் பண்ணனும். என்ன நான் சொல்றது சரிதானே" ஐஸ்வர்ய நந்தினியின் மாயை விளங்கியது. அங்கே அமர்ந்திருந்தவரை பார்க்கும் போது தெரிந்தது இவ்வளவு நேரம் ஈஸ்வரன் போட்டது சென்டிமென்ட் டிராமா என.
முகத்தில் சுடுநீரை வாரி இறைத்தது போல எரிய வேகமாக உள்ளே சென்றாள். நர்மதா மகளைப் பிடித்து உள்ளறைக்கு இழுத்துச் சென்று, அவளது கையில் நல்ல சுடிதாரை திணித்தார்.
" அம்மா நான் மழையில நனைஞ்சிருக்கேன். தலைக்கு குளிக்கணும். நீ என்னன்னா சுடிதார் கொடுக்கிற. உன் புருஷனுக்கு திடீர்னு என்ன ஆச்சு? "
" ஐயோ ஐசு. எல்லாம் அப்புறம் சொல்றேன். போயி இந்த சுடிதார் போட்டுட்டு வா."
"என்னமா"
" போடினு சொல்றேன்ல" நர்மதா அவளை நிற்க விடாமல் விரட்டினார்.
குழப்பமான மனநிலையில் சுடிதாரை மாற்றி வந்தவள் கையில், காபி கப்பை கொடுத்து அனுப்ப மனதிற்குள் ஏதோ பொறி தட்டியது. ஈஸ்வரன் வேறு "வாடா மா.. இதாங்க பொண்ணு நல்லா பாத்துக்கோங்க. பெரியவங்களுக்கு வணக்கம் சொல்லுமா" சாவி கொடுத்த பொம்மை போல ஈஸ்வரன் சொன்னதை தொடர்ந்து வணக்கம் சொல்லியவள் உள்ளே செல்ல போக அவளை வலுக்கட்டாயமாக பிடித்து தன் அருகே அமர வைத்துக் கொண்டார்.
அங்கே அமர்ந்திருந்த பெரிய மனிதர் ஐஸ்வர்ய நந்தினி பார்த்து பெரியதாக புன்னகை பூத்தார். அவரது கண்களில் இருந்த கனிவு ஐசுவுக்கு மறு புன்னகையை விளைவித்தது..
காபி குடித்து முடிந்ததும்" மருமக கையால ரெண்டாவது காபி குடிச்சாச்சு. எதுக்கு சம்பந்தி இந்த ஃபார்மாலிட்டிஸ் எல்லாம். பொண்ண பார்த்தாலே போதும்னு சொன்னேன்"
" என்ன நீங்க இதுதானே காலங்காலமா பொண்ணு பாக்குற ஃபார்மாலிட்டிஸ்" பெரிதாக சிரித்தார் ஈஸ்வரன்.
" பொண்ண எனக்கு ரொம்ப புடிச்சு போச்சு. பொண்ணு கிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டீங்கனா"
" அட என்ன சம்பந்தி நீங்க? திரும்பத் திரும்ப இப்படி தயங்கி கிட்டே இருக்கீங்க. நான் ஒரு கோடு போட்டா என் பிள்ளைங்க அத தாண்ட மாட்டாங்க. என் பெரிய பொண்ணு இந்த காலத்துல பொறந்தவ. காதல் கீதல் அப்படின்னு ஒரு சொல்லு சொல்ல முடியுமா அவள பார்த்து. நான் பார்த்த மாப்பிள்ளைய கட்டிக்கிட்டு இப்ப அவ நல்லா இல்லையா? இந்த காலத்துல அப்பன் காசை எப்படி கரியாக்குறது அப்படின்னு தான் சில தறுதலைங்க சுத்துதுங்க. என் பையன் கார்த்திய பாருங்க, அந்த பொண்ணுக்கு குழலி அதுவும் நான் பார்த்த பொண்ணுதான்.
கார்த்தி இந்த பொண்ணு அப்பா உனக்கு பேசியிருக்கேன்னு சொன்னேன். உடனே சரிப்பா உங்க இஷ்டம் பா ன்னு சொல்லிட்டான். இப்ப உங்க கண்ணு முன்னாடி என் பொண்ணு கிட்ட கேக்குறேன். இது கூட உங்க திருப்திக்காக தான். " பெரிய மனிதர் தோரணையில் சொன்னவர் குரலில் மறைமுகமான மிரட்டல் இருந்தது.
ஐஸ்வர்ய நந்தினி தோளில் கை போட்டவர், " சொல்லுமா நந்தினி. அப்பா உனக்குன்னு இவரோட மகன மாப்பிள்ள பார்த்து இருக்கேன். உனக்கு சம்மதம்னா மேக்கொண்டு பேசலாம். அப்பா உன்ன கம்பெல் பண்ணல. சொல்லுடா உன் மனசுல என்ன தோணுது? " அவரது கையின் இறுக்கமே சொல்லியது பதிலை. ஐஸ்வர்ய நந்தினிக்கு புரிந்து விட்டது.
அனைத்து பக்கமும் கதவை அடைத்து விட்டு வெளியேற மேப் தருகிறார். வேறு வழியே இல்லாமல் அவளது தலை மேலும் கீழும் ஆடியது. " இப்படி தலையாட்டுனா என்னம்மா? வாய தொறந்து சொல்லு"
" நீங்க சொன்னா சரி தான் பா"
" பாத்தீங்களா சம்பந்தி. நான் சொன்னேன் நீங்க நம்பல. என் பிள்ளைங்கள நான் இப்படித்தான் வளர்த்து இருக்கேன். "
" நம்பாம என்ன சம்மந்தி. அதுங்க மனசுல ஏதாச்சும் ஒன்னு. நாளை கடக்க ஏதாச்சும் பிரச்சனை வந்துட கூடாது இல்லையா? சரி நீங்க எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் நாள் குறிச்சுட்டு எனக்கு சொல்லி அனுப்புங்க. அடுத்த முகூர்த்தமா இருந்தா கூட எங்களுக்கு ஓகே தான். அப்புறம் நாங்க ஒரு நல்ல நாள் பாத்து நிச்சயம் பண்ண வீட்டுக்கு வரோம். இப்போ கிளம்புறேன் சம்பந்தி. போயிட்டு வரேன் அம்மா. போயிட்டு வரேன் சம்மந்திமா" பொதுவாக அனைவரிடமும் விடை பெற்று சென்று விட்டார் அந்த பெரிய மனிதர்.
" நர்மதா. எப்படியோ பீடை என்ன விட்டு ஒழியற நாள் வந்துருச்சு. ஆனா உன் மகளுக்கு வந்த வாழ்வ பாத்தியா? ஆசியாவோட டாப் ட்ரீ குள்ள இருக்குற கார் ரேஸர் இவள கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறான். உலகத்துல இன்னும் அதிசயம் நடந்து கிட்ட தான் இருக்கு." அன்று மூன்றாவது முறையாக அதிர்ந்து நின்றாள் ஐஸ்வர்யா நந்தினி.